15.9.2024 நாளிட்ட ஏடுகளில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது – அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாகும்.
கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆடல், பாடல், விளையாட்டு, விருந்து என மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலக்கோடு மாவட்டம் கஞ்சிக்கோடு ஆலமரம் கொல்லப்புரைப் பகுதி மக்கள் பல்வேறு போட்டிகளை நடத்தினர்.
மாலை உணவுப் போட்டி ஒன்று நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு இட்லியை ஒரு பிடி பிடித்தனர்.
அதில் கலந்துகொண்ட அந்தப் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சுரேஷ் (வயது 50) தொண்டையில், இட்லி சிக்கிக் கொள்ள, மூச்சுக் குழலில் சிக்கி திக்கு முக்காடி, அப்படியே மயங்கி விழுந்தார்.
உடனே அவரை வாளையார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரைப் பரிசோதித்தபோது, அவர் ஏற்கெனவே மரணமடைந்து விட்டார் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
சில நாட்களுக்கு முன் கோவையில் அதிக பிரியாணி சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டது.
முதல் பரிசு ஒரு லட்சம் ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. சாப்பாட்டு ‘‘ராமர்கள்‘‘ குவிந்தனர்.
நல்ல வாய்ப்பாக தொண்டைக் குழியில் சிக்கி மூச்சுத் திணறி யாரும் மரணிக்கவில்லை.
பொதுவாக இதுபோன்ற போட்டிகளை அனுமதிக்கவே கூடாது.
கொஞ்சம் பகுத்தறிவைக் கொண்டு யோசித்தால், அவசர அவசரமாகச் சாப்பிடும்போது, இதுபோன்று உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படுவது தவிர்க்கப்படவே முடியாதது.
விளையாட்டு வினையாக முடியும் போட்டிகளை நடத்தக் கூடாது என்று அரசு ஆணை பிறப்பிப்பது சரியாகவே இருக்கும்.
உயிருக்கு உலை வைக்கும் கொடுமையை வருந்தி அழைக்கலாமா?
வியாபார நோக்கில் தம் உணவுக் கடையின் விளம்பரத்திற்காகப் பிரியாணி சாப்பிடும் போட்டி எல்லாம் அனுமதிக்கப்படவே கூடாது.
அரசின் முக்கிய கவனத்திற்குக் கொண்டு வருவது நமது கடமையே!
– மயிலாடன்