“எப்பொழுதுமே தீய சக்திகள் என்றால் நமக்குப் பயமாக இருக்கிறது.
அந்தக் காலத்தில் சொல்வார்கள். பாவிக்கு சோறு போட்டால் பாவம் வந்துவிடும் என்று.
இப்பொழுது நீங்கள் பார்த்தீர்களேயானால் குன்றக்குடியில் ஒரு பாவக் கும்பலுக்குச் சோறு போட்டதினால், யானைக் கொட்டகை தீப்பிடித் திருக்கிறது.
உண்டா, இல்லையா? இது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
நம் கோவில் யானை தீக்காயத்தோடு இருக்கிறது இன்றைக்கு. அப்படி இருப்பதற்குக் காரணம். இந்தத் தீய சக்தி வீரமணி அண்ட் கம்பெனிக்கு மடத்தில் சாப்பாடு போட்டதினால்தான். இவனுங்களுக்குச் சோறு போட்டால், பாவம் வரும் என்று இப்பொழுது தெரிகிறதா?
இது மூடநம்பிக்கையல்ல, நம்பிக்கை! நம்பிக்கை!!”
– இப்படி ஒரு சவுண்டி எழுதியுள்ளது. வேறு யாராகத்தான் இருக்கும்? “மன்னிப்புப் புகழ்‘‘ எச்.ராஜாதான்.
இரவல் பொறுப்பில் இருக்கும் போதே – இந்தத் திமிரடித்தனம் – ஒரிஜினலாகப் பொறுப்புக் கிடைத்து விட்டால் சிண்டும், பூணூலும் சலாம் வரிசை எடுத்திருக்கும்.
மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை திராவிடர் கழகம் காரைக்குடி யில் நடத்தியது.
மரியாதை நிமித்தமாக குன்றக்குடி மடத்துக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவரை அன்புடன் வரவேற்று விருந்தளித்து உபசரித்தார் இன்றைய தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள்.
தந்தை பெரியாரும் குன்றக்குடி மடத்துக்குச் சென்றதுண்டே – அப்பொழுதும் அன்றைய அடிகளார் விருந்தளித்து உபசரித்ததுண்டு.
காந்தியாரையே திண்ணையில் உட்கார வைத்து சோறு போட்ட திரிநூல் கூட்டத்துக்குப் பண்பாடாவது வெங்காயமாவது!
உண்மையை சொல்லப் போனால் இந்தப் பார்ப்பனர்களின் தர்மம் என்பது பிச்சை எடுத்து உண்பதுதான். இப்பொழுது கூட கும்பகோணத்தில், பிச்சைக்காரப் பார்ப்பனத் தெரு இருக்கிறதே!
தமிழர் தலைவர் மானமிகு வீரமணிக்கு குன்றக்குடி மடத்தில் விருந்தளித்து உபசரித்த காரணத்துக்காக குன்றக்குடி மடத்துக்குச் செந்தமான கோயில் யானை தீ விபத்தில் மரணம் அடைந்து விட்டதாம்!
‘இவனுங்களுக்கு சோறு போட்டால் பாவம் வரும் என்று இப்பொழுது புரிகிறதா?’ என்று சவுண்டி எழுதுகிறது.
என்ன மரியாதை பாருங்கள்… இவனுங்களுக்கு… இதைவிட மரியாதைக் குறைவாக இவர்களைப் பற்றி எழுதுவதற்கு எவ்வளவு நேரம் பிடிக்கும்?
கடைசி வரி என்ன தெரியுமா? இது மூடநம்பிக்கை யல்ல, நம்பிக்கை! நம்பிக்கை!! என்று கோரஸ் பாடுகிறது.
தன் மனதே தன்னைச் சுடுகிறது. இது மூடநம்பிக்கைதான் என்று ஒரு புறம் உறுத்துகிறது. அதன் காரணமாகத்தான் எங்களப்பன் எட்டாம் நம்பர் குதிருக்குள் இல்லை என்று பினாத்துகிறது இந்தச் சிண்டு.
திராவிடர் கழகத் தலைவருக்கு மடத்தில் விருந்தளித்ததால், மடத்து யானை தீ விபத்தில் இறக்குமாம்!
இதுவரை கோயில் யானைகள் விபத்தில் மரண மடைந்ததில்லையா? நோய் வாய்ப்பட்டும் செத்தது கிடையாதா?
கோயில் யானையை வைத்து கடைக்குக் கடை சென்று பிச்சை எடுக்க வைக்கும் கூட்டமா, கோயில் யானை தீ விபத்தில் இறந்தது பற்றிக் கவலைப்படுவது!
கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென்கலை நாமம் போடுவதா என்ற சர்ச்சை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பிரிவி கவுன்சில் வரை சென்று சிரிப்பாய் சிரிக்கவில்லையா?
மனிதாபிமானம் என்பது இவாளின் ஜெகத் குருக்களுக்கே இல்லாத போது இதுகளிடம் எதிர்பார்க்க முடியுமா?
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் அழைப்பின் பெயரில் தோழர் சின்னக்குத்தூசி அவர்கள் காஞ்சி சங்கர மடத்துக்குச் சென்றபோது (எழுத்தாளர் ஞானியும் உடன் சென்றிருந்தார்) அவரிடம் ஜெயேந்திர சரஸ்வதி என்ன சொன்னார்?
“கருணாநிதியை எடுத்துக் கொள்ளுங்கள், என்னைப் பற்றி எது வேண்டுமானாலும் சொல்லட்டும், நான் கேட்டுக் கொள்கிறேன். ஆனால், எனது மடத்தை அவர் ஏன் ஆபாசமாகப் பேசவேண்டும்? நான் வழிபடும் ஆண்டவனிடத்திலே அவருக்குத் தண்டனை அளிக்கும்படி முறையிட்டுக் கொண்டேன். அதன்படியே கருணாநிதியும் படுத்துண்டார்…” என்று சொன்ன… சிகாமணி தானே இவர்களின் குருநாதர்.
எது எதற்கெல்லாம் கடவுளை வேண்டுவார்கள் – கடவுள் என்னென்ன வேலையெல்லாம் செய்யக்கூடிய கல்நெஞ்சர் என்று அவாளின் லோகக் குருவே சாட்சியமாகி விட்டாரே!
95 வயது வரை வாழ்ந்து தான் கலைஞர் மறைந்தார் என்பது நினைவிருக்கட்டும்!
சங்கராச்சாரியாரைப் பற்றி வீரமணி விமர்சித்ததால்தான் வீரமணியின் பெரிய அண்ணன் நோய்வாய்ப்பட்டார் என்று சொன்ன பெரிய மனுஷனும் சாட்சாத் இதே சங்கராச்சாரியார்தான்.
மனிதாபிமானம் என்பது மருந்துக்கும் இல்லாத வகையறாக்கள் ஆயிற்றே!
“நாஸ்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே!” என்று சொன்னவர்தானே இவாளின் மஹா மஹா பெரியவாளான சந்திரசேகரேந்திர சரஸ்வதி (‘தெய்வத்தின் குரல்’, 3ஆவது பாகம், பக்கம் 148).
இந்தக் கெட்ட கேட்டில் இவர்கள் ஜெகத் குருக்களாம் – மஹா பெரியவாளாம் – மண்ணாங்கட்டியாம்!
ராஜாஜி மரணித்த போது தந்தை பெரியார் சுடுகாடு வரை சென்று கடைசி வரை இருந்து தேம்பித் தேம்பி அழுதாரே! “பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே!” அதுவரை தந்தை பெரியாரைத் திட்டித் தீர்ப்பதையே பிழைப்பாகக் கொண்ட சோ.ராமசாமி இந்த நிகழ்வைப் பற்றி குறிப்பிட்டு தந்தை பெரியாரின் பெருமனதை வானளவு துக்ளக்கில் புகழ்ந்து எழுதியதுண்டே.
தனது ஜென்ம விரோதி என்று ராஜாஜியால் வர்ணிக்கப்பட்டடவர் தந்தை பெரியார்.
அப்படிப்பட்ட ராஜாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது ஓடோடிச் சென்று பலமுறை பார்த்தவர் தந்தை பெரியார் ஆயிற்றே!
‘நானே கடவுள்’ (அஹம் பிரம்மாஸ்மி) என்று கூறும் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார், கலைஞர் வாழ்ந்த காலம் வாழ முடியாமல் போனது ஏன்? என்று இந்த விவரங்கெட்டவர்களை நோக்கிக் கேள்வி எழுப்பிட எவ்வளவு நேரம் பிடிக்கும்!
ஏழு நாட்கள் மட்டும் சங்கராச்சாரியாராக இருந்து மரணம் அடைந்தாரே ஒரு சங்கராச்சாரியார் – அது தெரியுமா இந்தக் கூட்டத்துக்கு.
குன்றக்குடி மடத்தில் வீரமணிக்கு விருந்தளித்து விட்டாராம் தவத்திரு பொன்னம்பல அடிகளார். அதனால்தான் கோயில் யானை தீ விபத்தில் சிக்கி மரணம் அடைந்ததாம்.
இவர்கள் தூக்கிச் சுமக்கும் சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சமபந்தி விருந்தைக் கண்டித்தவர்தான்.
“போஜனம் பண்ணும்போது நம்மோடு சாப்பிடுகிறவர்களின் குணதோஷங்களின் பிரமாணங்களும் நாம் சாப்பிடும் அனைத்திலும் ஓரளவு சேருகிறது. தோஷமுள்ளவர்கள் சாப்பிடும் போது பக்கத்தில் உட்கார்ந்திருப்பதாலேயே, அவர்களுக்குப் பந்தி முழுவதும் அசுத்தமாகி விடுகிறது” (தெய்வத்தின் குரல் 3ஆம் பாகம், 624ஆம் பக்கம்).
இத்தகைய மனிதகுல துவேஷியை எங்காவது கண்டதுண்டா?
சங்கராச்சாரியார் சொன்ன கருத்தை மனதிற்கொண்டு தான், குன்றக்குடி மடத்தில் தலைவர் ஆசிரியருக்கு விருந்தளித்ததை விமர்சித்துள்ளது ஒரு பூணூல்.
உணவு விடுதிகளில் சதா சமபந்தி தான் நடந்து கொண்டுள்ளது. அங்கே போய் இந்தப் பார்ப்பன சங்கிகள் மறியல் செய்வதுதானே!
மன்னிப்புப் புகழ் ராஜாக்கள் மரியாதையைக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்!