கொலை செய்வதில்கூட வருணப் பார்வையா?

viduthalai
2 Min Read

அரியானாவில் பசுவைக் கடத்தியவர் என்று நினைத்து பார்ப்பனப் பையன் ஒருவனை சுட்டுக்கொலை செய்த விவகாரம் தொடர்பாக கொலைகாரக் கும்பலின் தலைவரான அனில் கவுசிக்கை ஹீரோவாக காட்ட தொடர்ந்து அவன் குறித்த செய்திகளை வெளியிட்டு வருகின்றன – ஹிந்தி ஊடகங்கள்!

குற்றவாளிகளில் ஒருவரான அனில் கவுஷிக் காவலில் இருக்கும் போது அவரைச் சந்திக்கச் சென்ற கொலை செய்யப்பட்ட ஆரியனின் தந்தையின் காலைப் பிடித்து ‘‘நான் தவறு செய்துவிட்டேன். ஒரு பிராமணர் என்னால் கொல்லப்பட்டுவிட்டார். என்னைத் தூக்கில் போட்டாலும் எனக்கு வருத்தமில்லை எனது குடும்பத்திற்கு இந்த பாவம் சென்று சேரக்கூடாது’’ என்று அவர் தெரிவித்ததாகவும், ஆரியனின் தந்தை சியானந்த் மிஸ்ரா குறிப்பிட்டார்.
கொலைகாரனின் நண்பர்களுள் ஒருவரான புவனேஷ்வர் என்பவர் கூறும் போது –

‘‘பசுப்பாதுகாவலர்கள் தர்மத்தை காக்கப் பிறந்தவர்கள்; அவர்களைக் கண்டதும் ஜெய் சிறீராம் ஹர ஹர மகாதேவ் என்று கூறி இருந்தால் ஆரியனை அவர்கள் விட்டிருப்பார்கள். பிராமணப் பையன் கொல்லப்பட்டிருக்கமாட்டார்’’ என்று ஊடகத்தில் பேட்டி அளிக்கிறார்

தனது மகன் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அனில் கவுஷிக்கின் தாய் உறுதியாகக் கூறுகிறார். “மாடுகளுக்காக அவன் பல சேவைகள் செய்வான். காவல்துறை அழைக்கும் போதெல்லாம் மாடுகளைக் காப்பாற்ற அவன் சென்றிருக்கிறான்,” என்று தாய் கூறியுள்ளார்.

வேறு எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க மறுத்த அவர், “என் மகன் என்ன செய்தானோ அதற்கு கடவுள் நீதி அளிப்பார்,” என்று கூறினார்.

அனில் கவுசிக்கின் அண்டை வீட்டார் கூறும் போது, அனில் கவுஷிக் ஒரு பசுப் பாதுகாவலர் என்றும் பசுக்களைப் பாதுகாக்க நிறைய பணிகளைச் செய்துள்ளார் என்றும் தெரிவித்தனர்.

சொந்தப் பகையால் கொல்லப்பட்டார் என்று ஊடகங்களில் தொடர்ந்து பேட்டியளிக்க ஆரியன் நண்பர்களை அரசு மிரட்டியுள்ளது. இந்த மிரட்டலின் காரணமாக கொலை செய்யப்பட்ட ஆரியன் மிஸ்ரா கொலைக் குற்றவாளி ஒருவருடன் பயணித்தார் என்ற செய்தியைப் பரப்பி வருகிறார்கள்.

இதன் மூலம் பசுவிற்காகக் கொலை செய்யும் கும்பலைக் காப்பாற்ற அரசே எந்த அளவு முனைந்து செயல்படுகிறது என்பது தெரியவரும்

இதில் ஒன்றை முக்கியமாகக் கவனிக்கத் தவறக் கூடாது.
கொல்லப்பட்டவன் பார்ப்பனன் என்று தெரிந்திருந்தால் சுட்டுக் ெகான்றிருக்க மாட்டார்களாம் இந்தப் பசு காவலர்கள்!

இதன் பொருள் என்ன? கொல்லுவதில்கூட வருணம் தாண்டவமாடுகிறது. இதற்குப் பெயர்தான் பார்ப்பனீயத்தைத் தூக்கிப் பிடிக்கும் பா.ஜ.க.வாகும்.

பசுவைக் கடத்திய மாணவன் முஸ்லிம் என்று தாங்களாகவே நினைத்து சுட்டுக் கொன்று இருக்கிறார்கள்.
எந்த அளவுக்கு வடமாநிலங்களில் மதவெறி சூடு ஏற்றியிருக்கிறார்கள் என்பது புரியவில்லையா?
மனிதனைவிட மாட்டைக் காப்பாற்றும் அளவுக்கு மதவெறி சீழ்பிடித்த ஒரு கும்பல் அதிகாரத்தில் இருப்பதன் கோர விளைவுதானே இது.

இந்த நிலையை வளரவிடலாமா? வடக்கிலும் பெரியார் தேவைப்படுகிறார். திராவிட இயக்கச் சிந்தனைகள் பரவ வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இதற்கு மேலும் தங்களையும், தங்கள் அமைப்புகளையும் தர்மசீலமாகக் காட்டிக் கொள்கிறார்கள் என்றால், அவர்கள் கூறும் அந்தத் தர்மசீலம் என்பது எத்தகைய கொடூரமானது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *