தந்தை பெரியார் – அறிஞர் அண்ணாவுக்கு நீங்கள் எடுக்கும் விழா – வேருக்கு விழுதுகள் எடுக்கும் நன்றிப் பெருவிழா!
பழைமையை உரமாக்குங்கள் – புதுமையை உணவாக்குங்கள்!
ஜப்பான் தமிழர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
டோக்கியோ, செப்.16 ஜப்பானில் வாழும் தமிழர்களா கிய நீங்கள் தந்தை பெரியாருக்கும், அறிஞர் அண்ணாவுக்கும் எடுக்கும் இந்தப் பெருவிழா என்பது விழுதுகள் வேர்களுக்கு எடுக்கும் நன்றிப் பெருவிழா என்றும், பழைமையைத் தூக்கி எறிந்து, அவற்றை உரமாக்குங்கள்; புதுமையை உணவாக்குங்கள் என்றும் சிறப்புரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஜப்பான்- டோக்கியோவில் தந்தை பெரியார் – அண்ணா பிறந்த நாள் விழா!
நேற்று (15.9.2024) மாலை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழா – அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
திராவிடர்கள், இந்தியத் தமிழர்கள்
அத்துணை பேர் சார்பிலும்…
மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும், நெகிழ்ச்சி யோடும் நடைபெறக்கூடிய அற்புதமான சிறப்பான ஜப்பான் டோக்கியோ நகரில் நடைபெறக்கூடிய அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்த நாள் விழா – பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 ஆவது பிறந்த நாள் விழா ஆகிய விழாக்களை – திராவிடர்கள், இந்தியத் தமிழர்கள் அத்துணை பேர் சார்பிலும் மிகச் சிறப்பான வகையில் கொண்டாடிக் கொண்டிருக்கக் கூடிய இந்த அருமையான நிகழ்ச்சியை இங்கே சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் சார்பில் சிறப்பாக நடத்தக்கூடிய இந்த நிகழ்ச்சியில், அண்ணா அவர்களுடைய அற்புதமான கனவுகள் எப்படிப்பட்டவை என்பதை ரத்தினச் சுருக்கமாக நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா அவர்கள், சுருக்கமாகவும் சிறப்பாகவும் உரையாற்றினார்.
எனக்கு இருப்பதுபோன்று சுதந்திரம் அவர்களுக்கு கிடையாது. ஏனென்றால், இங்கே உட்கார்ந்து கொண்டி ருக்கின்றவர்கள் சில மணித்துளிகளிலேயே பேசி, பேசி பழக்கப்பட்டவர்கள்.
ஆனால், நல்ல வாய்ப்பாக இங்கே மணி நெருக்கடி கிடையாது; ஆனால், மணி பார்ப்பது உண்டு. எந்த நேரத்திற்குள் எதைச் செய்யவேண்டும்; எப்படி செய்ய வேண்டும்? என்பதற்காக மணியைப் பார்க்கவேண்டும்.
அனைவருக்கும் தலைதாழ்ந்த வணக்கம் – நன்றி!
இந்த நேரத்தில் உங்களையெல்லாம் சந்திப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சியடைகின்ற இந்த நேரத்தில், அனைவருக்கும் தலைதாழ்ந்த வணக்கம் – நன்றி கலந்த வணக்கம்.
உங்களைப் பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி! யாரோ ஒரு விருந்தினன், உங்கள் அழைப்பை ஏற்று இங்கே வந்து பேசக்கூடியவனாக இல்லை. உங்களுடைய உறவுக்காரன் – உங்களைப்பற்றி கவலைப்படக் கூடியவன் – உங்களில் ஒருவனாக இருந்து, இந்த சமுதாயத்தில் எங்கே இருந்தாலும், நீங்கள் சிறப்பாக வாழவேண்டும் – பாதுகாப்பாக வாழவேண்டும் – மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழவேண்டும் என்று சொல்லக்கூடிய ஒரு சாதாரண பெரியார் தொண்ட னாக உங்களைச் சந்திக்கின்ற இந்த நேரத்தில், எப்படி நன்றி சொல்வது இந்த விழாவிற்காக என்று எங்களால் சொல்ல முடியவில்லை.
இங்கே நான் சகோதரர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.
நீங்கள் எவ்வளவு சிறப்பானவர்கள் என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறீர்கள்!
தமிழ்நாட்டில்கூட, பல பெரும் விழாக்களுக்குத் தமிழ்நாடுதான் பண்பாட்டுத் தலைநகரம். ஆனால், அங்கே கூட இந்த விழாக்கள் நடைபெறுகிறபொழுது, இவ்வளவு கட்டுப்பாடோடு, இவ்வளவு சிறப்போடு, இவ்வளவு புகழோடு, மனநிறைவோடு நடைபெறாது. இதிலும் நீங்கள் எவ்வளவு சிறப்பானவர்கள் என்பதை எடுத்துக்காட்டியிருக்கிறீர்கள். அதற்காக எங்களுடைய அன்பான நன்றி!
உங்களுக்கு இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் நன்றி சொல்லலாம்!
தொல்லுலக மக்கள் எல்லாம்
நம்முடைய மக்கள் என்ற உணர்வோடு….
இந்த நாட்டு மொழியை நீங்கள் கற்று, சிறப்பாக மிகப்பெரிய அளவில், இன்றைக்கு இந்த நாட்டிற்கும், இந்த சமூகத்திற்கும் நீங்கள் தொண்டு செய்கிறீர்கள். வெறும் பணியாற்றக்கூடியவர்கள் என்று சொல்லவேண்டியதில்லை. இந்த சமூகத்திற்குப் பணி என்று உணர்வு இருக்கின்ற காரணத்தினால்தான், தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வீடு என்கிற சின்னதோர் கடுகு உள்ளம்போல் இல்லாமல், தொல்லுலக மக்கள் எல்லாம் நம்முடைய மக்கள் என்ற உணர்வோடு, எல்லா மக்களும் இருக்கவேண்டும் என்கிற வாய்ப்பைப் பெறுகிறோம்.
‘‘ஒஹாயோ கொசைஸ்மாஸ்’’
ஜப்பானிய மொழியில் வணக்கம்!
அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வணக்கம் சொல்லுகிறேன். உறவோடு ஒஹாயோ கொசைஸ்மாஸ்.
(வணக்கம் என்று ஜப்பானிய மொழியில் சொன்னார்.)
ஜப்பானிய மொழியில் ஏதோ ஒரு வார்த்தை யைச் சொல்லிவிட்டுப் போனார் என்பதைவிட, நம்முடைய தமிழ் உணர்வை, இந்த நாட்டில் இருந்து அண்மையில் மறைந்தவராக இருக்கக்கூடியவர் நம்முடைய பேராசிரியர் ஆய்வாளர் நொபொரு கரோஷிமா.
இந்தப் பல்கலைக் கழகத்தில் இருந்து தமி ழுக்காக மிகப்பெரிய அளவிற்குத் தொண்டு செய்த வர். அவருடைய மறைவிற்குத் தமிழ்நாட்டில் நாங்கள் எல்லாம் மிகப்பெரிய அளவிற்கு இரங்கலைத் தெரிவித்தோம்.
ஆய்வாளர் நொபொரு கரோஷிமா
ஏனென்றால், நொபொரு கரோஷிமா முதற்கொண்டு, தமிழ் செம்மொழி என்பதை உணர்ந்து இன்றைக்கு நாம் பேசிக் கொண்டிருக்கின்றோமோ, அதனுடைய வளம் எப்படிப்பட்டது? ஆழமும், பண்பாடும் எப்படிப்பட்டது என்பதை அவர் எடுத்துக்காட்டினார்.
அவர்கள் இந்த நாட்டிலே பிறந்து, ஜப்பானிய மொழியைப் பேசக்கூடியவராக இருந்தாலும், தமிழ் மொழியினுடைய வளத்தைப் பேசியிருக்கின்றார் என்றால், நம்முடைய மொழி எந்த அளவிற்கு, எல்லைகளையும் கடந்து நிற்கிறது. எல்லைகளைக் கடந்தது மட்டுமல்ல, உலகத்திற்கே வழிகாட்டக் கூடிய அளவிற்கு, உலக ஆய்வாளர்கள் எல்லாம் ஆய்வு செய்யக்கூடிய அளவிற்கு வந்திருக்கின்றார்கள் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறார்.
அப்படிப்பட்ட ஒருவர் பிறந்த மண்ணிற்கு வருகிறபொழுது, இங்கே சொன்னாரே நம்முடைய பெருமதிப்பிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களை அறிமுகப்படுத்தினாரே கமலக்கண்ணன் அவர்கள்; அதேபோல, செந்தில்குமார் அவர்கள் என்னை அறிமுகப்படுத்தும்பொழுது சொன்னார்கள், 35 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வரும்பொழுது என்ன சூழல்நிலை என்பதை. ஆனால், 35 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், இப்படிப்பட்ட ஒரு வரவேற்பை நான் பெறுவேன் என்று ஒருபோதும் நினைத்திருக்கமாட்டேன்.
பெரியாரும், அண்ணாவும் என்ன செய்தார்கள்? என்ற கேள்விக்கு அதுவே பதில்.
அதைவிட மிகவும் மகிழ்ச்சி என்னவென்றால், இங்கே பிள்ளைகள் மிருதங்கம் வாசித்து ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு பிள்ளைகளும் இங்கே கருவியிசை. நம்மு டைய பிள்ளைகள், அந்தப் பாடல்களுக்கு நடனம் ஆடினர்.
தன்மான இயக்கம் தந்திருக்கின்ற
மிகப்பெரிய ஒரு படிப்பு!
ஒரு காலத்தில் நம் பிள்ளைகளை படிக்காதே, உனக்குப் படிப்பு வராது, நீ கீழ்ஜாதி, நீ தொடக்கூடாத ஜாதி, எட்டி நில் என்றெல்லாம் சொல்லி சொல்லி, ஒதுக்கி வைத்திருந்த ஒரு சமுதாயத்தில், வாய்ப்புக் கொடுத்தால், எங்களால் முடியும்; எங்களால் எதுவும் செய்ய முடியும். நாங்கள் எவருக்கும் இளைத்தவர்கள் அல்ல, சளைத்தவர்கள் அல்ல – நாங்கள் வெற்றி பெற்று காட்டுவோம் என்று சொல்லக்கூடிய அந்த உணர்வு, தன்னம்பிக்கை இருக்கிறதே, அதுதான் தன்மான இயக்கம் தந்திருக்கின்ற மிகப்பெரிய ஒரு படிப்பு!
அந்தத் தன்மான உணர்வுடைய சின்னங்களாக இன்றைக்கு நம்முடைய பிள்ளைகளைப் பார்க்கிறோம்.
பெரியாருடைய சமூகப் பார்வை என்ற தலைப்பை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
தனக்கான பார்வையே கிடையாது;
எல்லாமே சமூகப் பார்வைதான்!
தந்தை பெரியாருக்கு எப்பொழுதும் தனக்கான பார்வையே கிடையாது. எல்லாமே சமூகப் பார்வைதான்.
இவ்வளவுக் கடினப்பட்டு, உழைத்து, ஒரு நல்ல அளவிற்கு குடும்ப ரீதியாக இங்கே வந்திருக்கிறீர்கள்.
ஒரு காலத்தில், நம்மவர்கள் வெளியே போனார்கள் என்றால், அவர்கள் எப்படிப் போயிருப்பார்கள் என்றால், தோட்டத் தொழிலாளிகளாக அனுப்பப்பட்டவர்கள்.
கங்காணிகள் நம்மை அழைத்துப் போனார்கள். அவர்களுக்கு விடியலே கிடையாது என்று இருந்த காலகட்டம். இன்றைக்கு அப்படி அல்ல. அறிவுத் துறையில் மற்றவர்களுக்கு நாங்கள் யாரும் சளைத்த வர்கள் அல்ல. எங்களால் நிர்வாகத்தை நடத்தக்கூடிய அளவிற்கு படித்தவர்களாக இருக்கிறோம்; திறமை உள்ளவர்களாக இருக்கிறோம்; பணியாற்றக் கூடிய வர்களாக இருக்கிறோம்.
பெரியார், அண்ணா ஆகியோர்
செய்த சாதனை!
எங்கள் பிள்ளைகள், மருத்துவர்களாக, பொறியாளர்களாக, தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களாக இருக்கிறார்கள் என்று சொன்னால், அதுதான் பெரியார், அண்ணா ஆகியோர் செய்த சாதனையாகும்.
எனவேதான், பெரியார் பிறந்த நாள் விழா, அண்ணா பிறந்த நாள் விழா என்ற இந்த விழாவிற்கு வேறொரு பெயரைச் சொல்லவேண்டுமானால், விழுதுகள், வேர்களுக்கு நன்றித் திருவிழாவாக நடத்திக் கொண்டிருக்கின்றன.
அதுதான் மிக முக்கியமான ஓர் அரிய வாய்ப்பு.
அதைவிட இன்னொரு மகிழ்ச்சியான நன்றியைச் சொல்லவேண்டும் உங்களுக்கு.
நிறைய மகளிர், குடும்பம் குடும்பமாகத் தோழர்கள் இங்கே வந்திருக்கிறீர்கள்.
நான் இந்த நாட்டிற்கு வருவதற்கு மிகப்பெரிய அளவிற்கு ஒரு வாய்ப்பைப் பெற்றிருக்கின்றேன். நீங்கள் இந்த வாய்ப்பைத் தந்திருக்கிறீர்கள். இது எவ்வளவு பெரிய மகிழ்ச்சி!
இங்கே ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய தொகுப்பாளர் அய்ஸ்வர்யா அவர்கள், மிக அற்புதமாக பெரியார் அவர்களைப்பற்றியும், அண்ணா அவர்க ளைப்பற்றியும், இங்கே சொன்னபொழுது, இதை யெல்லாம் ஒரு காலத்தில் கேட்போமா என்று நினைத்த நேரத்தில்தான், நீங்கள் என்னுடைய வயதை நினைவூட்டினீர்கள்.
91 வயது, 91 வயது என்று நீங்கள் சொல்வது, வயது கணக்கு. உழைப்பதற்கு அல்ல, உற்சாகப்படுத்துவது!
இவ்விழா முடிந்து திரும்பும்பொழுது
எனக்கு வயது 19
ஆனால், நீங்கள் தவறாகச் சொல்லவில்லை, சரியாகத்தான் சொன்னீர்கள். நான் இந்த விழாவிற்கு வரும்பொழுது எனக்கு வயது 91. இவ்விழாவில் உங்கள் மகிழ்ச்சியைப் பார்க்கும்பொழுது, இவ்விழா முடிந்து திரும்பும்பொழுது எனக்கு வயது 19.
காரணம் என்னவென்றால், நீங்கள் சிறப்பாக இந்த நாட்டில் வாழவேண்டும். மற்றவர்களை வாழ வைக்கக்கூடிய ஒத்துழைப்பைச் செய்யவேண்டும்.
நம்முடைய பண்பாடு என்பது இருக்கிறதே, நாம், நாடு, அரசியலால் வேறுபடலாம்; எல்லைகளால் வேறுபடலாம்.ஆனால், பண்பாட்டால் நாம் ஒன்றி ணைக்கப்பட்டு இருக்கின்றோம், எந்த இடத்தில் இருந்தாலும்!
அந்தப் பண்பாடு சாதாரணமான பண்பாடு அல்ல – யாதும் ஊரே, யாவரும் கேளிர் எனும் பண்பாடு!
‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!”
‘‘யாவரும் கேளிர்” என்றொரு சமுதாயம் – அந்த நேரத்தில், ‘‘யாவரும் கேளிர்” என்று வாழ்ந்த ஒரு சமுதாயத்தில், ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று சொல்லவேண்டிய அவசியம் வள்ளுவருக்கு ஏன் வந்தது?
இங்கே செந்தில்குமார் அவர்கள் வரவேற்புரையில் அழகாக தொட்டுக் காட்டினார்.
வள்ளுவர்செய் திருக்குறளை
மறுவறநன் குணர்ந்தோர்
உள்ளுவரோ மநுவாதி
ஒருகுலத்துக் கொருநீதி
என்று சொன்னார்.
பெரியாருடைய சமூகப் பார்வை என்பது,
மானுடப் பார்வை!
இன்னாருக்குத்தான் படிப்பு வரும். இன்னார்தான் உயர்ந்த ஜாதி. இன்னொருவர் தொடக்கூடாதவர், பார்க்கக் கூடாதவர் என்பதை உலகத்திலேயே வேறு எங்கும் நினைத்துப் பார்க்க முடியாது.
பெரியாருடைய சமூகப் பார்வை என்பது, மானுடப் பார்வை. அவர் சொன்னார், எனக்கு ஒரே பற்று – மனிதப் பற்று! மனிதர்கள் வாழவேண்டும். மனிதர்கள் சமத்துவத்தோடு வாழவேண்டும்; சகோதரத்துவத்தோடு வாழவேண்டும் என்ற பற்றுதான் தந்தை பெரியாருடையது!
அனைவருக்கும் அனைத்தும் –
இதுதான் சமூகநீதி!
நாங்கள் எல்லாம் என்ன பணி செய்தோம் என்றெல்லாம் இங்கே சொன்னார்கள் அல்லவா – அப்படிப்பட்டவர்கள் படித்து இங்கே வந்திருக்கிறீர்கள்; பெரியாருடைய சமூகப் பார்வை அனைவருக்கும் அனைத்தும் – இதுதான் சமூகநீதி!
அனைவருக்கும் அனைத்தும் – நேரம் அதிகம் இல்லை – சுருக்கமாக சொல்கிறேன். பெரும்பாலும் தமிழ்நாட்டிலிருந்து வந்த தோழர்கள், நம்முடைய சகோதரர்கள், மகளிர் சகோதரிகள் எல்லோரும் இருக்கிறீர்கள்.
நாமெல்லாம் உள்ளே வரக்கூடாது என்று கருதக்கூடிய ஒரு காலகட்டம். அப்படிப்பட்ட ஒரு நிலையைத் தாண்டி, உங்கள் மத்தியில், நான் ஒரே ஒரு கேள்வியை உங்களிடம் ஒரு வேண்டுகோளாக வைக்க விரும்புகின்றேன்.
அது என்னவென்று சொன்னால், அங்கே இருந்து புலம்பெயர்ந்து வந்திருக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் பல திருப்பங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்
அப்துல்லா எம்.பி., அவர்கள்!
நம் நாட்டு மக்கள், இந்தியர்கள் அத்துணைப் பேருடைய உரிமைகளைக் காப்பதற்காக மிகப்பெரிய அளவிற்கு, பல முயற்சிகளை எடுத்து, நாடாளுமன்றத்தில் பல திருப்பங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார் அப்துல்லா அவர்கள்.
பெரியாருடைய சமூக அமைப்பைப்பற்றி நிறைய சொல்லலாம். மனிதர்களுக்குள் பிறவிப் பேதம் கூடாது என்பதற்காக சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கினார். இந்த ஆண்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டை கொண்டாடவிருக்கின்றோம்.
அந்தப் பிறவி பேதத்தை எல்லாம் நீக்கினார். பிறவிப் பேதம் என்று சொல்லும்பொழுது, ஒருவன் முகத்தில் பிறந்தவன், ஒருவன் தோளில் பிறந்தவன், ஒருவன் காலில் பிறந்தவன், ஒருவன் தொடக்கூடிய ஜாதி – இன்னொருவன் தொடக்கூடாத ஜாதி. ஒருவன் படிக்கக்கூடியவன் – இன்னொருவன் படிக்கக் கூடாதவன் என்றெல்லாம் இருக்கக்கூடாது.
எல்லோருக்கும் சம வாய்ப்பு, சமத்துவம் வர வேண்டும் என்று சொன்னார்.
மனிதர்களுக்குள் பேதம் இருக்கக்கூடாது!
நாம் அத்துணைப் பேரும் மனிதர்களாகக் கருதப்படவேண்டுமே தவிர, அதில் பேதம் இருக்கக்கூடாது என்பதுதான் தந்தை பெரியார் அவர்களுடைய எண்ணம்.
பெரியார் அவர்கள், சமத்துவத்திற்காகப் போரா டும்பொழுது, பிறவி பேதத்திற்கு ஒரு விளக்கம் சொன்னார்.
இங்கே மகளிர் நிறைய பேர் வந்திருக்கிறீர்கள். தாய்மார்கள் வந்திருக்கிறீர்கள். மிகவும் பாராட்டவேண்டிய விஷயம். நீங்கள் ஆர்வத்தோடு வந்திருக்கிறீர்கள்.
தந்தை பெரியார் அவர்கள் பிறவி பேதத்தைச் சொல்லும்பொழுது, உயர்ஜாதி – தாழ்ந்த ஜாதி என்று பிரித்து வைத்திருக்கிறார்களே, உலகில் எங்கும் இல்லாத கொடுமை நம்முடைய நாட்டில். தொட்டால் தீட்டு என்று சொல்லி, குளிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.
தமிழ்நாட்டைத் தவிர, வேறு எந்த நாட்டிலும் இது போன்ற நிலை கிடையாது. இப்படி ஒன்று இருக்குமா? என்று வெளிநாட்டவர்கள் நம்ப மறுக்கிறார்கள்.
தீண்டாமை – தொடக்கூடாதவர்கள்.
தொடக்கூடாதது மின்சாரம்தான். ஆனால், மனிதர்களைத் தொடக்கூடாதவர்கள் – தீண்டாதவர்கள் என்று சொல்கிறார்கள்.
அதைவிட, பார்க்காமை – இதைக் கேட்டு அமெரிக்கா போன்ற மற்ற நாடுகளில் ஆச்சரியப்படுகிறார்கள்.
அந்த நோய், உங்கள் நாட்டிலே வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இவ்விழா!
அதை நம்முடைய ஆட்கள், வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து செல்கின்றவர்கள், அதைப் பத்திர மாகத் தூக்கிக் கொண்டு போகிறார்கள். எதை விட்டுவிட்டுப் போகவேண்டுமோ, எதைக் கடலிலே தூக்கி எறியவேண்டுமோ, எதைக் குப்பைத் தொட்டிக்கு அனுப்பவேண்டுமோ – அதையெல்லாம் சிம்மாசனத்தில் கொண்டு போய் வைக்கிறார்கள் என்று சொல்லும்பொழுது வேதனை – அந்த நோய், உங்கள் நாட்டிலே வந்துவிடக் கூடாது என்பதற்குத்தான், பெரியார் – அண்ணா விழாவை கொண்டாடுகிறார்கள்.
இந்த நாட்டில் என்னங்க பெரியார் விழா?
இந்த நாட்டில் என்னங்க அண்ணா விழா?
என்று சில பேர் கேட்கலாம். அவர்களுக்கு நான் சொல்கிறேன், இந்த நாட்டில் உள்ளவர்களுக்கும் நோய்த் தடுப்பு என்பதுதான் பெரியார், அண்ணா.
ஜாதியை இப்பொழுது ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறார்கள்!
ஒரு நாட்டில் தொற்று நோய் ஆரம்பித்தால், அது பன்றிக் காய்ச்சலாக இருக்கட்டும், பறவைக் காய்ச்சலாக இருக்கட்டும் அல்லது கோவிட் தொற்று நோயாக இருக்கட்டும். ஒரு நாட்டில் வந்தால், அதோடு நின்று போய்விடுவதில்லை. உலகம் ஒன்றாக இருக்கிறது என்பதால், ஒரு நாட்டிலிருந்து, இன்னொரு நாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறார்கள். அதேபோன்று, ஜாதியை இப்பொழுது ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறார்கள்.
இங்கே மனுதர்மத்தைப்பற்றி ஏன் பேசுகிறார்கள் என்று சிலர் நினைக்கலாம்.
ஆனால், இன்றைக்கு, அந்த ஜாதி குறித்து, ஆஸ்திரேலியாவில் வழக்கு – கம்ப்யூட்டர் படிப்புப் படித்து, தகவல் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய அறிஞர்களாக, ஏராளமான சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கக்கூடிய நண்பர்களைப் பார்த்து, தகுதி உள்ளவர்களைப் பார்த்து, இல்லை உங்களுக்குத் தகுதி இல்லை என்று சொல்லி அங்கே வழக்குப் போடுகிறார்கள். அமெரிக்காவிலேயும் தகராறு!
ஆஸ்திரேலியாவில் உள்ள பெரியார் – அம்பேத்கர் வட்டம் அமைப்பின் சார்பில், என்னையும், மற்ற நண்பர்களையும் அழைத்தார்கள். காணொலி மூலமாக நாங்கள் உரையாற்றும்பொழுது, அவர்கள் சொன்னார்கள், இங்கே வழக்கு நடந்துகொண்டிருக்கின்றது; நாங்கள் எல்லாம் ஒரு பெரிய அளவிற்கு வந்தாலும், இங்கேயும் ஜாதிக் கொடுமை இருக்கிறது என்று சொன்னார்கள்.
சாதிக்கும் சங்கத்தை உருவாக்குங்கள்;
ஜாதிச் சங்கங்களை உருவாக்காதீர்கள்!
எனவே, நீங்கள் அற்புதமாக இவர்களை ஒருங்கி ணைத்திருக்கிறீர்கள்.
சாதிக்கும் சங்கத்தை உருவாக்குங்கள்; ஜாதிச் சங்கங்களை உருவாக்காதீர்கள். சாதிக்கும் சங்கம் – அதுகூட சங்கங்களாக இருக்கக்கூடாது; சங்கமாக இருக்கட்டும்.
ஏனென்றால், இங்கே நீங்கள் வந்திருக்கிறீர்கள்; நம்மால் முடியும் என்று காட்டியிருக்கிறீர்கள். பிள்ளை களுக்குத் திறமை இருக்கிறது என்று காட்டியிருக்கிறீர்கள்.
உங்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன். இங்கே வந்திருக்கின்ற தாய்மார்கள், சகோதரிகளைப் பார்த்துக் கேட்கிறேன். இவர்கள் எல்லாம் படித்திருக்கிறார்கள்; பணியாற்றக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இங்கேயும் தங்களுடைய அறிவை விரிவு செய்யக்கூடிய அளவிற்கு அவர்கள் பணியாற்றுகிறார்கள்.
அவர்களில், இங்கே வந்திருக்கின்ற நண்பர்கள் உள்பட ஒரே ஒரு கணக்கு என்னவென்றால், முதல் தலைமுறையாக வந்திருக்கின்றோம் என்று சொல்பவர்கள் மட்டும் கையைத் தூக்குங்கள்.
எத்தனைப் பேர் என்பதை எண்ணிப் பாருங்கள்.
நன்றி!
நண்பர்களே, அடுத்து, உங்களுடைய பாட்டி, எஸ்.எஸ்.எல்.சி.,க்கு மேலே, கல்லூரிக்குப் போய் படித்தவர்கள் எத்தனை பேர் உங்கள் குடும்பத்தில்?
பெண்கள், ஆண்கள் இரண்டு பேரையும் சேர்த்துத்தான் கேட்கிறேன்.
யாருமே இல்லையா? ஒரே ஒருவர் இருக்கிறார்.
எத்தனை பேருடைய அப்பா கல்லூரிக்குச் சென்றி ருக்கிறார்?
எத்தனை பேருடைய அம்மா கல்லூரிக்குச் சென்று படித்திருக்கிறார்?
25 பேர்.
நன்றாக நினைவில் கொள்ளுங்கள் – கல்லூரிக்குச் சென்ற பாட்டி ஒரே ஒருவர்.
மற்றவர்கள் 25 பேர்.
இங்கே வந்திருக்கின்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அனைவரும் படித்திருக்கிறீர்கள், பணியாற்றுகிறீர்கள்.
இதுதான் சமூகப் பார்வை – இதுதான் பெரியார் சொன்னார் – இதுதான் அண்ணா சொன்னார். இதுதான் சமூகநீதி – இதுதான் அனைவருக்கும் அனைத்தும்.
எவ்வளவு சோதனைகள் வந்தாலும், அதனை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் ஜப்பானியர்களுக்கு உண்டு!
ஜப்பான் டோக்கியோவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை: 4 ஆம் பக்கத் தொடர்ச்சி..
தமிழர் தலைவர் ஆசிரியரின் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (ஜப்பான், டோக்கியோ 15.9.2024)
பாட்டிக்கு அறிவில்லையா?
பேத்திக்கு மட்டும்தான் அறிவு உண்டா?
ஏன், நம்முடைய பாட்டி படிக்கவில்லை. பாட்டிக்கு அறிவில்லையா? பேத்திக்கு மட்டும்தான் அறிவு உண்டா?
பாட்டியைப் பார்த்துத்தான் அனுபவத்தில் பல விசயங்களை நாம் தெரிந்துகொள்கிறோம்.
பெண்களுக்குப் படிப்பு கொடுக்கக் கூடாது என்பது மட்டுமல்ல நண்பர்களே, ஜாதி முறையில் கொண்டு வந்து அவர்களைப் படிக்கக் கூடாது என்றாக்கினார்கள்.
‘‘மானமும் அறிவும் மனிதருக்கு அழகு!’’
பெரியார் அவர்கள் சமூகப் பார்வை – மானுடப் பார்வை – ‘‘மானமும் அறிவும் மனிதருக்கு அழகு” என்று சொன்னார்.
அழகு என்று சொல்வது, சாதனத்தில் அல்ல. அழகு என்பது அறிவு. சாதாரண அழகு என்பது ஒப்பனை. அது வயதானால் காணாமல் போய்விடும்.
ஒருவர் சொல்வார், நீங்கள் முன்பு வரும்பொழுது, சுருள் சுருளாக முடி இருந்து அழகாக இருந்தீர்கள் என்று. வயதாக வயதாக அந்த அழகு இருக்காது.
ஆனால், அழகு என்பது பெரியாரின் பார்வையில், ‘‘மானமும் அறிவும் மனிதருக்கு அழகு” என்றார். இதைத்தான் அவர் சமூகப் பார்வையோடு சொன்னார்.
எனவே, நீங்கள் சிறப்பாக வாழுகின்ற நேரத்தில், சமூகத்திற்காக வாழுங்கள். மானுடப் பற்று வேண்டும்.
எந்த நாட்டில் வாழுகிறோம் என்பது முக்கியமல்ல – எல்லா நாடுகளில் பிரச்சினைகள் வரும் – எல்லா நாட்டிலும் மூடநம்பிக்கைகள் இருக்கும். ஆனால், பகுத்தறிவை முழுக்க முழுக்க மனிதன் பெற்றிருக்கின்றான்.
கற்றுக்கொண்டு போக நாங்கள் வந்திருக்கின்றோமே தவிர, பெற்றுக்கொண்டு போக வரவில்லை!
இந்த நாட்டிற்கு வரும்பொழுது எனக்கு மகிழ்ச்சி என்னவென்றால், நல்ல வாய்ப்பை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். இந்த நாட்டினுடைய பண்பாடு என்பது இருக்கிறதே – நிறைய கற்றுக்கொண்டு போக நாங்கள் வந்திருக்கின்றோமே தவிர, பெற்றுக்கொண்டு போக வரவில்லை.
கற்றுக்கொள்ளவேண்டும் இந்த நாட்டிலிருந்து – இந்தப் பண்பாடு, இந்த அடிப்படை – அதைவிட, ஏற்றுக்கொண்டு இருப்பதை எதிர்கொள்வது.
பெரியாருக்கும் – ஜப்பானுக்கும் தத்துவ ரீதியாக நிறைய ஒற்றுமைகள் உண்டு.
எவ்வளவு சோதனைகள் வந்தாலும், அதனை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் உண்டு!
என்னவென்றால், எவ்வளவு சோதனைகள் வந்தாலும், அதனை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் ஜப்பானியர்களுக்கு உண்டு.
என்னை நண்பர்கள் அழைத்துக்கொண்டு மிகப்பெரிய டவர், மிகப்பெரிய புத்தர் சிலையைக் காண்பித்தனர். அடிக்கடி நிலநடுக்கம் வருகின்ற நாட்டில், இப்படி மிகப்பெரிய அளவிற்கு டவர், புத்தர் சிலையைக் கட்டுவதற்குத் துணிச்சல் வருமா?
தன்னம்பிக்கைதான் மனித வாழ்க்கையினுடைய முன்னேற்றத்திற்கு முக்கியம்!
ஆனால், அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. அடுத்தடுத்து கட்டுவோம் என்று சொல்லக்கூடிய அவர்களுடைய தன்னம்பிக்கை இருக்கிறது பாருங்கள், அந்தத் தன்னம்பிக்கைதான் மனித வாழ்க்கையினுடைய முன்னேற்றத்திற்கு முக்கியமானதாகும். இதைத்தான் தந்தை பெரியார் சொன்னார்.
ஒரு தனி மனிதனால், ஜாதியை ஒழிக்க முடியுமா?
தனி மனிதனால் பெண்ணடிமைத்தனத்தை நீக்க முடியுமா? என்று நினைத்திருந்தால், இந்த இயக்கம் வளர்ந்திருக்காது; நீங்கள் எல்லாம் இங்கே வந்திருக்க முடியாது; நாங்கள் எல்லாம் இங்கே வந்திருக்க முடியாது.
ஆனால், ஒரு தனி மனிதனால் செய்ய முடியும் என்று சொன்னார். பெரியாருடைய சிந்தனை, சமூகப் பார்வையோடு அவர் சொன்னார்.
‘‘யார் சொல்வதையும் நம்பாதீர்கள்!’’
தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய கடைசி காலத்தில்கூட தன்னுடைய உரையைத் தொடங்கும்பொழுது சொல்வார். அதைத்தான் நானும் அவருடைய தொண்டன் என்ற முறையில் சொல்கிறேன்.
‘‘யார் சொல்வதையும் நம்பாதீர்கள்” என்று சொல்லித்தான் தன்னுரையைத் தொடங்குவார்.
உடனே கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து கேள்வி கேட்டார்.
என்னங்க, யார் சொல்வதையும் நம்பாதீர்கள் என்று சொல்கிறீர்களே, ஆனால், நம்பு, நம்பு நம்பு என்று சொல்கிறார்கள்; இல்லாவிட்டால், நரகத்திற்குப் போவீர்கள் என்று சொல்கிறார்களே? என்று.
சுயமரியாதையைச் சொல்லிக் கொடுத்த
சூரியன் தந்தை பெரியார்!
இப்படி அச்சுறுத்தி, பயமுறுத்தியே மக்கள் மத்தியில் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கிக் கொண்டி ருக்கின்ற இடத்தில், மனிதனுக்கு சுயமரியாதையைச் சொல்லிக் கொடுத்த அந்த சூரியன்தான் தந்தை பெரியார் அவர்கள்.
அதை அப்படியே ஆட்சியில் காட்டியவர்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள். அதைத்தான் முத்தமிழறிஞர் கலைஞர் செய்தார்; அதைத்தான் இன்றைக்குத் திராவிட இயக்கம் செய்கிறது; திராவிட மாடல் ஆட்சி செய்கிறது.
எங்களுக்காக அல்ல நண்பர்களே, இது உங்களுக்காக.
பகுத்தறிவைப் பரப்புவது சாதாரணமானதல்ல! எவ்வளவு கல்லடி, சொல்லடி – சங்கடங்கள். தந்தை பெரியார்மீது செருப்பைத் தூக்கிப் போட்டார்கள். மற்றவர்கள் என்றால், ஆத்திரப்பட்டு இருப்பார்கள். ஆனால், தந்தை பெரியார் அவர்கள், கோபப்படாமல் சொன்னார், ஒரு செருப்பைத்தானே போட்டிருக்கிறார்கள்; அவர்களுக்கும் பயனில்லை; நமக்கும் பயனில்லை என்று சொல்லி, மீண்டும் ரிக்ஷாவை திருப்பச் சொல்லி, பெரியார் அவர்களைப் பார்த்ததும், இன்னொரு செருப்பையும் வீசினார்கள்; அதையும் பத்திரமாக எடுத்துக்கொண்டு வந்தவர்தான் தந்தை பெரியார் அவர்கள்.
முட்டையில் மலத்தை நிரப்பி
பெரியார்மீது வீசினார்கள்!
பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபொழுது, முட்டையில் மலத்தை நிரப்பி அவர்மீது வீசினார்கள். அதனால் தன்னுரையை நிறுத்தாமல், ஒரு போர்வையை தன் மேல் போர்த்திக் கொண்டு மணிக்கணக்கில் பேசினார் தந்தை பெரியார் அவர்கள்.
எல்லோரும் சமமாக முடியுமா? என்றார்கள். சமமாக வந்தால் என்னாகும் என்று தந்தை பெரியார் கேட்டார்.
அதுமட்டுமல்ல, பெண்கள் எப்படி ஆண்களுக்கு சமமாக இருக்க முடியுமா? என்று கேட்டார்கள்.
ஆண் – பெண் இருவருக்கும்
சம உரிமை இருக்கவேண்டும்!
பெரியார்தான் திருப்பிக் கேட்டார், ‘‘இரண்டு கை, இரண்டு கால், இரண்டு கண்கள் மனிதர்களுக்கு இருக்கிறதே, அந்த இரண்டு கண்களுக்கும் பார்வை இருக்கவேண்டும் அல்லவா! அதுபோன்று ஆண் – பெண் இருவருக்கும் சம உரிமை இருக்கவேண்டும் அல்லவா!
ஒரு கை, ஒரு கால் மட்டும் இயங்கினால், அதற்குப் பெயர் பக்கவாதம்! அதேபோன்று, சமூகத்திற்கு ஏன் பக்கவாதத்தை உருவாக்க நினைக்கிறீர்கள். அதை சரிப்படுத்தக்கூடிய மாமருத்துவர்தான் தந்தை பெரியார்.
அவருடைய இயக்கம் யாருக்கும் எதிரானதல்ல; யார்மீதும் வெறுப்பு கொண்டதல்ல.
நிறைய பேர் என்ன சொல்வார்கள், ‘‘பெரியாரா, அவர் கடவுள் இல்லை என்று சொல்பவராயிற்றே?” என்று.
எந்த மதத்திற்கும் விரோதி அல்ல பெரியார்!
அதற்கு பெரியார் அவர்கள் பதில் சொல்கிறார், ‘‘நான் ஏன் கடவுளைப்பற்றி பேசவேண்டிய அவசியம் வந்தது. மற்றவர்களைப் புண்படுத்துவதற்காக அதைப் பேசவில்லை. எந்த மதத்திற்கும் விரோதி அல்ல நான். ஆனால், அவற்றைக் காட்டித்தான், ‘நீ கீழ்ஜாதி, கிட்டே வராதே, தொடாதே” என்று சொன்னார்கள்.
மனிதர்கள் செய்திருந்தால், அது மாறிப் போயிருக்கும் நீண்ட காலத்திற்கு முன்பே! ஆனால், இதை ஆண்ட வன் செய்தார்; கடவுள் முகத்தில் பிறந்தவன் உயர்ந்த ஜாதி; நீ கீழ்ஜாதி, நாலாஞ்ஜாதி. தோளில் இருந்து பிறந்தான், தொடையிலிருந்து பிறந்தான், காலில் இருந்து பிறந்தான் என்று சொன்னவுடன், படித்த இளைஞன், ஒடுக்கப்பட்ட இளைஞன் கேட்டான், ‘‘அய்யா, முகத்தில் பிறந்தான், தோளில் பிறந்தான், தொடையில் பிறந்தான், காலில் பிறந்தான் என்று சொல்கிறார்களே, நான் அய்ந்தாம் ஜாதி, பஞ்சமன் என்று என்ன சொல்கிறார்கள்; அதை நான் படித்திருக்கிறேன். அப்படியென்றால், நான் எங்கே பிறந்தேன்” என்று கேட்டார்.
‘‘நீதான் உன் அம்மாவிற்குப்
பிறக்க வேண்டிய இடத்தில் பிறந்தாய்!’’
உடனே பெரியார் சொன்னார், ‘‘நீதான் உன் அம்மாவிற்குப் பிறக்க வேண்டிய இடத்தில் பிறந்தாய்” என்று சொன்னார்.
தந்தை பெரியார் போன்று தெளிவாகப் பதில் சொல்வது என்பது சாதாரணமானதல்ல.
தந்தை பெரியார் அவர்கள் பாடுபட்டதி னால்தான், என்னைப் போன்றவர்கள் முதல் பட்டதாரியானோம்.
கல்லூரியில் சேருவதற்கான படிவத்தை நிரப்பு வதற்குக்கூட தெரியாது நம்மைப் போன்றவர்களுக்கு அன்றைக்கு. ஏனென்றால், நம் குடும்பத்தினருக்குப் படிப்பில்லாத காரணத்தினால்தான்.
ஆனால், என்ன சொல்வார்கள்? இது உன் தலை யெழுத்து, அதை மாற்ற முடியாது. அன்றைக்கு எழுதிய வன் எழுத்தை, அழித்து எழுத முடியுமா? என்று சொன்னார்கள்.
தலையெழுத்துப்பற்றி தந்தை பெரியார்!
பெரியார்தான் கேட்டார், ‘‘உன் தலையில் மட்டும்தான் எழுதினானா? ஜப்பான்காரன் தலையைக் காட்டவில்லையா? அமெரிக்காகாரன் தலையைக் காட்டவில்லையா? சீனாக்காரன் தலையைக் காட்டவில்லையா?” என்று.
குன்றக்குடி அடிகளார் பெரியாருடைய கருத்தை மிக அழகாக எடுத்துச் சென்னார்.
‘‘ஒருவன், முடி திருத்துவோரிடம் சென்றாலே, அரை மணிநேரம் தலையை ஒழுங்காகக் காட்டுவதில்லை. அப்படி இருக்கின்ற சாதாரண மனிதர்கள், தலையில் எழுதும் வரை காட்டியிருப்பார்களா?” என்று கேட்டார்.
அதுமட்டுமல்ல, கோவிலைக் கட்டியவன் நம்மாள் என்று சொன்னாலும், உள்ளே சென்று அந்தக் கடவுளை வணங்குவதற்குக்கூட அவனுக்கு உரிமையில்லையே!
கையில் பெரிய மணியைக் கொடுத்து வெளியே நிற்க வைக்கிறார்களே!
கடவுள் மறுப்பாளரா, இல்லையா பெரியார் என்பது வேறு! அந்தக் கடவுளை நீ தானே உண்டாக்கினாய், நீ தானே கோவில் கட்டுவதற்கு நிலம் கொடுத்தாய், நீ தானே கோவிலைக் கட்டினாய். கடைசியில், கோவிலைக் கட்டி முடித்தவுடன், சின்ன மணியை ஆட்டிக்கொண்டு பார்ப்பான் கருவறைக்குள் செல்கிறான்; உன் கையில் பெரிய மணியைக் கொடுத்து கோவிலுக்கு வெளியே அடிக்க வைக்கிறார்களே!
ஆண்டவனுடைய பிள்ளைகள்தான் அனைவரும் என்று நீதானே சொல்கிறாய்; அப்படி என்றால், சமத்துவம் இருக்கவேண்டாமா? என்று கேட்டார்.
திராவிட இயக்கம் பாடுபட்டதினால்தான்….
சமத்துவம், சகோதரத்துவம், படிப்பு எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்று பெரியார் அவர்கள் பாடுபட்ட காரணத்தினால்தான், திராவிட இயக்கம் பாடுபட்டதினால்தான் இன்றைக்கு எல்லாத் துறைகளிலும் நம் பிள்ளைகள் வந்திருக்கிறார்கள்.
இன்றைக்கு நம் பிள்ளைகள் பரத நாட்டியம் ஆடுகிறார்கள். ஆனால், நாட்டியம் என்பது உயர்ஜாதிக்காரர்களுக்கு வரும் என்று சொன்னார்கள்.
தாய்மார்கள் ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள் தமிழ்நாட்டினுடைய முதல் பெண் மருத்துவர். ஆனால், அவர் மருத்துவம் படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், பெண்கள் மருத்துவம் படிப்பதற்கு அனுமதியில்லை. ஆண்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரி இருந்தது. யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக முத்துலெட்சுமி அவர்களுக்குத் வகுப்பறையில் தனியே ஒரு திரை போட்டு, தனியே ஒரு வாயிற்கதவு வழியே வந்து அன்றைக்குப் படித்தார்.
ஆனால், அதுபோன்ற நிலை இன்றைக்கு இருக்கி றதா? வாய்ப்புக் கொடுத்தால் யாரும் எதையும் செய்ய லாம் என்ற மிகப்பெரிய திறமை நமக்கு இருக்கிறது.
ஆகவே நண்பர்களே, குறிப்பாக உங்களுக்குச் சொல்லவேண்டுமானால், அருள்கூர்ந்து நீங்கள் மற்றவர்களுக்கு உதவுங்கள்.
தன்மானம் என்று சொல்லும்பொழுது அது அடித்தளம். தன்னம்பிக்கை வந்தால், அங்கே மூடநம்பிக்கைக்கு இடம் இருக்காது.
‘அதிர்ஷ்டம்’ என்றால்
என்ன அர்த்தம் தெரியுமா?
சிலர் என்ன சொல்வார்கள், ‘‘அவர் வெளிநாட்டில் இருக்கிறார்; அது அவர் செய்த அதிர்ஷ்டம்; அந்த அதிர்ஷ்டம் எனக்கு வரவில்லை” என்று.
இங்கே நம்முடைய சகோதரர் அவர்கள் சொன்னார் அல்லவா, ‘‘அதிர்ஷ்டம்” என்ற சொல்லான சமஸ்கிருத வார்த்தைக்கு என்ன பொருள் தெரியுமா?
‘திருஷ்டம்’ என்றால் பார்வை என்று அர்த்தம்.
‘அதிர்ஷ்டம்’ என்றால், பார்வையற்றது என்று அர்த்தம்.
அப்படியென்றால், எனக்கு அதிர்ஷ்டம் வரவில்லை என்று சொன்னால் என்ன அர்த்தம்?
எனக்குப் பார்வை போகவில்லை என்றுதான் அர்த்தம்.
பார்வை போகவேண்டும், பார்வை போகவேண்டும் என்று யாராவது கேட்பார்களா?
சமஸ்கிருத மொழியில் இருப்பதால், அதனுடைய பொருள் தெரியவில்லை. தமிழில் அதைச் சொன்னால், என்னாகும் என்பதை தயவு செய்து நினைத்துப் பாருங்கள்.
ஜாதியை எப்படி வைத்திருக்கிறார்கள் என்றால், மூடநம்பிக்கையோடு இணைத்து விட்டார்கள். இடங்கை ஜாதி – வலங்கை ஜாதி.
ஒவ்வொரு துறையிலும் தன்னம்பிக்கை வளராமல் இருப்பதற்காக, வீட்டிற்குள் செல்லும்பொழுது, வலது காலை எடுத்து வைத்து வா! என்று சொல்வார்கள்.
வலது காலுக்கு மட்டும்
என்ன தனி மரியாதை?
தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
பெரியார்தான் கேட்டார், ‘‘ஏண்டா, இரண்டு கால்களும் உன் கால்கள்தானே; அப்படியென்றால், வலது காலுக்கு மட்டும் என்ன தனி மரியாதை? இடது காலில் அடிபட்டால், நாம் விட்டுவிடுவோமா?” என்று.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் என்று சொல்கிறோமே அவர் சொன்னார், ‘‘இராணுவத்தில் இளைஞர்களுக்கு எதைச் சொல்லி பயிற்சி கொடுப்பார்கள்? காவல்துறையில் இளைஞர்களுக்கு எதைச் சொல்லி பயிற்சி கொடுப்பார்கள்? ‘‘லெப்ட், ரைட்” என்று சொல்லித்தானே! இல்லீங்க, நான் வலது காலை எடுத்து வைத்துத்தான் பயிற்சி செய்வேன் என்றால், விடுவார்களா?” என்று கேட்டார்.
இடது கை நமக்குச் சொந்தமானது
இல்லையா?
அதேபோன்று, வலது கையில் கொடுங்கள் என்று சொல்வார்கள். இடது கை நமக்குச் சொந்தமானது இல்லையா?
நம் பிள்ளைகள், பகுத்தறிவாதிகளாக, அறிவியல் ரீதியாக வளரவேண்டும். பகுத்தறிவுச் சிந்தனை அவர்களுக்கு வரவேண்டும்; கேள்வி கேட்கும் மனப்பான்மை அவர்களுக்கு வரவேண்டும்.
இன்றைக்கு என்னை அழைத்துப் போனார்கள் நண்பர்கள், லேப் தீவு என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நட்சத்திர மண்டலம் நிறைந்ததாக இருந்தது; உள்ளே சென்றவுடன், நாம் எங்கே இருக்கிறோம்? என்று தெரியவில்லை. இரண்டு மணிநேரம் அங்கே சுற்றிப் பார்த்தோம்.
ஹிரோஷிமா நாகசாகியில் அணுகுண்டை போட்டு அழித்து, ஒரு சமூகத்திற்கு மிகப்பெரிய கேடு செய்த பிற்பாடும், இந்த நாடு வளர்ந்திருக்கிறது.
காரணம், அறிவியல் துறையில் இவர்கள் வளர்ந்ததினால்தான்.
அறிவியல் என்பது இருக்கிறதே, அது பகுத்தறிவுச் சிந்தனை!
ஏன்? எதற்கு? என்று கேள்வி கேள்; நம்பாதே, உன்னுடைய அறிவு என்ன சொல்கிறதோ அதன்படி நட என்று பெரியார் சொன்னார்.
கேள்வி கேட்கும் மனப்பான்மை வரவேண்டும் என்று சொல்வதுதான்…
அதனால்தான், கேள்வி கேட்கும் மனப்பான்மை வரவேண்டும் என்று சொல்வதுதான் பெரியாருடைய சமூகப் பார்வையாகும்.
ஒரு பொருளைக் கண்டுபிடிப்பவருக்கும் ஆறறிவு தான். மண்டி போடுபவனுக்கும் ஆறறிவுதான்.
நாம் எதைக் கண்டுபிடித்திருக்கின்றோம்?
ஒரு நாளில் ஒன்றரை மணி நேரம் ராகுகாலம்; எம கண்டம் என்பதைத்தான். ஒரு நாளில் இத்தனை மணிநேரத்தை வீணடிக்கிறார்கள்.
நம்முடைய பெண் பிள்ளைகள் இவ்வளவு பெரிய திறமைசாலியாக இன்றைக்கு இருக்கிறார்கள்.
கருவியிலேயே பெண் குழந்தையை அழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்!
பெரியார் அவர்கள், சுயமரியாதை இயக்கம் தொடங்கிய காலத்தில் பெண்களுக்குச் சுதந்திரம் இல்லாமல் இருந்தது. பிறகு படிப்படியாக அந்நிலை மாறியது. ஆனால், இன்னமும்கூட சில இடங்களில் பெண்கள் பேசுவதற்குக்கூட உரிமையில்லை. பெண் குழந்தை பிறப்பதற்குக்கூட அனுமதியில்லை. கருவியி லேயே அந்தப் பெண் குழந்தையை அழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ஆணா, பெண்ணா? என்று பார்க்கவேண்டிய அவசியமில்லை.
மனிதன் தானாகவும் பிறக்கவில்லை; தனக்காகவும் பிறக்கவில்லை!
பெரியாருடைய பார்வை, மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்பது. மனிதன் தானாகவும் பிறக்கவில்லை; தனக்காகவும் பிறக்கவில்லை. சமூகத்தி ற்காகப் பிறக்கிறான்.
எனவேதான், தோழர்களே இவ்வளவு சிறப்பான, அற்புதமான விழாவிற்கு ஏற்பாடு செய்த உங்களைப் பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை.
என்றென்றைக்கும் எங்கள் நினைவில் இருக்கும். ஜப்பானைப் பார்க்கும்பொழுது, இதைத்தான் பெரியார் அவர்கள் எதிர்நோக்கினார்.
திடசித்தத்தோடு, எது நடந்தாலும் கவலையில்லை, பகுத்தறிவோடு அவற்றை எதிர்நோக்கும் தன்னம்பிக்கை யும், துணிவும் வருகிறது.
கனிவும், பணிவும்,
தன்னம்பிக்கையும் கொண்ட நாடு ஜப்பான்!
எனவேதான், கனிவும், பணிவும், தன்னம்பிக்கையும் கொண்ட நாடு ஜப்பான் நாடு.
இந்த நாட்டில் வாழுகின்ற நீங்கள், நன்றியுணர்ச்சியோடு இவ்விழா எடுத்து, என்னை அழைத்தமைக்காக ஆயிரம் நன்றிகள். எப்பொழுதும் உங்களுக்கு உண்டு! இதை என் வாழ்நாளில் மறக்க முடியாது.
முதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது;
அதிர்ச்சி ஏற்படவில்லை!
எனவே, முதுமையை விரட்டி, இளமையோடு வாழக்கூடியது எப்படி? என்று சொல்லக்கூடிய நாடு – இன்றைக்கு நாங்கள் முதுமை இருக்கிறதோ இல்லையோ, இங்கே வந்ததின்மூலமாக முதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது; அதிர்ச்சி ஏற்படவில்லை – முதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. உங்கள் அன்பிற்கு நன்றி!
உங்களுடைய வரவேற்பு, என்றைக்கும் நினைவில் இருக்கக்கூடிய அளவில் இருக்கும்.
பாராட்டுவதில், சிக்கனம் காட்டாதீர்கள்!
நீங்கள், மற்றவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுங்கள்; இளைய தலைமுறையினரைப் பாராட்டுங்கள்; தாய்மார்களைப் பாராட்டுங்கள். பாராட்டுவதில், சிக்கனம் காட்டாதீர்கள். தாராளமாகப் பாராட்டுங்கள்.
ஆகவே, அனைவருக்கும் அனைத்தும் என்ற சமூகநீதியைத்தான் தந்தை பெரியார் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் சொன்னார்கள்.
‘‘ஆயிரம் ஆண்டெனும்
மூதாட்டி
அவள் அணிந்திராத
அணியாவார்
அறிந்திராத அறிவாவார்
இப்பெரிய தமிழர்நாடு
கணந்தோறும்
எதிர்பார்க்கும்
தலைவராவார்
கழறவோ அவர் பெயர்தான்
இராமசாமி.‘‘
என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
பெரியாருடைய பார்வை, உங்களுடைய பார்வையாக இருக்கட்டும்!
‘‘மேட் இன் மேக்கர்” என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அப்படிப்பட்ட பெரியாருடைய பார்வை, உங்களுடைய பார்வையாக இருக்கட்டும்.
சமத்துவப் பார்வை, பகுத்தறிவுப் பார்வை, சமூகநீதிப் பார்வை எல்லாவற்றிற்கும் மேலாக, வளர்ச்சிப் பார்வை – பழைமையைத் தூக்கியெறியுங்கள்!
எல்லாவற்றிலும் பழைமையைத் தூக்கி எறிய முடியாது என்று நீங்கள் கேட்கலாம்.
பழைமையைப் பயன்படுத்தலாம், எப்பொழுது?
உரமாகப் பயன்படுத்தலாம்.
உணவாகப் பயன்படுத்தாதீர்!
உரமாகப் பயன்படுத்துவதை உணவாகப் பயன்படுத்த முடியாது.
பழைமையை உரமாக வைத்துக்கொண்டு, புதுமையை உணவாக ஆக்குங்கள்!
உரத்தின்மூலம்தான் உணவு கிடைக்கின்றது என்பது வேறு. ஆகவே, நீங்கள் பழைமையை உரமாக வைத்துக்கொண்டு, புதுமையை உணவாக ஆக்குங்கள், வெற்றி பெறுங்கள்!
தந்தை பெரியார் பிறந்த நாள்– சமூகநீதி நாள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்த உறுதிமொழியை ஏற்பீர்!
எப்பொழுதும் உங்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!
இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தோழர்களுக்கு நன்றி!
அனைவருக்கும் நன்றி! வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.