பில்லியன் கணக்கான ரூபாய் மோசடி செய்த உத்தரப் பிரதேச அரசு: அகிலேஷ் குற்றச்சாட்டு

Viduthalai
1 Min Read

லக்னோ, செப்.13 உத்தரப் பிரதேசத்தில் அரசும் அரசு அதிகாரிகளும் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் மேனாள் முதலமைச்சர் அகிலேஷ் தலைமையில் சமாஜ்வாதி கட்சி மாநாடு நேற்று (12.9.2024) நடைபெற்றது. மாநாட்டில் அகிலேஷ் பேசியதாவது, “கடந்த ஜூலை 10 ஆம் தேதியில், அயோத்தியில் உள்ள நிலத்தை வெளியாள்களுக்கு விற்றதன் மூலம், உத்தரப் பிரதேச அரசு பில்லியன் கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளது.

இந்த நில ஒப்பந்தங்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அரசு அதிகாரிகளும், பாஜக உறுப்பினர்களும்தான் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். திருட்டு நடக்கும் இடங்களில் எந்த வளர்ச்சியும் இருக்காது.

அயோத்தி போன்ற முக்கிய இடத்திலேயே, இதுபோன்ற திருட்டை அவர்களால் செய்ய முடியுமென்றால், உத்தரப் பிரதேசத்தின் பிற மாவட்டங் களில் இன்னும் எவ்வளவு நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

பீரங்கி பயிற்சிக்காக பயன்படுத் தப்பட்ட பாதுகாப்பு நிலத்தை, பாஜக உறுப்பினர்கள் கையகப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, சாமானிய மக்கள் பயன்படுத்தும் நிலத்தைத் தடுக்கவே ரயில்வே சீரமைப்பையும் மாற்றியுள்ளனர்.

உண்மையில் இந்த மாற்றமானது, பல நூற்றாண்டுகளாக அங்கு வசித்து வருபவர்களிடமிருந்து நிலங்களைக் கைப்பற்றுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். சாமானிய மக்க ளுக்குகூட தங்கள் நிலத்தின் எதிர்கால மதிப்பு குறித்து தெரியாமல் இருக்கலாம்; ஆனால், அதிகாரிகளுக்கும் பாஜக உறுப்பினர்களுக்கும் அதுகுறித்த அனைத் தும் தெரியும்.மேலும், அயோத்தியில் நடந்த கொள்ளையை அம்பலப்படுத்தியதற்காக, எங்கள் கட்சித் தலைவர்களுக்கு நன்றி.

இரண்டு ஆண்டுகளில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வரும்போது, அயோத்தியாவை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்றுவோம். மக்களின் வீடுகள் செழிப்பால் நிரம்பியிருப்பதையும் நாங்கள் உறுதி செய்வோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *