புதுடில்லி, செப். 13- ஆம் ஆத்மி மாநில இணைச் செயலாளரும், தலைவருமான லவ்லீன் துதேஜா மற்றும் அவரது ஆதரவாளர்களும் மேனாள் முதலமைச்சர் பூபேந்தர் சிங் ஹூடா முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தனர்.
அரியானா சட்டப்பேரவைத் தேர்தல் அக்.5இல் நடைபெற உள்ள நிலையில், அந்தந்தக் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரோஹ்டக்கில் வேட்பாளராக இருந்தவர் துதேஜா, தேர்தலில் துதேஜாவை வேட்பாளராக அறிவிக்காமல் பைஜேந்திர ஹூடாவை ஆம் ஆத்மி களமிறக்கியது. ரோஹ்டக்கில் பஞ்சாபியர்கள் அதிகம் பேர் உள்ளனர். துதேஜாவும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால் அவரை ஆம் ஆம்தி களமிறக்கவில்லை.
குடிநீர் தட்டுப்பாடு, சாக்கடை நிரம்பி வழிதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளில் ஈடுபட்டுள்ளேன், அதே பிரச்சினைகளை காங்கிரசும் எழுப்பி வருகின்றது. எனவே மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நான் காங்கிரஸில் இணைந்தேன். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அனைத்து மக்களின் குறைகளையும் நிவர்த்தி செய்ய உத்தரவாதம் அளித்துள்ளது. எனவே சட்டமன்ற உறுப்பினர் பாரத் பூஷன் பத்ராவின் வெற்றியை உறுதி செய்ய பாடுபடுவேன் என்றார்.
ம.பி.: 400 ஆண்டுகள் பழைமையான கோட்டையின் சுவர் இடிந்து 7 பேர் உயிரிழப்பு
போபால், செப். 13- மத்தியப் பிரதேச மாநிலத்தில் கனமழையால் 400 ஆண்டுகள் பழைமையான ராஜ்கர் கோட்டையின் சுற்றுச் சுவர் இடிந்து அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்தது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் தாடியா நகரில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள கால்காபுரா பகுதியில் 400 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ராஜ்கர் கோட்டையின் பிரமாண்டமான சுற்றுச் சுவர் உள்ளது. அதன் அருகில் பல வீடுகளும் உள்ளன. தொடர்ந்து மழை பெய்ததால் நேற்று (12.9.2024) அதிகாலை 4 மணியளவில் கோட்டைச் சுவரின் ஒரு பகுதி இடிந்து ஒரு வீட்டின் மீது விழுந்தது. இதில் அந்த வீடு முற்றிலுமாக இடிபாடுகளுக்குள் புதைந்தது. வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
சுவர் இடிந்து விழுந்தபோது ஏற்பட்ட சப்தம் கேட்டு அங்கு விரைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக காவல் துறை மற்றும் மீட்புக் குழுவுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 7 உடல்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டன. மேலும், இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் அறிவித்துள்ளார்.