சண்டிகர், செப்.13 ‘மேற்கு வங்க மக்களின் நலனுக்காக பதவி விலகவும் தயார்’ என்ற மாநில முதலமைச்சர் மம்தா பெண் பயிற்சி மருத்துவரின் பாலியல் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் எனும் தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
‘நேரலை ஒளிபரப்பு’ நிபந்தனை ஏற்கப்படாததால் முதலமைச்சர் மம்தா முன்னிலையில் நேற்று (12.9.2024) மாலை நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை மருத்துவா்கள் புறக்கணித்தனா். இதைத் தொடா்ந்து, முதலமைச்சர் மம்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாலியல் வன்முறையால் கொலை செய்யப்பட்ட முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா், கடந்த மாதம் 9-ஆம் தேதி பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு, மேற்கு வங்க அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் இளம் மருத்துவா்கள் ஒரு மாதத்துக்கும் மேலாக பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற் படுத்திய இந்நிகழ்வை தாமாக முன்வந்து விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், மருத்துவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண் டும் என்று உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவைமீறி மேற்கு வங்க மருத்துவா்களின் போராட்டம் தொடா்கிறது.
இந்தச் சூழலில், மாநில தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மம்தா முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மருத்துவா்களுக்கு மேற்கு வங்க அரசு அழைப்பு விடுத்தது. இந்தப் பேச்சுவார்த்தையை நேரலை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று மருத்துவா்கள் நிபந்தனை விதித்தனா்.
முதலமைச்சருடன் பேச்சு- புறக்கணிப்பு: இந்நிலையில், பேச்சு வார்த்தையில் பங்கேற்பதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம் மருத்துவா்கள் 26 போ் கொண்ட குழு வினா் தலைமைச் செயலகத்துக்கு வியாழக்கிழமை மாலை 5.25 மணியள வில் வந்தனா். பேச்சுவார்த்தை நடை பெறவிருந்த அரங்குக்குள் நுழையாமல் அவா்கள் வெளியே காத்திருந்தனா்.
நேரலை ஒளிபரப்பு நிபந்தனையைக் கைவிட்டு பேச்சுவார்த்தைையில் பங்கேற்குமாறு மாநில தலைமைச் செயலா் மனோஜ் பன்ட், காவல்துறை டிஜிபி ராஜீவ் குமார் உள்பட மூத்த அதிகாரிகள் மருத்துவா்களிடம் கேட்டுக்கொண்டனா். ஆனால், மருத்துவா்கள் தங்களின் கோரிக்கையில் உறுதியாக இருந்தனா். இதையடுத்து, முதலமைச்சருடன் பேச்சுவார்த்தையைப் புறக்கணித்துவிட்டு, அவா்கள் அங்கிருந்து புறப்பட்டனா்.
இதுதொடா்பாக தலைமைச் செயலா் பன்ட் கூறுகையில், ‘போராட்டத்தை நேரலையில் ஒளிபரப்ப சட்டரீதியில் சாத்தியமில்லை என்பதை மருத்துவா்க ளுக்கு தெரிவித்துவிட்டோம். காட் சிப் பதிவு எடுக்கப்படும் என்றும் உறுதி யளித்தோம்.
மருத்துவா்களுக்காக முதலமைச்சர் ஒன்றரை மணி நேரம் காத்திருந்தார். ஆனால், அதனை அவா்கள் ஏற்க வில்லை. சுகாதாரத் துறையில் உள்ள பிரச்னைகளை சரிசெய்யும் நோக்கம் இரு தரப்பினருக்கும் பொதுவானது என்பதால், மருத்துவா்களுக்கும் அரசுக்கும் இடையே எவ்விதமான முரண்பாடுகளும் இருக்கக் கூடாது’ என்று வலியுறுத்தினார்.
அரசியல் சக்திகள் ஆதிக்கம்: பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியில் முடிந்ததையடுத்து செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் மம்தா, ‘மருத்துவா்களின் போராட்டத்துக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த மேற்கு வங்க மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவா்களின் கோரிக்கையான பேச்சுவார்த்தையை காட்சிப் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் அந்த காட்சிப் பதிவை அவா்களுடன் பகிர்ந்திருப்போம். சுமார் 2 மணிநேரம் நாங்கள் பேச்சுவார்த்தைக்காக காத்திருந்தோம். ஆனால், அவா்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் திரும்பிவிட்டனா். மருத்துவா்களின் இம்முடிவில் அரசியல் சக்திகளின் ஆதிக்கமிருப்பதாக சந்தேகம் எழுகிறது.
பதவி விலகத் தயார்: மருத்துவா்களின் பணிப் புறக்கணிப்பால் 27 போ் உயிரிழந்தனா். சுமார் 7 லட்சம் நோயாளிகள் அவதிப்படுகின்றனா். மருத்துவா்கள் மீண்டும் பணிக்கு திரும்புமாறு கேட்டுக்கொள்கிறேன். போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவா்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம். பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர மருத்துவா்களுடன் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் எடுக்கப்பட்டன. மக்களின் நலனுக்காக எனது முதலமைச்சர் பதவியிலிருந்து விலக நான் தயாராக இருக்கிறேன்’ என்றார்.
மகிழ்ச்சியில்லை…: ‘முதலமைச்சர் மம்தாவுடன் பேச்சுவார்த்தை நடைபெறாததில் மகிழ்ச்சியில்லை. வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவது தவிர நேரலை ஒளிபரப்பு நிபந்தனையில் எந்த உள்நோக்கமும் இல்லை. எனவே, எங்கள் கோரிக்கையில் வலுவாக உள்ளோம்’ என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளம் மருத்துவா் ஒருவா் கூறினார்.