ராஞ்சி, செப்.11 ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜகவின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய சோரன், பணபலம் கொண்டு ஆட்சியைக் கவிழ்க்க சதி நடப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் செரைகேலா-கர்சவான் மாவட் டத்தில் உங்கள் திட்டம், உங்கள் அரசு, உங்கள் இல்லத்திற்கு என்ற நிகழ்ச்சியில் ரூ. 555.83 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு முதலமைச்சர் ஹேமந்த் சோரன் நேற்று (10.9.2024) அடிக்கல் நாட்டினார். ரூ. 472 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடக்கிவைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, பணபலம் கொண்டு அவர்கள் (பாஜக) ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கிறார்கள். தற்போது அதைக்கொண்டு எங்கள் ஆட்சியை சீர்குலைக்கப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த பாடத்தை கற்பிப்போம்.
எங்கள் நலத்திட்டங்களை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மூத்தக் குடி மக்கள் ஓய்வூதியம் வாங்கு வதை அவர்களால் பொறுக்க முடிய வில்லை. வளமாக இருக்கும் விவசாயிகள், கல்வி கற்கும் பெண்கள் என மாநிலத்தின் வளர்ச்சியை பொறுக்க முடிய வில்லை.
இந்த மண்ணின் கனிம வளங்களால் ஜார்க்கண்ட் மாநிலமானது தங்கப் பறவை என அழைக்கப்படுகிறது. ஆனால் அதன் மக்கள் பின்தங்கியுள்ளனர். மாநிலத்தின் வளங்களைக் கொள்ளையடிப்பவர்கள் அதனை செல்வந்தர்களுக்கும் முதலாளிகளுக்கும் மட்டுமே கொடுக்கின்றனர்.
கனிம வளங்கள் நிறைந்த மண்ணை விற்று முறைகேடாக பணப் பரிவர்த்தனை செய்ததாக என் மீது குற்றம் சுமத்தி சிறையில் அடைத்தார்கள். அதன் மூலம் என்னை அச்சுறுத் தப்பார்த்தார்கள். எங்கள் ஆட் சியையும், திட்டங்களையும் கண்டு அவர்கள் (பாஜக) அஞ்சுவதையே இது காட்டுகின்றன.
கிராமங்களை வளமானதாக்கு வோம். கிராமங்கள் வளர்ச்சி அடையாமல் ஜார்க்கண்ட் வளர்ச்சி சாத்தியமில்லை என சோரன் பேசினார்.