புதுடில்லி, செப்.10 ஒன்றிய புள்ளியியல் மற்றும் கணக்கெடுப்பு குழுவை ஒன்றிய அரசு திடீரென கலைத்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் மக்கள் தொகை கணக்கெடுப்பை தாமதப்படுத்த பாஜக அரசு திட்டமிட்டிருப்பதாக சாட்டியுள்ளது. ஒன்றிய அரசுக்கு தேவையான தரவுகளை அளிப்பதற்காக பிரபல பொருளாதார நிபுணரும், இந்தியா புள்ளியியல் துறையின் மேனாள் தலைமை நிபுணருமான திரோனவ் சென் தலைமையில் 14 உறுப்பினர்களை கொண்ட புள்ளியலுக்கான நிலைக்குழு கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமைக்கப்பட்டது.
குழு அமைக்கப்பட்டு 1 ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் நிலை குழு கலைக்கப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குழுவை கலைத்துள்ள ஒன்றிய புள்ளியியல் அமலாக்கத்துறை அமைச்சகம் குழுவின் உறுப்பினர்களுக்கே போதிய விளக்கத்தை அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஒன்றிய புள்ளியியல் மற்றும் கணக்கெடுப்பு குழுவானது மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முன்னெடுப்பை எடுப்பதுடன் புள்ளி விவரங்கள் மூலம் மனிதவள மேம்பாட்டுக்கான தேசிய உத்திகளை உருவாக்கும் பிரதான பணிகளை செய்து வந்தது.
இந்த சூழலில் 2011ஆம் ஆண்டுக்கு பின்னர் நடத்தப்பட்டிருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னும் நடத்தப்பட வில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பை ஜாதிவாரி கணக்கெடுப்பாக நடத்தி அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று இந்தியா கூட்டணி மட்டுமல்லாது, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட பாஜகவின் கூட்டணி கட்சிகளே வலியுறுத்தி வருகின்றன. பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் திடீரென புள்ளியியல் மற்றும் கணக்கெடுப்பு குழு கலைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவின் உறுப்பினர்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பை எப்போது நடத்துவது என தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் குழு கலைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மீண்டும் தள்ளிபோகும் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார். ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையால் 10 கோடி இந்தியர்களின் உணவு பாதுகாப்பு கேள்விக்குறி ஆக்கப்பட்டிருப்பதாக விமர்சித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமை பெற்றால் தான் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு சாத்தியமாகும் என சுட்டிக்காட்டியுள்ள ஜெயராம் ரமேஷ் இவை இரண்டையும் பாஜக அரசு விரும்பாததே இதற்கு காரணம் என கூறியுள்ளார்.
ஆா்எஸ்எஸ் தலைவருடன் அய்பிஎஸ் அதிகாரி சந்திப்பு விளக்கம் அளிக்க இடதுசாரி கூட்டணி வலியுறுத்தல்
திருவனந்தபுரம், செப்.10 முதலமைச்சர் பினராயி விஜயனின் தூதராக அய்பிஎஸ் அதிகாரி, ஆா்.எஸ்.எஸ். தலைவரை சந்தித்ததாக சட்டப்பேரவையில் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. இதையடுத்து, இரு தரப்பினா் இடையே சட்டப்பேரவையில் வாா்த்தை மோதல் ஏற்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரித்தது. சமீபத்தில் அமைச்சா்களின் தொலைபேசியை அய்பிஎஸ் அதிகாரி அஜித் குமாா் ஒட்டுக்கேட்டதாக எல்டிஎஃப் கூட்டணியில் இருக்கும் சுயேச்சை எம்எல்ஏ அன்வா் குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா்.
இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘அன்வா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்தவரல்லா். அவரின் இந்தக் கருத்துக்கு கட்சி சாா்பில் பதிலளிக்க முடியாது. அவா் கூறியது சரியா என்பதை அவா்தான் ஆய்வு செய்ய வேண்டும்’ என ராமகிருஷ்ணன் பதிலளித் தாா். இதனிடையே, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் விஜயராகவன் கூறுகையில், ‘முதலமைச்சர் பினராயி விஜயன், எந்தவிதமான முறைகேடுகளையும் ஆதரிக்கும் நபா் அல்லா். குற்றச்சாட்டுகள் குறித்து ஏற்கெனவே விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தேவையற்ற சா்ச்சைகளை ஊடகங்கள்தான் உருவாக்கி வருகின்றன என்றாா்.