சண்டிகார், செப்.9- மேனாள் துணைப்பிரதமர் தேவிலாலின் பேரன் ஆதித்யா தேவிலால், அரியானா பா.ஜனதாவில் முன்னணி தலைவராக இயங்கி வந்தார். அங்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 5ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது.
இந்த நிலையில் ஆதித்யா தேவிலால் பா.ஜனதாவில் இருந்து விலகி உள்ளார். அவர் நேற்று (8.9.2024) இந்திய தேசிய லோக்தளம் கட்சி யின் மூத்த தலைவர் அபய் சிங் சவுதாலா முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்தார்.
ஆதித்யா தேவிலால் சிர்சா மாவட்டத் தின் டப்வாலி தொகுதியில் இந்திய தேசிய லோக்தளம் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
இந்திய தேசிய லோக்தளத்தில் இணைவதற்கு முன், கட்சியின் மூத்த தலைவரும், தேவிலால் மகனும், மேனாள் முதலமைச்சருமான ஓம் பிரகாஷ் சவுதாலாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். பா.ஜனதாவில் இருந்து ஒரே வாரத்தில் விலகிய தேவிலால் குடும்பத்தின் 2-ஆவது நபர் ஆதித்யா தேவிலால் ஆவார். முன்ன தாக தேவிலாலின் மகனும், அரியானா சிறைத்துறை அமைச்சருமான ரஞ்சித் சவுதாலா வெளியேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.