புதுடெல்லி, செப். 9- செபி செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற பொது கணக்குக்குழு முடிவு செய்துள்ளது. இதனிடையே, செபி தலைவர் மாதவியை நேரில் அழைத்து விசாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற பொது கணக்குக் குழுவின் தலைவராக காங்கிரஸ் உறுப்பினர் கே.சி. வேணுகோபால் அண்மையில் நியமிக்கப் பட்டார்.
அதன் இரண்டாவது கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது.
அந்தக் கூட்டத்தில் செபி மீதான புகார் குறித்தும், செபியின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதானி – செபி ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு செபி விவகாரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
22 உறுப்பினர்கள் கொண்ட பொதுக் கணக்குக் குழுவில் 15 மக்களவை உறுப்பினர்கள், 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மக்களவை தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை தி.மு.க. குழுத் தலைவர் திருச்சி சிவா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சவுகதா ராய், சுகேந்து சேகர் ராய், சமாஜ்வாதி கட்சியின் தர்மேந்திர யாதவ் உள்ளிட்டோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானா காங்கிரஸின்
புதிய தலைவர் மகேஷ் குமார் கவுட்
அய்தராபாத், செப். 9- தெலங்கானாவில் ஆளும் கட்சியான காங்கிரஸின் மாநில தலைவராக அக்கட்சியின் எம்எல்சி மகேஷ் குமார் கவுட் 6.9.2024 அன்று நியமிக்கப்பட்டார்.
தெலங்கானாவில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றார். அதன் பிறகும் தெலங்கானாவின் காங்கிரஸ் தலைவராக அவர் இருந்து வந்தநிலையில், தற்போது புதிய தலைவரை காங்கிரஸ் நியமித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், தெலங்கானா காங்கிரஸ் தலைவராக மகேஷ் குமார் கவுட்டை அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்தார் என கட்சியின் பொதுச் செயலர் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.
மகேஷ் குமார் கவுட், தனது சொந்த ஊரான நிஜாமாபாத் மாவட்டத்தில் கடந்த 1986 முதல் 1990-ஆம் ஆண்டு வரை காங்கிரஸின் மாணவர் பிரிவான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானாவில் முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டி முதலமைச்சராகவும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாட்டீ விக்ரமார்கா துணை முதலமைச்சராகவும் இருந்து வருகின்றனர். இந்நிலையில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மகேஷ் குமாரை கட்சியின் மாநில தலைவராக நியமித்தது கட்சிக்குள் சமநிலையை ஏற்படுத்த எடுக்கப்படும் முயற்சியாக கருதப்படுகிறது.