புதுடில்லி, செப்.9 இந்தியாவில் குரங்கு அம்மையால் இளைஞர் ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அந்த இளைஞர் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளார்… தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் ஆகஸ்ட் 14 அன்று உலக சுகாதார அமைப் பால் அவசர நிலையாக `குரங்கு அம்மை தொற்று’ அறிவிக்கப்பட்ட பின்னர், இந்தியாவில் நேற்று (8.9.2024) முதலாவதாக ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. குரங்கு அம்மை பரவி வந்த நாட்டிலிருந்து இந்தியா திரும்பிய இளைஞர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று (8.9.2024) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த நோயாளி தனிமைப்படுத்தப்பட்டு, அவரு டைய ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
காய்ச்சல், தலைவலி, முதுகு வலி, தசை வலி, நிணநீர் கணுக் களில் வீக்கம், சருமத்தில் அரிப்பு போன்றவை இத்தொற்றின் அறி குறிகள் ஆகும். இது தானாக குணமடையும் நோயாக இருப் பினும், குழந்தைகள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு மரணத்திற்கு வழிவகுக்கும் அபாய முண்டு.
நோய்க்கு குறிப்பிட்ட சிகிச்சை இல்லாத நிலையில், பாதிக்கப்பட்ட நோயாளியை தனிமைப்படுத்துவதால் நோய்த்தொற்று பரவாமல் தடுக்கலாம். பாதிக்கப்பட்ட விலங்குகள் அல்லது மனிதர்கள் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை வழங்கப்படும். ஊட்டச்சத்துகள் வழங்கப்பட்டு மறுசீரமைப்புக்கான சிகிச்சைகள் வழங்கப்படும்.
பாதிக்கப்பட்ட நபர்களிடம் தொடர்பில் இருந்த பின், கைகளை சோப்பு, தண்ணீர் பயன்படுத்தி கழுவுதல் மற்றும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துதல் ஆகியன நோய்த்தொற்று பரவாமல் இருக்க செய்ய வேண்டியவை ஆகும்.
நோய்க் கட்டுப்பாட்டுக்கான தேசிய மய்யம் நடத்திய ஆய்வில், முந்தைய இடர் மதிப்பீட்டோடு நோய்த் தொற்று பரவல் ஒத்துப்போவதாக தெரிவித்துள்ளது மற்றும் கவலைக்குரிய அபாயம் ஏதுமில்லை என தெரிவிக் கப்பட்டுள்ளது.
மலக்குடல் வலி, ஆணுறுப்பு வீக்கம் ஆகியவை குரங்கு அம் மையின் புதிய அறிகுறிகள் என மருத்துவர்கள் எச்சரிக்கை செய் துள்ளனர்.