காழ்ப்புணர்ச்சிக் காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் கண்டிப்பது – அவருக்குக் கேவலம்; ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு ‘‘உரமாகும்!’’
பொருளாதார வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புக்கும் பெரும் தூண்டுதலாக அமையும் முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
‘திராவிட மாடல்’ அரசின் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் அமெரிக்கப் பயணம் ஏராளமான முதலீடுகளை ஈர்ப்பதன்மூலம், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புப் பெருகும். இதனை வரவேற்பதை விட்டு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் ‘காந்தாரி’போல் கண்டனங்களை வீசுவது, தி.மு.க. ஆட்சிக்கு உரமாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
வெளிநாடுகளில் முதலீடுகளை ஈர்த்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மேலும் மேலும் உரமிட்டு வளர்க்கவே நமது ‘திராவிட மாடல்‘ முதலமைச்சர், உழைப்பின் உருவமாக மிகுந்த செயல் வேகத்துடன் பற்பல நாடுகளுக்கும் – துபாய், சிங்கப்பூர், ஸ்பெயின் போன்ற நாடு களில் முன்பும், இப்போது அமெரிக்கா சென்று, அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டிற்குத் ‘‘தொழில் தொடங்க வாருங்கள், வாருங்கள்’’ என்று அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபர்களுக்கு விடுத்த வேண்டுகோள் நல்ல பலனைத் தந்து, ஏராளமான முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களை ஈர்த்து, அவரது பயணம் மிக வெற்றிகரமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது, நமது வாழ்த்துகள்!
வேறு எந்த அரசியல் தலைவருக்கும் தராத வரவேற்பினை நமது முதலமைச்சருக்குத் தந்து, தங்களது தாய் மண்ணின் பாசத்தின் வேர்களை அந்தப் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ப் பெருமக்களும், மற்றவர்களும் தந்து, அவரை அன்பு வெள்ளத்தில் நீந்திடச் செய்து, அவருக்கு மகிழ்ச்சியை, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்!
கலைஞர் உருவாக்கிய ‘டைடல் பார்க்!’
தமிழ்நாட்டின் கல்விப் பெருக்கும், கலைப் பெருக்கும், தொழில் பெருக்கும் நாளும் ஓங்கி வளர்ந்துள்ளதால், ‘பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் மனிதரெல்லாம் விழிபெற்று பதவி கொள்ளும்’ அமைதிப் புரட்சியை ‘திராவிட (மாடல்) ஆட்சி’ (அதற்குமுன் கால்கோள் விழா காமராசர் ஆட்சி) ஏற்படுத்தியதாலும், இது தகவல் தொழில்நுட்ப புரட்சி யுகம் ஆனபடியால், அதற்கேற்ப கலைஞர் ஆட்சியில், ‘டைடல் பார்க்‘ போன்றவற்றை அமைத்தும், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு புதுத் திருப்பம் ஏற்படச் செய்தார்! அதன் விரிவாக்கம் கல்வித் துறையில் பரந்து, உள்நாடு, வெளிநாடு மற்றும் பற்பல பகுதிகளிலும் நம் பிள்ளைகள் பரவி, விரவி அந்த விழுதுகளின் நன்றி உணர்ச்சியின் வெளிப்பாடு எத்தகைய வெளிச்சத்தினைத் தருகிறது என்பதற்கு தற்போது சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ போன்ற அமெரிக்கப் பெரு நகரங்களில் நடந்த வரவேற்புகளே சான்றாவணம்!
‘காந்தாரிகளின்’ கண்டனம்!
பிரபல தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வந்துள்ள வாய்ப்பு, தொழில் ஒப்பந்தங்கள்மூலம் ஊற்றெடுத்துப் பெருகும் நல்வாய்ப்பு ஏற்பட்டுள்ளது! நியாயமாக, இதை வரவேற்கவேண்டிய தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் – குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் போன்றவர்கள் வயிற்றெரிச்சல்காரர்களாக குறுக்குச்சால் ஓட்டும் புராண கால ‘‘காந்தாரிகளாக’’க் காட்சியளிப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
அரசியலில், தேர்தலில் தோற்கடிக்க முடியாது போன பின்பு, தமிழ்நாட்டு முதலமைச்சர் உலகப் புகழ்பெற்று நாளும் பெருமையையும், சிறப்பையும் பெற்று உயரும் நிலை உள்ளதால், அரசியல் காழ்ப்புணர்ச்சிக் ‘‘கருப்பையாகி’’, தங்களது தரத்தைத் தாங்களே தாழ்த்தி வருகின்றனர் அக்கட்சியும், எதிர்க்கட்சித் தலைவரும்!
முன்பு, ஆட்சியிலிருந்தபோது இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அமெரிக்கா போய் வந்தாரே, அப்போது அவருக்கு இப்படி ஒரு மகத்தான வேரைத் தேடிய விழுதுகளின் மகிழ்ச்சி பொங்கிய வரவேற்பு மழை பெய்ததுண்டா?
அப்போது அவர் ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு?
புள்ளி விவரங்களோடு அவரது ஆட்சியின் பழைய வரலாற்றை ஒப்பிட்டுப் பேச முடியுமா?
தரமற்ற விமர்சனங்கள் உரமாகும்!
தமிழ்நாட்டு மக்களால் மூக்கறுபட்டு மூலையில் தள்ளப்பட்டு, முகாரி பாட வைத்துள்ளதால் திசை திருப்ப வேறு ஏதேதோ பேசுகிறார். ‘திராவிட மாடல்’ முதலமைச்சரின் உழைப்பும், அழைப்பும் வெளிநாட்டு நிறுவனங்களின் ஒப்பந்தங்களாக, தொழில்திட்டங்களாக பூத்தும், காய்த்தும், கனிந்தும் வருகின்றன! தரமற்ற விமர்சனங்கள் விளைச்சல்களுக்கு உரங்களாகட்டும்!
தமிழ்நாட்டு இளைஞர்கள் படித்தும் வேலை கிட்டாத விரக்திக்கு அவர்கள் சென்றுவிடக் கூடாது என்பதற்கான தடுப்பணை அல்லவா இத்தனை தொழில் முதலீடுகளை ஈர்க்கும் திட்டங்கள். அதற்கு உறுதுணையாக இருந்து ஊக்கப்படுத்துவதற்குப் பதில், இப்படி உருப்படியற்று, உளறுவாய் பேச்சாளர்கள் ஊரறிய உலகறிய தங்களது அரசியல் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுவது வெட்கக்கேடு! மகாவெட்கக்கேடு!
கதிரவனின் வெளிச்சம் – காரிருளை விரட்டுவது உறுதி! உறுதி!!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
9.9.2024