கூட்டணி கட்சியினரே எதிர்ப்பு
லக்னோ, செப். 8– மக்களவைத் தேர்தல் பின்னடை வைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச அரசியல் பல மாற்றங்களை எதிர்கொள்கிறது. குறிப்பாக, முதலமைச்சர் ஆதித்யநாத்துக்கு எதிரான சக்திகள் ஒன்றுகூடத் தொடங்கி இருக்கின்றன. அவரும் தனது பங்குக்கு, தனது செல்வாக்கை தக்கவைத்துக் கொள்ளவும், எதிரிகளை வலு விழக்கச் செய்யவும் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.
ஒன்றிய அமைச்சரும், அப்னா தளம் (எஸ்) தலைவரு மான அனுப்ரியா படேலுக்கும், முதலமைச்சர்சாமியார் ஆதித்யநாத்துக்கும் இடையே என்பது ஊரறிந்த ரகசியம். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அவர்களது பனிப்போர் மேலும் வலுத்திருக்கிறது. அனுப்ரியா படேலின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த முதலமைச்சர், சாமியார் ஆதித்யநாத்துக்கு எதிராக அனுப்ரியா படேலும் முனைப்புடன் செயல்படுகின்றனர்.
தனி நபர்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்டிருக்கும் அரசு நிலங்களை, ஒப்பந்தம் காலாவதியானதும் திரும்பப் பெற வகை செய்யும் விதத்தில் ‘நஸுல் சொத்து மசோதா’, சாமியார் அரசால் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அந்த மசோதா கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ‘அது மக்கள் விரோத மசோதா’ என்று கூட்டணிக் கட்சியான அப்னா தள கட்சியின் தலைவரும், மோடி அரசின் அமைச்சராக இருப்பவருமான அனுப்ரியா படேல் கூறியிருப்பது பாஜகவினர் மத்தியில், குறிப்பாக முதலமைச்சரின் ஆதரவாளர்களைக் கடுமையான கோபத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.
கடந்த மாதம் நடந்த வேலைவாய்ப்பு முகாம்களில், தாழ்த்தப்பட்ட சமூகத்தவர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை சாமியார் அரசு கடைப்பிடிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டை முன்வைத்தார் ஒன்றிய அமைச்சர் அனுப்ரியா படேல். தாக்கூர் இனத்தவரான முதலமைச்சர் ஆதித்யநாத் ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் புறக்கணிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
சமீபத்தில், எதிர்க்கட்சிகளின் முழக்கமான ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஆதரவாக அமைச்சர் அனுப்ரியா படேல் பேசியிருப்பது பாஜகவினரை மேலும் குழப்பி இருக்கிறது. தனது பிற்படுத்தப்பட்ட ‘குர்மி’ சமுதாயத்தில் செல்வாக்கு பெறுவதற்காக அவர் பேசியிருப்பதாகச் சிலரும், சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜவாதி-காங்கிரஸ் கூட்டணியில் இணைவதற்கான முயற்சி என்று சிலரும் கருதுகிறார்கள்.
தொடரும் ரயில் விபத்துகள்
இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து
ஜபல்பூர், செப். 8– இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகள் 6.9.2024 அன்று அதிகாலை 5 மணியளவில் ஜபல்பூர் நிலையம் அருகே தடம் புரண்டதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து ரயில்வே அதிகாரி கூறியதாவது:
மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து ஜபல்பூர் செல்லும் “இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரயில் (22191) ஜபல்பூர் நிலையத்தின் 6 ஆவது நடைமேடையை நோக்கி வந்து கொண்டிருந்த போது சுமார் 50 மீட்டர் தூரத்தில் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது” என்று அந்த அதிகாரி கூறினார்.
மேலும் ரயில் மெதுவாக வந்ததால் நல்வாய்ப்பாக பெரும் உயிரிழப்பு, சேதங்கள் போன்ற அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை என்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
இந்தூர்-ஜபல்பூர் விரைவு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்ட சம்பவம் ரயில் பயணிகள் மற்றும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.