ஆளுநர் ரவிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதிலடி
சென்னை, செப்.7- அரசுப் பள்ளி மாநில பாடத்திட்டம் பற்றி குறைகூறுவது ஆசிரியர் களையும், மாணவர்களையும் அவமானப்படுத்துவதற்கு சமம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
கருத்தரங்கம்
சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் நடந்த சொற் பொழிவு நிகழ்ச்சி சர்ச்சை ஆன நிலையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் “கல்வியே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று (6.9.2024) நடத்தப் பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில், சர்ச்சைக்குள் ளான சொற்பொழிவின்போது சொற்பொழிவாளர் பேச்சில் குறுக்கிட்டு எதிர்ப்பு தெரி வித்த பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஆசிரியர் சங்கருக்கு அமைச்சர் பொன்னாடை போர்த்தி பாராட்டுதெரிவித் தார்.
பின்னர் அமைச்சர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:-
பள்ளிகளில் சொற்பொழிவு ஆற்றிய விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிகழ்வில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் 3 நாள்களுக்குள் உரிய நடவ டிக்கை துறை ரீதியாக எடுக் கப்படும்.
சும்மா விட மாட்டேன்
சம்பந்தப்பட்ட சொற்பொழி வாளரை பள்ளி மேலாண்மை குழு மூலமாக அழைத்து வந்தார்களா? அல்லது தலைமை ஆசிரியர் அழைத்து வந்தாரா? அல்லது உயர் அதிகாரிகளின் அனுமதியுடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதா? என எழுத்துப் பூர்வமாக விளக்கம் பெறப்பட இருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் வேதனை அளிக்கக் கூடிய வகையில் உள்ளது ஒரு அறிக்கையை வெளியிடும்போது கூட பல்வேறு விடயங்களை பின்பற்றவேண்டும் என நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம். ஆனால் அதையும் மீறி இது போன்ற நிகழ்வுகள் நடந்து இருப்பது கண்டிக்கத்தக்கது. சொற்பொழிவு தொடர்பான காட்சிப் பதிவை வைத்து சொற்பொழிவாளர் மகா விஷ்ணு மீது உரிய நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும். என்னுடைய ‘ஏரியா’வுக்கு வந்து என்னுடைய ஆசிரியரை அவமா னப்படுத்தி விட்டு சென்று இருக்கிறார்.இதை நான் சும்மா விட மாட்டேன். காவல்துறையில் மகாவிஷ்ணு மீது புகார் தெரிவிக்கப்படும்.
சமரசம் இல்லை
என்னுடன் அவர் ஒளிப் படம் எடுத்துக்கொண்டதால் அவரை பேச அனுமதித்ததாகக் கூறுவது தவறான செய்தி. எந்தவிதத்திலும் கொள்கை யில் சமரசம் செய்து கொள்ளாத அரசு இந்த திராவிட மாடல் அரசு.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நிதியை பெறுவ தில் கூட நாங்கள் சமரசம் செய்து கொள்ளவில்லை.
தன்னம்பிக்கையூட்டும் வகையில் பேசுகிற சொற்பொழி வாளரை பள்ளிக்கு அழைக் கும்போது அவருடைய பின் புலத்தை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆளுநருக்கு அமைச்சர் பதில்
தமிழ்நாட்டில் அரசு பள் ளிகளின் நிலை பற்றியும். மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமை ஆகியிருப்பதை பற்றியும் ஆளுநர் ஆர்.என்.ரவி 5.9.2024 அன்று பேசியிருந்தார். அது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் செய்தி யாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
போதைப்பொருள், கஞ்சா விற்பனை செய்பவர்களின் சொத்துகள் அனைத்தையும் முடக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இரும்புக் கரம் கொண்டு போதைப்பொருள் கலாச்சாரத்தை அடக்கிக் கொண்டு வருகிறார்.
தற்போது ஆளுநர் போதைப்பொருள் தொடர் பாக சில கருத்துகளை கூறி யிருக்கிறார். அவர் அதைப் பற்றி மட்டுமா சொல்லி இருக்கிறார். நம்முடைய பாடத்திட் டத்தை பற்றியும் பேசி உள்ளார். இதை அவர் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.
அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் அனைவரும் வீணாய் போய்விட்டார்களா? அரசுப் பள்ளிகளை பற்றி யார் குறை சொன்னாலும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக நான் கண்டனம் தெரிவிக்கிறேன். மாநில பாடத்திட்டத்தையும், அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளையும் பற்றி பேசுவது எங்களுடைய ஆசிரி யர்களையும், மாணவர்களையும் அவமானப்படுத்துவதற்கு சமம். அரசுப் பள்ளிகளில் படித்தவர் கள் பலர் பெரிய பெரிய இடங் களில் இருக்கிறார்கள் அது எங்களுக்கு பெருமை.
இவ்வாறு அவர் கூறினார்.
அடாவடி பேச்சாளர் பேசியபோது குறுக்கிட்டு
ஆசிரியர் சங்கர் பேசியது என்ன?
சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு பேசியபோது பார்வையற்ற மாற் றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் குறுக்கிட்டு சொற்பொழிவாளரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த விவகாரம்குறித்து ஆசிரியர் சங்கர் கூறியதாவது:-
நடைமுறைக்கு ஒத்துவராத முற்பிறவி, மறுபிறவி பற்றி அவர் பேசினார். இதையெல்லாம் நான் ‘பேசக்கூடாது என்று சொன்னேன். முற்பிறவியில் செய்த பாவத்தின் விளைவால்தான், கண், கால் இல்லாமல் இந்த பிறவியில் சிலர் பிறப்பதாக கூறினார்.
ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளிகளை பாதிக்கும் வகையில் அவர் பேசினார். அவ்வாறு பேசக்கூடாது. முற்பிறவியில்நாம் என்ன செய்தோம் என்று யாருக்கும் தெரியாது. முற்பிறவி என்பது உண்மையா என்றும் தெரியாது.
பள்ளிக்கூடம் என்பது சமத்துவம் நிறைந்த இடம். இங்கே ஒரு குறிப்பிட்ட மதக்கொள்கை பற்றி பேசுவதை அனுமதிக்க முடியாது என்று சொன்னேன். ஆனால் அவரோ எனது மதத்தை பற்றியும், எனது ஜாதியை பற்றியும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினார். நான் அதனை வெளிப்படுத்தவில்லை.
-இவ்வாறு அவர் கூறினார்.