சென்னை, செப். 7- கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலையில் தொடங்கி, அண்ணா சாலையில் உள்ள தந்தை பெரியார் சிலை வரை சென்னை நாள் வரலாற்று நடைப்பயணம் நடைபெற்றது. மூத்த ஊடகவியலாளர் கோவி.லெனின் நெறியாள்கை செய்தார்.
சென்னை நாள் நடைப்பயண வரலாறு!
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில் 2014 ஆம் ஆண்டு முதல் சென்னை நாளை முன்னிட்டு, அதிகாலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. திராவிடர் இயக்கத்தின் வரலாற்றைச் சுமந்து நிற்கும் இடங்களைத் தேடிச் சென்று, அந்த வரலாற்றுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதுதான் இந்த சென்னை நாள் வரலாற்று நடைப்பயணத்தின் நோக்கம். தியாகராயர் நகரில் தொடங்கிய இந்த நடைப்பயணம் திருவல்லிக்கேணி, ராயபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள குடியம் குகைகள், கீழடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இதுவரை 11 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கரோனா தொற்றுக் காலங்களில் கூட இந்த வரலாற்று நடை இணைய வழியில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
திராவிடர் இயக்க வரலாற்றுத் தடங்கள்!
22.08.2024 அன்று ”385ஆவது சென்னை நாளை” முன்னிட்டு, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பாக அதே நாளில் (22.08.2024) காலை 6மணி முதல் காலை 9 மணி வரை இந்த வரலாற்று நடைப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை, ராணிமேரி கல்லூரி, டி.ஜி.பி. அலுவலகம், ராஜூ (கிராமணி)த் தோட்டம், மீர்சாகிப்பேட்டை, ஏ.வி.எம்.ராஜேஸ்வரி அறக்கட்டளை அரங்கம், மியூசிக் அகாடமி, வெல்கம் ஹோட்டல், திலகர் பவனம், போயஸ் கார்டன், செம்மொழிப் பூங்கா, அண்ணா மேம்பாலம், புதிய தந்தை பெரியார் வளைவுப் பூங்கா, தந்தை பெரியார் சிலை ஆகிய 13 இடங்களில், திராவிடர் இயக்கத்தின் வரலாற்றுச் சுவடுகள் எப்படி பின்னிப் பிணைந்துள்ளன என்பதை நினைவு கூர்ந்த வண்ணம் இப்பயணம் நடைபெற்றது. ஆர்.கே.சாலை மற்றும் கதீட்ரல் சாலை ஆகிய இரண்டு சாலைகளில் மட்டுமே 13 இடங்கள் திராவிடர் இயக்கத்தின் வரலாற்றைச் சுமந்து நிற்பவை என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் இருபால் தோழர்கள் 22 பேர் கலந்து கொண்டனர். மூத்த ஊடகவியலாளர் கோவி.லெனின் நிகழ்வை நெறியாள்கை செய்தார்.
பார்ப்பனரல்லாதார் அறிக்கைக்கான கலந்துரையாடல் நடைபெற்ற இடம்!
இந்தப் பயணத்தில், சென்னையில் மயிலாப்பூர் சீனிவாச அய்யங்கார் வீட்டில் சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன் காந்திக்கு அளிக்கப்பட்ட மரியாதை என்ன? பின்னர் காந்திக்கு கிடைத்த மரியாதை என்ன? என்பதை விளக்கி, காந்திக்கே சுயமரியாதையைப் பெற்றுத் தந்தது பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தான் என்பன போன்ற முக்கியமான தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. ராணி மேரி கல்லூரி வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட இடம் தேர்வு செய்ததும், அதன் தொடர்ச்சியாக அங்கு நடந்த போராட்டங்களும், அதில் திராவிடர் இயக்கத்தின் பங்களிப்பு போன்றவை ராணிமேரி கல்லூரி முன்பாக நின்றுகொண்டு அசைபோடப்பட்டன. தொடர்ந்து மயிலாப்பூர் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்ட சின்னக் குத்தூசி பற்றிய அரிய வரலாற்றுத் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. ஆர்.கே. சாலையில் பிரிட்டிஷ் அரசாட்சி இருந்த போது ஹாமில்டன் பிரிட்ஜ் என்ற பெயருள்ள பாலம், இதுதான் பின்னாளில் அம்பட்டன் வாராவதி என்று திரிபு செய்யப்பட்டது. இன்று அந்த இடத்தில் அம்பேத்கர் பாலம் இருக்கிறது என்பன போன்ற முக்கியமான தகவல்கள் அம்பேத்கர் பாலம் முன் கூடிநின்று பகிர்ந்து கொள்ளப்பட்டன. அந்த ஹாமில்டன் பிரிட்ஜ் அருகில்தான் பிட்டி தியாகராயர் முதன் முதலில் பார்ப்பனரல்லாதார் பற்றிப் பேசினார் என்றும், அதற்கு பக்கத்தில் இன்றைக்கு சிட்டி சென்டர் இருக்கும் இடத்தில்தான் பார்ப்பனரல்லாதார் அறிக்கை உருவாவதற்கான கலந்துரையாடல் நடைபெற்றது என்கிற அரிய வரலாற்றுத் தகவலையும் வழங்கினார் லெனின். நீதிக்கட்சியின் தோற்றுநர்களில் ஒருவரான டாக்டர் நடேசனார் பெயரில் இருக்கும் சாலையைச் சுட்டிக்காட்டி, நீதிக்கட்சி தோன் றுவதற்கு முன் நடேசனார் திராவிட மக்கள் கல்வி வளர்ச்சிக்கு செய்த அரிய செயல்கள் நன்றியுடன் நினைவு கூறப்பட்டன.
மியூசிக் அகடாமியில் தமிழிசை புறக்கணிப்பு!
அதே போல் ஆர்.கே. சாலையில் இருக்கும் மீர்சாகிப் பேட்டை தான், பிட்டி தியாகராயர் மாநகரத் தந்தையாக இருந்த காலத்தில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பகலுணவு தொடங்கிய பிறகு விரிவாக்கம் செய்யப்பட்ட இடம் என்பது அரிய வரலாற்றுத் தகவலாக இருந்தது. அந்தப் பகுதியில் உள்ள லட்சுமிபுரம் யுவர் சங்கத்தில் (பார்ப்பனர் இளைஞர் சங்கம்) தந்தை பெரியார் பேசியதையும், என்ன பேசினார் என்பதையும் கோவி.லெனின் தரவுகளோடு விவரித்தார். ஏ.வி.எம். ராஜேஸ்வரி அரங்கத்தில் நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் தான் தந்தை பெரியார் வழிகாட்டுதலில் கலைஞர் தி.மு.க. தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் என்பதையும், இந்தியாவில் ஊழல் குற்றச்சாட்டுக்கு முதலில் உள்ளானவர் டி.டி.கே கிருஷ்ணமாச்சாரி என்பவர் தான் என்பதும், முந்த்ரா ஊழல் பற்றியும் சில செய்திகள் நடையின் ஊடே வெளிவந்தன. அதே மியூசிக் அகாடமிக்கு அருகில் இருக்கும் பாலம் கட்டியதில் ஊழல் என்று குற்றம் சாட்டப்பட்டு, அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கலைஞர் கைது செய்யப்பட்டார்.
அந்தப் பாலத்தைக் கட்டியவர் இன்றைய முதலமைச்சரும், அன்றைய சென்னை மாநகர மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் என்றும், அந்தப் பாலம் இன்னமும் சிறப்பாக பயன்பட்டுக் கொண்டுள்ளது என்பதையும், ஊழல் குற்றச்சாட்டு வெறும் குற்றச்சாட்டோடு நின்றுவிட்டது என்ற வரலாற்று உண்மையையும் எடுத்துரைத்தார்.
மியூசிக் அகாடமியின் முன் நின்று, அன்றைக்கு அங்கு தொடர்ந்து தமி ழிசை புறக்கணிக்கப்பட்டதையும், இந்துமதப் பிரச்சாரகராக இருந்த பார்ப்பனரல்லாதாரான கிருபானந்தவாரியாரே புறக்கணிக்கப் பட்டதையும், அதை முதலமைச்சராக இருந்த கல்வி வள்ளல் காமராஜர் முறியடித்தது போன்ற பல்வேறு அரிய வரலாற்று நிகழ்வுகள் அங்கு நடைபெற்ற உரையாடலில் இடம் பெற்றன. கதீட்ரல் சாலையில் 1938 இல் நடைபெற்ற முதல் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் பற்றியும், அறிஞர் அண்ணா இங்கு ஆற்றிய உரைக்காகத்தான் கைது செய்யப்பட்டார் என்பதையும் கோவி. லெனின் பகிர்ந்துகொண்டார்.
டி.கே.எஸ். உரையும், பாராட்டும்!
காலை 7 மணியளவில் தி.மு.க. மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், செய்தித் தொடர்பாளருமான டி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் Yellow pages அலுவலகம் அருகில் வந்து கொண்டிருந்த நடைப்பயணத்தில் கலந்து கொண்டதோடு, திராவிடர் இயக்கத் தலைவர்கள் சென்னை நகரின் வளர்ச்சிக்கு ஆற்றிய அரும், பெரும் பணிகளை தோழர்களிடம் உணர்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். சென்னை நாளைப் பற்றி பெரும்பாலான மக்கள் கவலைப்படாமல் இருக்கும் போது, சென்னை நகரில் திராவிடர் இயக்கத்தின் சுவடுகளைத் தேடிச்சென்று நேரில் கண்டு, அதன் வரலாற்றுப் பின்னணியை அறிந்து கொள்ளும் ஆவலுடன் வந்திருக்கும் தோழர்களை மனதாரப் பாராட்டி, விடை பெற்றுக் கொண்டார்.
அண்ணா மேம்பாலத்தில் பெரியார் பூங்கா!
அடுத்து செம்மொழிப் பூங்கா, அதன் பிறகு 51 ஆண்டுகள் வயதை எட்டியுள்ள, கலைஞர் முதலமைச்சராக இருந்து கட்டிய அண்ணா மேம்பாலம் பற்றியும், இன்றைய திராவிட மாடல் ஆட்சியில் ஆயிரம் விளக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் அவர்களின் முயற்சியால் அண்ணா மேம்பாலத்தின் கீழே குப்பையும், கூளமுமாக இருந்த இடம் இன்று, தந்தை பெரியார் வளைவுப் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது பற்றியும் பெருமிதத்தோடு நினைவு கூரப்பட்டது. அடுத்து அந்த பூங்காவினுள் இருக்கும் பீடத்துடன் உயர்ந்தோங்கி நிற்கும் தந்தை பெரியார் சிலை, அதன் பின்னணி என ஏராளமான வரலாற்றுத் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இயல்பான எழுந்த கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது.
கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்கள்!
தோழர்கள் இராமச்சந்திரன், பாபு ஜனார்த்தனம், ராம்பிரசாத், பொன் மூர்த்தி, கார்த்திக், வழக்குரைஞர் வேல வன், பரமேஸ்வரன், ஆர்.எஸ். கதிர், மருத்துவர் சங்கீதா, அபிநயா, கவுரா பதிப்பகம் இராஜசேகரன், சீனிவாசன், லயோலா கல்லூரி மாணவர்கள் வர்ஷா, மணிபாரதி, ரோஷன், ஊடகவியலாளர்கள் வ.ம.வேலவன், கவுதமன், நிலவன், ஒருங்கிணைப்பாளர்களாக ச.பிரின்சு என்னாரெசு பெரியார், உடுமலை வடிவேல், நெறியாள்கையாளராக மூத்த ஊடகவியலாளர் கோவி.லெனின் ஆகியோர் கலந்துகொண்டனர்.