புதுடில்லி செப்.5 பசுப் பாதுகாப்புக் குழுவால் பள்ளி மாணவர் கொல்லப்பட்டது பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசுவாரா என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வெறுப்பை பரப்புவதற்கு அளித்த ஊக்குவிப்பின் காரணமாக இந்த நிகழ்வு நடந்ததாக அவர் குற்றம்சாட்டினார். அரியாணா மாநிலத்தில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர், தனது நண்பர்களின் காரில் சென்றபோது, பசுவைக் கடத்துவதாக நினைத்து பசுப் பாதுகாப்புக் குழுவினரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கபில் சிபல் எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
“அவமானம், அரியானாவில் பசுவை கடத்துபவர் என்று தவறுதலாக 12ஆம் வகுப்பு மாணவர் ஆரியன் மிஸ்ரா, பசுப் பாதுகாப்புக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
வெறுப்பை பரப்புவதற்கு ஊக்குவிப்பதே இதற்கான காரணம். நமது பிரதமரும், குடியரசுத் துணைத் தலைவரும், உள்துறை அமைச்சரும் இதுகுறித்து பேசுவார்களா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அரியானாவில் கடந்த வாரம் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சபீா் மாலிக் என்ற புலம்பெயா் தொழிலாளி மாட்டிறைச்சி சாப்பிட்டதாக சந்தேகம் எழுந்ததையடுத்து அவரை பசுப் பாதுகாப்புக் குழுவைச் சோ்ந்த 5 போ் அடித்துக்கொலை செய்துள் ளனா்.
அரியானா மாநிலத்தில் அடுத்தடுத்து இரண்டு பேர் பசுப் பாதுகாப்புக் குழுவினரால் தவறுதலாக அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில்
ரகசிய பூஜையா?
வெள்ளக்கோவில், செப். 5 வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் ரகசிய பூஜை நடத்தியதாக வந்த புகாருக்கு விளக்கம் கேட்டு காவல் ஆய்வாளருக்கு மெமோ அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் ஞானப்பிரகாசம் ஏற்பாட்டின் பேரில், காவல் நிலையத்தில் ரகசிய பூஜை ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடைபெற்றாகக் கூறப்படுகிறது. அதிகரித்துள்ள குற்ற நிகழ்வுகளைக் குறைக்கும் வகையில் இந்த ரகசிய பூஜை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அரசு விதிமுறைகளை மீறி பூஜை நடத்திய காவல் ஆய்வாளா், உடந்தையாக இருந்த காவல்துறையினர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினா், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், திராவிடா் கழகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், புரட்சிகர இளைஞர் முன்னணியினர் உள்பட பல்வேறு தரப்பினா் காங்கயம் காவல் துணைக் கண்காணிப்பாளா் மாயவனிடம் புகாா் அளித்தனா்.
இந்நிகழ்வு குறித்து விளக்கம் கேட்டு வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளருக்கு, திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா மெமோ அளித்துள்ளார்.