புதுடில்லி, செப்.3- முல்லைப்பெரியாறு அணை உறுதியாக இருக் கிறதா? என்பது பற்றி மீண்டும் ஆய்வு நடத்த ஒன்றிய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்திருக்கிறது.
முல்லைப்பெரியாறு அணை: கேரளாவில் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையை தமிழ்நாடு அரசு பராமரித்து வருகிறது. இந்த அணையால் கேரளத்துக்கு ஆபத்து இருப்பதாகவும். அங்கு புதிய அணையை கட்ட வேண்டும் என்று அந்த மாநில அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
இதனால் அணையின் முழு கொள்ளளவுக்கு தண்ணீரை தேக்க எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து நிபுணர் குழு அந்த அணையை ஆய்வு செய்து அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் 142 அடி வரை நீரை தேக்கி வைக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருப்பினும் கேரள அரசு, பழைய அணையின் கீழ்பகுதியில் புதிய அணை கட்ட தொடர்ந்து முயற்சி செய்து. இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. இதனால் முல்லைப்பெரியாறு அணையின் உறுதித்தன்மை குறித்து மீண்டும் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என கேரள அரசு மற்றொரு வழியில் நெருக்கடி கொடுத்தது.
ஆய்வுக்கு ஒப்புதல்: இந்த நிலையில் அணையின் உறுதித்தன்மை விவகாரம் தொடர்பாக விவாதிக்க டில்லியில் நேற்று (2.9.2024) ஒன்றிய நீர்வள ஆணைய அதிகாரிகள் கூட்டம் நடத்தினர்.
இதில் இரு மாநில அதிகாரிகளும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். தமிழ்நாடு அதிகாரிகள் 2021ஆம் ஆண்டின் அணை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என கூறினர்.
ஆனால் கேரள அதிகாரிகள், சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு விடயங்களையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் எடுத்துக்கூறி ஆய்வு நடத்த வேண்டியது அவசியம் என தெரிவித்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீர்வள ஆணையம் அணையின் உறுதித்தன்மையை ஆய்வு செய்வது அவசியம் எனக்கூறி, 12 மாதங்களுக்குள் விரிவாக ஆய்வை நடத்தி முடித்துக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.