ஜம்மு, செப்.3- காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி. 2 பெண் பக்தர்கள் பலியானார்கள். வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்றபோது அவர்களுக்கு இந்த விபத்து ஏற்பட்டது.
காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வைஷ்ணவி தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாடு முழுவதி லும் இருந்து பக்தர்கள் செல்வது வழக்கம். அதுபோல் நேற்றும் (2.9.2024) பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தனர். பாஞ்சி அருகே. வைஷ்ணவிதேவி கோவிலுக்கு செல்லும் பாதையில் நேற்று திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது. பெரிய கற்களும், மண்ணும் சரிந்து விழுந்தது. இதனால் இரும்பு தடுப்புகளும், தூண்களும் உடைந்து விழுந்தன .
2 பெண்கள் பலி
இந்த நிலச்சரிவில், கோவிலுக்கு சென்ற 2 பெண் பக்தர்கள் சிக்கிக்கொண்டனர். இடிபாடுகளில் சிக்கி, படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் ஒரு சிறுமி படுகாயம் அடைந்தார். சம்பவ இடத்துக்கு மீட்புப் படையினர் உடனடியாக விரைந்து சென்று, படுகாயம் அடைந்த சிறுமியை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பக்தர்களுக்கு தடை
நிலச்சரிவு காரணமாக, அந்த பாதை துண்டிக் கப்பட்டுள்ளதால், அந்த வழியாக செல்வதற்கு பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக ரியாசி மாவட்ட காவல்துறை துணை ஆணையர் விஷேஷ் பால் மகாஜன் தெரிவித்தார். மேலும் அங்கு சீரமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், பக்தர்களுக்காக சிறப்பு முகாமும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு புத்தாண்டுதினத்தன்று, ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பக்தர்கள் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்ரிநாத்திலும் நிலச்சரிவு: இதேபோல் உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட் டத்தில் உள்ள பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. சிம்லி மார்க்கெட்டில் உள்ள 7 கடைகள் நிலச்சரிவில் சிக்கி சேதமடைந்தன.
நிலச்சரிவு காரணமாக பகல்நாலா, படல்கங்கா மற்றும் நந்தபிரயாக் ஆகிய இடங்களில் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது, கர்ணபிரயாக்- குவால்டாம் தேசிய நெடுஞ்சாலை உட்பட இந்தியா- சீனா எல்லையை இணைக்கும் ஜோதிர்மத்-மலாரி சாலையும் நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பேரிடர் மேலாண்மை மய்யம் தெரிவித்துள்ளது.