புதுடில்லி, செப்.3 ‘குற்றவாளி என்பதற்காக ஒருவருடைய வீட்டை எப்படி இடிக்க முடியும்?’ என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், புல்டோசா் கொண்டு வீடுகளை இடிக்கும் விவகாரம் தொடா்பாக நாடு முழுவதற்குமான உரிய வழிகாட்டுதல் வெளியிடப்படும் என்று தெரிவித்தது.
ஒன்றிய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துபவா்களின் வீடுகளை புல்டோசா்கள் மூலம் மாநில அரசுகள் இடிப்பதாகப் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட கொடூர குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களின் வீடுகளும் மாவட்ட நிர்வாகத்தால் புல்டோசா்கள் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்படுகின்றன.குறிப்பாக உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் இந்த நடைமுறை அதிகரித்து வருகிறது.
இதற்கு எதிராக ஜாமியாத் உலாமா-அய்-ஹிந்த் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘அரசுக்கு எதிராக போராட்டத் தில் ஈடுபட்டதற்காக, டில்லி ஜஹாங் கீா்புரியில் உள்ள போராட்டக்காரா்களின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. குடியிருப்புவாசிகளுக்கு உரிய முன்ன றிவுப்புகள் எதுவும் அளிக்காமல், இது போன்ற நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்கின்றன. உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற நடைமுறைகளுக்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி. விசுவநாதன் ஆகியோர் அடங்கிய அமா்வில் நேற்று (2.9.2024) விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘குற்ற வழக்கில் தொடா்புடையவா் அல்லது குற்றவாளி என்பதற்காக ஒருவரின் வீட்டை எப்படி இடிக்க முடியும்? உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் இதுபோன்று செய்ய முடியாது. இது தொடா்பாக, நாடு முழுமைக்குமான வழிகாட்டுதலை உச்சநீதிமன்றம் வகுக்கும்’ என்றனா்.
அப்போது, உத்தரப்பிரதேச மாநில அரசுத் தரப்பில் ஆஜரான சொலி சிட்டா் ஜெனரல் துஷார் மேத்தா, ‘இந்த விவகாரம் தொடா்பாக மாநில அரசுத் தரப்பில் ஏற்கெனவே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்கள் மட்டுமே உரிய முன்னறிவிப்பு செய்யப்பட்டு இடிக்கப்படுகின்றன என்பதை மாநில அரசு பதில் மனுவில் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், குற்றவாளிகளின் வீடுகள் குறிவைத்து இடிக்கப்படுவதாக மனுதாரா்கள் சித்தரிக்கின்றனா்’ என்றார்.
அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தேவ் ‘அரசுக்கு எதிராகப் போராடுபவா்களுக்கு புல்டோசா் நீதி வழங்கப்படாது என்ற அரசுத் தரப்பு அறிக்கையை நாடு முழுமைக்கும் பதிவு செய்ய அறிவுறுத்த வேண்டும். ஏனெனில், தற்போது அனைத்து மாநிலங்களும் இந்த நடைமுறையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளன’ என்றார். மற்றொரு மனுதாரா் தரப்பில் ஆஜரான சி.யு.சிங், மற்ற மாநிலங்களிலும் புல்டோசா்கள் கொண்டு வீடுகள் இடிக்கப்பட்டதற்கான ஆதாரங்களைச் சமா்ப்பித்தார்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்த விவகாரம் தொடா் பாக நாடு முழுவதற்குமான உரிய வழிகாட்டுதலை உச்சநீதிமன்றம் வகுக் கும்’ என்று குறிப்பிட்டு, விசாரணையை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.