தமிழுக்காக உயிரையே பணயம் வைக்கும் போராளிகளை உருவாக்கிய புலவர் சி.இலக்குவனார் நினைவு நாள் இன்று (1973 செப் 3).
பி.ஏ.ஆனர்ஸ் எனும் படிப்பு மாறி எம்.ஏ. படிப்பு அறிமுகமானபோது தமிழ் பாடத்தை எடுத்துவிடலாம் என 1959-ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தினர் முடிவு செய்தனர். அப்படி தமிழ் பாடத்தை நீக்குவது தவறு என ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது அங்கு வந்து இருந்த செட்டிநாட்டு அரசர் முத்தையா செட்டியார் தமிழ் படித்து பலர் வேலை தேடி திண்டாடுகிறார்கள். எனவே இந்த முடிவு எனது முடிவே என்று கூறியுள்ளார். அரசர் முடிவு என்று தெரிந்தும் இலக்குவனார் விடவில்லை. “உங்கள் தந்தையார் அண்ணாமலை அரசர் இந்த நிறுவனத்தை தமிழுக்கு முதன்மை அளிக்கவே தொடங்கியதாக கூறினாரே? நீங்கள் உங்கள் தந்தையார் போலவே தமிழைப் போற்ற வேண்டாமா என்று அரசரையே கேட்கவும் அரசர் தமது வாதத்தை கைவிட்டு இனி எப்போதும் என் பல்கலைக்கழகம் தமிழுக்கு முதன்மையளிக்கும்” என்று கூறினார். மிகத்துணிச்சலாக அரசருடன் வாதாடி தமிழ் படிப்பு தொடங்கிட வழிவகுத்த இலக்குவனாரை அனைவரும் பாராட்டினர்.
கலைஞரின் ஆசிரியர்
இலக்குவனாரின் இந்த போராட்ட குணம் பல போராளிகளை உருவாக்க வழி வகுத்தது. திருவாரூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் அவரிடம் 9, 10-ஆம் வகுப்புகளில் படித்த மாணவர் தான் கலைஞர். அதன் பின்னர் அவர் திரு நெல்வேலி மா.தி.தா. இந்துக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய போது அவரிடம் இரண்டு ஆண்டுகள் படித்த மாணவர் தான் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் இரா.நல்லக்கண்ணு. மதுரை தியாகராஜர் கல்லூரியில் அவர் பேராசிரியராக பணியாற்றியபோது அவரிடம் படித்த காளிமுத்து, நா.காமராசர் இருவரும் ஹிந்தி ஆட்சி மொழி சட்டத்தை எதிர்த்து சிறை சென்ற போராளிகள். நெஞ்சுக்கு நீதியில் கலைஞர் “அவர் மாணவர்களை உருவாக்கினார் என்பதை விட தமிழ் உரிமைக்கான போராளிகளை உருவாக்கினார் என்பதே பொருந்தும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தி.மு.க. பிரிந்த போது தந்தை பெரியாருடன் தமிழ்நாடெங்கும் சுற்றுப் பயணம் செய்தவர் பேராசிரியர் சி. இலக்கு வனார் இவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த தொல் காப்பியம் நூலைத்தான் முதலமைச்சர் அண்ணா அமெரிக்கா சென்றபோது பலருக்கும் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப்போராளி இலக்குவனாரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன். தமிழே விழி, தமிழா விழி.