கேள்வி 1: அறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்ட திராவிடச் சமுதாய சீர்திருத்த மாநாடு பழனியில் எந்த ஆண்டு நடைபெற்றது?
– இல.சீதாபதி, மேற்கு தாம்பரம்.
பதில் 1: உங்கள் கேள்வியில் ஒரு சந்தேகம். திமு.க. பிரிந்த பிறகுதான் அண்ணா அவர்கள் தலைமையில் மாவட்டங்களில் மாநாடுகள் இரு நாட்கள் நடைபெறும். முதல் நாள் மாநாடு சமுதாய சீர்திருத்த மாநாடு, இரண்டாவது நாள் மாநாடு அரசியல் மாநாடு என்ற பெயர்களில்தான் நடைபெற்றன.
– – – – –
கேள்வி 2: பகுத்தறிவுச் சமுதாயத்தை உருவாக்கிட பழனியில் அறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்ற மாநாட்டையும், ஆகஸ்ட் 24 & 25 (2024) ஆகிய இரு நாட்களில் அதே பழனியில் முருகனுக்கு ஆன்மீகப் பெருவிழா எனும் பெயரில் நடைபெற்ற மாநாட்டையும் ஒப்பீடு செய்க!
– சீதாலட்சுமி, திண்டிவனம்.
பதில் 2: எனது அறிக்கை விடுதலையில் 27-8-2024 அன்று வெளிவந்துள்ளது.அதை காண்க. அதுவே விடை!
– – – – –
கேள்வி 3: நவீன நகரங்களை உருவாக்கும் திட்டங்களுக்கான பட்டியலில் தமிழ்நாட்டில் உள்ள நகரங்கள் எதுவுமே இல்லையே?
– நா.மாயவன், மதுரை
பதில் 3: மோடி ஆட்சி – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டை நாளும் வஞ்சித்தும், தண்டித்தும் வருகிறது. மக்கள் எழுச்சியைத்தான் நாளும் தூண்டி விடுகிறது!
– – – – –
கேள்வி 4: 119 ஆண்டுகளுக்குப் பிறகு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவருக்கு ரயில்வே வாரியத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது பற்றி?
– மா.நரசிம்மன், திருநெல்வேலி
பதில் 4: சமூகநீதிப் போராட்டங்களின் வெற்றி – காலதாமத மானாலும் புறக் கணிக்க முடியாதபடி உள்ள சமூகநீதியின் தேவை என்பதுதான் அடையாளம். “அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்” என்ற பழைய பழமொழியின் புதிய விடை இது! – என்றாலும் இதனை வரவேற்கிறோம்.
– – – – –
கேள்வி 5: வட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறதே?
– க.காளிதாசன், காஞ்சி
பதில் 5: “டபுள் எஞ்ஜின் ஆட்சியில் சொல்ல வேண்டியதே இல்லை, கட்சி வேறுபாடுகள் பார்க்காமல் இதற்கு முடிவுகட்ட தீவிர இயக்கங்களும், கடுமையான சட்டப் பிரயோகமும் தேவை! தேவை!
– – – – –
கேள்வி 6: அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி அதானி பணக்காரர் பட்டியலில் முதலிடம் வந்துவிட்டாரே?
– வீ.வேங்கைமுத்து, கிருட்டினகிரி
பதில் 6: 10 ஆண்டுகால – அமிர்த கால ஒன்றிய பா.ஜ.க. அரசின் தலையாய சாதனை – அம்பானியைக் கீழே தள்ளி – ‘நம்பர் ஒன்’ ஆவது! – ஆண்டி யப்பர்கள் அன்னக் காவடிகள் நிலை! ‘வந்தே பாரத்’தான்!
– – – – –
கேள்வி 7: முதலமைச்சர் வெளிநாட்டிற்கு போகும் போதெல்லாம் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒன்றிய ஏவல் அமைப்புகள் நெருக்கடி கொடுக்கின்றனவே?
– கல.சங்கத்தமிழன், நுங்கம்பாக்கம்
பதில் 7: வாழ்க வயிற்றெரிச்சல்காரர்கள்! நம் முதலமைச்சரின் சாதனை விளைச்சல்களைக் கண்டு பொறுக்காத சிறுமையாளர்கள்! எதிர்நீச்சல் அவருக்கோ, திராவிடத்திற்கோ புதிதா என்ன?
– – – – –
கேள்வி 8: எல்லா மதத்தவரும் தங்களுக்குள் அதிகளவு வாழ்விணையேற்புகள் நடத்திக் கொள்ளும் பட்சத்தில் (மதக்) கோயில்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதா?
– பாண்டுரங்கன், சென்னை
பதில் 8: பக்தி போதைக்காகத் தானே அவைகள் – போகப்போக அந்நிலை வருவது எதிர்காலத்தில் – காலத்தின் கட்டாயம்!
– – – – –
கேள்வி 9: முதலமைச்சரின் அமெரிக்க சுற்றுப் பயணம் தமிழ்நாட்டிற்கு அதிகளவு முதலீடுகளை ஈர்க்குமா?
– மா.ஏகலைவன், செங்கை
பதில்9: நிச்சயமாக! பொறுத்திருந்து பாருங்கள்.
– – – – –
கேள்வி 10: இந்தியாவின் பல நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய்களை ஒதுக்கியுள்ள ஒன்றிய அரசு சென்னை 2ஆம் கட்ட மெட்ரோ திட்டத்திற்கு ஒரு பைசாவைக்கூட ஒதுக்கவில்லையே – ஏன் இந்த ஓரவஞ்சனை?
– கி.மாசிலாமணி, உத்திரமேரூர்
பதில் 10: கடைசி வார்த்தை – தங்கள் கேள்வியில் உள்ளதே “ஓர வஞ்சனை” அதுதான் உண்மை! பா.ஜ.க. வகையறாக்களுக்கு 100 ஆண்டுகள் கதவடைப்பு தாழ்ப்பாள்தான் இது! “கோழியும் தன் குஞ்சுகளைக் காக்க சூழ்ந்தெதிர்க்க அஞ்சாத மண் தமிழ்நாடு” என்று காட்ட வேண்டிய தருணத்திற்கு அவர்கள் நெருப்பூட்டி – நெய்யூற்றி வருகிறார்கள்!