மகாராட்டிரா, ஆக.30- தந்தை பெரியாரின் தீவிரப் பற்றாளரும் ராமாயணப் பாத்திரங்கள் என்ற நூலை ஹிந்தியில் வெளியிட்டு, உ.பி. அரசு தடை செய்த போது, கொள்கைப் பிடிப்போடு நீதிமன்றத்தில் போராடி நூலுக்கான தடையை நீக்கியதோடு மட்டுமல்லாமல், வழக்குச் செலவுத் தொகையையும் நீதிமன்றமே திரும்பச் செலுத்த உத்தரவிடும் அளவிற்கு வழக்காடிய பகுத்தறிவுவாதியுமான லலாய் சிங் யாதவின் பிறந்தநாளான
செப். 1 ஆம் தேதி அன்று அவுரங்காபாத் வாளுஜ்-சில் உள்ள மகாராட்டிரா கல்லூரி வளாகத்தில் 01.09.2024, ஞாயிற்றுக்கிழமை காலை 11:30 மணிக்குத் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளு மன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தந்தை பெரியார் சிலையைத் திறந்துவைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.
இந்த விழாவில் பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவரும், மேனாள் பீகார் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ், டில்லி மாநில மேனாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினரும் உத்தரப்பிரதேச தீவிர பகுத்தறிவுவாதியும் ‘சச்சி ராமாயண்’ நூலை பொது மேடையில் வாசித்து இதுதான் ராமனின் லட்சணம் என்று துணிச்சலோடு கூறியவருமான சுவாமி பிரசாத் மவுரியா மற்றும் மராட்டிய மாநில அம்பேத்கரிய அமைப்பினர், இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள், ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்கள், வழக்குரைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
மும்பை திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்களும் திரளாகப் பங்கேற்க உள்ளனர்.