சென்னை, ஆக.30- செங்கல்பட்டு மாவட் டம், ஊனமாஞ்சேரியைச் சேர்ந்த 35 வயது வாலிபர் ஒருவர், கடந்த 25ஆம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். சிகிச்சை பெற்று வந்த அந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி 28.8.2024 அன்று இரவு மூளைச்சாவு அடைந்தார்.
இந்த நிலையில், மூளைச்சாவு அடைந்தவ ரின் உடல் உறுப்புகளை கொடை அளிக்க அவரது குடும்பத்தினர் முன் வந்தனர்.
இதையடுத்து, அவரது 2 சிறு நீரகங்கள்,கல்லீரல், நுரையீரல், கால் எலும்பு (பிபுலா), இதய வால்வுகள், சிறுகுடல் ஆகியவை கொடையாகப் பெறப்பட்டன. சிறு குடலை கொடையாகப் பெறுவது ராஜீவ்காந்தி மருத்துவமனை வரலாற்றிலேயே இதுவே முதன்முறை ஆகும். சிறுநீரகம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கும், நுரையீரல் மற்றும் சிறு குடல் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும். இதய வால்வு முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன.
இந்த உடல் உறுப்பு கொடையின் மூலம் 7 பேர் மறுவாழ்வு பெற்றனர். உறுப்பு கொடை செய்த வாலிபருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜன் மற்றும் மருத்துவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.