சென்னை, ஆக.29 தஞ்சாவூரில் சோழர் அருங்காட் சியகமும், சென்னை சேப்பாக்கம் ஹூமாயூன் மகாலில் சுதந்திர நாள் அருங்காட்சியகமும் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார்.
சென்னை நாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அருங்காட்சியகங்கள் துறை சார்பில், நேற்று (28.8.2024) சென்னை அருங்காட்சியகத்தில் ‘பண்பாடு – ஒரு மீள்பார்வை’ என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கை தொடங்கி வைத்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:
“சென்னை அரசு அருங்காட்சியகத்தில் பெருநகர சென்னையின் பெருமையைப் பேசும் விதமாக ‘சென்னை நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த 1639-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி தற்போது புனித ஜார்ஜ் கோட்டை அமைந்துள்ள நிலப் பரப்பை ஆங்கிலேயர்கள் வாங்கினார்கள். அந்த நாள் இதுவரை சென்னை நாளாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சென்னையின் 385-ஆவது பிறந்த நாளை பெருமையாக அருங்காட்சியகம் கொண்டாடி வருகிறது.
தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத் துறையை மேலும் வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மாபெரும் சோழர் அருங்காட்சியகத்தை தஞ்சாவூரில் அமைக்க உள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்களிப்பை அறியச் செய்கின்ற வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் ஒன்று சென்னை ஹூமாயூன் மகாலில் அமைக்கப்பட உள்ளது என்றார் அவர்.