ராமேசுவரம், ஆக. 28- ராமநாதபுரம் மாவட்டம், கள்ளிக்கோட்டை சிவன் கோயிலில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு துண்டுக் கல்வெட்டுகளை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டெடுத்துள்ளது.
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இடிந்த நிலையில் உள்ள கள்ளிக்கோட்டை சிவன் கோயிலை ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கு இரு துண்டுக் கல்வெட்டுகளைக் கண்டுபிடித்து படியெடுத்து ஆய்வு செய்தார்.
இதுபற்றி வே.ராஜகுரு கூறியதாவது; இந்த கோயிலில் சிவன் சன்னிதியில் ஆறு துண்டுக் கல்வெட்டுகளையும், அம்மன் சன்னிதியில் ஒரு கல்வெட்டையும் அமர்நாத் ராமகிருஷ்ணா குழுவினர் ஏற்கெனவே பதிவு செய்துள்ளனர். தற்போது புதியதாக சிவன் சன்னிதியில் முன்மண்டபத்தின் கீழே ஜகதியின் பக்கவாட்டிலும், மேற்பகுதியிலும் இந்த இரண்டு துண்டுக் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் கி.பி.13ஆம் நூற்றாண்டு மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலக் கல்வெட்டுகள் ஆகும்.
இதில் இரண்டு வரிகள் உள்ள ஒரு கல்வெட்டில் ‘சிறீகோமாறபன்மறான திரிபுவனச் சக்கரவத்தி’ எனக் குறிப்பிடப்படுவது முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டி யனையும், மற்றொரு 4 வரிகள் கொண்ட கல்வெட்டில், இக்கோயிலுக்கு தேவதானமாக வழங்கப்பட்ட நிலத்தில் அய்ப்பசிக் குறுவை விளையும் கலத்துக்கு ஒன்று பாதியும், (சந்தி) விக்கிரகப்பேறு ஆகிய வரிகளும் குறிப் பிடப்பட்டுள்ளன. இதில் மிழலைக்கூற்றம், திருக்கானப்பேற் கூற்றம் ஆகிய கூற்றங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.