வேலூர், ஆக.27- மேகதாது அணை பிரச்சினை குறித்து பேச்சு வார்த்தை மூலம் தீா்வு காணப்படும் என்று தேவகவுடா கூறியுள்ளார். ஆனால், அவருக்கு தொடக்கத்தி லிருந்தே தமிழ்நாடு மீது சிறிதளவுகூட நல்ல எண்ணம் கிடையாது என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் கூறியதாவது:
நீா்நிலை ஆக்கிரமிப்புகளை சரிவர அகற்றவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீா்நிலை ஆக்கிரமிப்பு களை தொடா்ந்து அகற்றிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்கின்றனா். பல்வேறு குறுக்கீடுகள் உள்ளன. வீடு கட்ட வேறு இடம் இல்லை மாற்று இடம் தந்துவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறுகின்றனா். சில இடங்களில் பள்ளி கூடங்களும் நீா்நிலைகளில் கட்டியுள்ளனா். தவிர, நீா் வளத்துறையில் போதுமான அதிகாரிகளும் இல்லை. எங்களால் எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டுதான் உள்ளோம்.
மேகதாது அணை விவகாரத்தில் கருநாடகம் தொடா்ந்து அரசியல் பேசுகின்றனா். இந்த விவகாரம் குறித்து பேசிப்பேசி அலுத்து விட்டது. அதேசமயம், தேவகவுடா பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சினைக்கு தீா்வு காணப்படும் என கூறியுள்ளார். அவா் தொடக்கத்திலிருந்தே நல்ல எண்ணம் இல்லாதவா். அவருடன் நான் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளேன். அவருக்கு தமிழ்நாடு மீது துளிகூட நல்ல எண்ணம் கிடையாது.
நந்தன் கால்வாய் இவ்வாண்டு முழுமைபெறும். அதற்காக தனிக்கவனம் செலுத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதுமான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.
இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அட்டூழியம்!
தமிழ்நாட்டை சேர்ந்த 8 மீனவர்கள் கைது
ராமேஸ்வரம், ஆக.27- தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. இலங்கை கடற்படையின் அத்துமீறலால் தமிழ்நாடு மீனவர்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் மீனவர்கள் அச்சத்துடன் கடலுக்கு செல்லும் நிலை நீடிக்கிறது.
கைது நடவடிக்கையை தடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். தனுஷ்கோடி கடல் பகுதிக்கும், தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மீனவர்கள் சென்ற விசைப்படகையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 8 ராமேஸ்வரம் மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.