எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். அகில இந்திய கலந்தாய்வு முதல் சுற்று முடிவுகள் வெளியீடு

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஆக.25 பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு முதல் சுற்றில் இடஒதுக்கீடு பெற்றவா்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நீட் தோ்வில் 720-க்கு 720 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழ்நாட்டைச் சோ்ந்த ரஜனீஷ் உள்பட 17 மாணவா்களுக்கும் டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்துள்ளது. நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15 சதவீதம் பொது மருத்துவம், பல் மருத்துவ இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மா், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், ஒன்றிய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வை ஒன்றிய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) இணையவழியில் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், பொது மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளுக்கு 2024 – 2025-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வு இணையதளத்தில் கடந்த 14-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கலந்தாய்வில் பங்கேற்று இடஒதுக்கீடு பெற்றவா்களின் விவரங்களை மருத்துவக் கலந்தாய்வு குழு இணையதளத்தில் 24.8.2024 அன்று இரவு வெளியிட்டது.

இதில், தமிழ்நாடு அரசு நடத்தும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில் நீட் தோ்வில் 720-க்கு 720 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் பி.ரஜனீஷ் முதலிடம் பிடித்திருந்தாா். அந்த மாணவா் அகில இந்திய கலந்தாய்வில் பங்கேற்றிருந்த நிலையில், அவருக்கு டில்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *