மும்பை, ஆக.25 வீடுகளின் விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில், பன் னாட்டு அளவில் வீடுகளின் விலை அதிகம் உயா்ந்துள்ள முக்கிய நரங்களின் பட்டியல் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை இந்திய நகரங்கள் பெற்றுள்ளன.
வீடு வாங்க வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதருக்குமே இருக்கும் மிகப்பெரிய ஆசை. குறைந்த வட்டியில் கிடைப்பதால் கடன் வாங்கியாவது வீடு வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. கரோனாவுக்குப் பின்னர் வீடுகளில் முதலீடு செய்யும் ஆர்வம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், தற்போது வீடுகளின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றன.
இந்தியாவில் 2024 ஆம் ஆண்டில் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில் 10 கோடி ரூபாய்க்கு மேலான ஆடம்பர வீடுகளின் விற்பனை கிட்டத்தட்ட 8 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது, ஆண்டின் முதல் 6 மாதங்களிலேயே பத்து கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேல் விலை கொண்ட ஆடம்பர வீடுகளின் விற்பனை மதிப்பின் அடிப்படையில் சுமாா் ரூ. 12,300 கோடியாக உள்ளது. 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறுமாத காலத்தை ஒப்பிடும்போது இது 8 சதவீதம் உயா்வாக உள்ளது. அப்போது, 10 கோடி ரூபாய் மற்றும் அதற்கு மேலான விலை கொண்ட வீடுகள் 11,400 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பன்னாட்டு அளவிலான வீடுகளின் விலை அதிகம் உயர்ந்த நகரங்களின் பட்டியலில் மும்பை இரண் டாமிடத்தையும், டில்லி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
இதுகுறித்து, கிங் ஃப்ராங்க் சந்தை ஆலோசனை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில் அதாவது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வீடுகளின் விலை அதிகம் உயா்ந்துள்ள உலகின் முக்கிய 44 நகரங்களில் மும்பை இரண்டாவது இடத்தையும், டில்லி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த 44 முக்கிய நகரங்களிலிலும் 2023 ஆம் ஆண்டின் காலாண்டுடன் ஒப்பிட்டால் 2024 ஆம் ஆண்டின் காலாண்டில் வீடுகளின் விலை உயா்வு 2.6 சதவீதமாக இருந்தது. ஆனால், இது முந்தைய ஆண்டின் இரண்டாம் காலாண்டைவிட குறைவுதான். அப்போது, உலகின் முக்கிய 44 நகரங்களில் வீடுகளின் விலை உயா்வு 4.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வீடுகள் விலை உயா்வில் பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலா முதலிடத்தில் உள்ளது. முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது மணிலாவில் 2024 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் வீடுகளின் விலை 26 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே காலாண்டில் மும்பை நகரில் வீடுகள் விலை 13 சதவீதமாக உயர்ந்துள்ளது. டில்லியில் 10.6 சதவீதமாக இருந்தது. முக்கிய நகரங்களில் ஒன்றான பெங்களூரில் 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டைவிட 2024 ஆம் ஆண்டு காலாண்டில் வீடுகள் விலை 3.7 சதவீதம் உயர்ந்துள்ளது. பன்னாட்டு தரவரிசையில் இதன் மூலம் பெங்களூரு 15 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.