சென்னை கொட்டிவாக்கம் கூட்டத்தில் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பேச்சு!
சோழிங்கநல்லூர், ஆக. 24- சோழிங்கநல்லூர் கழக மாவட்டத்தின் சார்பாக 21.8.2024 அன்று மாலை 6.30 மணிக்கு கிழக்கு கடற்கரைச் சாலை, கொட்டிவாக்கம் இருமுனை சந்திப்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமைப் பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம் மாவட்ட கழக காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு வரவேற்புரை ஆற்றினார்.
மாநில இளைஞர் அணி தலைவர் மு நித்தியானந்தம், மகளிர் அணி தலைவி தேவி சக்திவேல், திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை ஓ.சுந்தரம், மாவட்ட துணைத் தலைவர் தமிழினியன், தாம்பரம் மாவட்ட இளைஞரணி தலைவர் இர.சிவசாமி, காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்த என்ஃபீல்ட் ஆனந்தன், எம்.குருசாமி, மாவட்ட செயலாளர் விஜய் உத்தமன் ராஜ், சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் மு.சண்முக பிரியன் ஆகியோர் உரையாற்றினர்.
நிறைவாக திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் சிறப்புரை யாற்றினார்.
அவர் தமது உரையில் குறிப்பிட்டதாவது,
“சுயமரியாதை இயக்கம் தோன்றி நூறு ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, தமிழ்நாடெங்கும் நூறு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என நமது ஆசிரியர் அவர்களின் ஆணைக்கு இணங்க, இங்கே நடைபெற்று வருகிறது. இதே நேரம் தமிழ்நாட்டளவில் 40 இடங்களில் நமது பிரச்சாரக் கூட்டங்கள் இன்று நடைபெற்றுக் கொண்டு உள்ளன.
சுயமரியாதை என்ற சொல்லுக்கு ஈடு இணை ஏதுமில்லை. இன்று கணினியில், நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்பான ஏ.அய். என்பதிலே ‘சுயமரியாதை’ எனப் பதிவிட்டால், ‘தந்தை பெரியார்’ என்று தான் வரும். சுயமரியாதை என்றால் என்ன என்பதைத் தந்தை பெரியார் அவர்கள், ‘பேதமில்லாத சமத்துவம், பிராணனை விட மக்களுக்கு மானமே பெரிது, சம உரிமை, பெண்களுக்கு உரிமை, வேத மறுப்பு, சாத்திர மறுப்பு என ஆறு வகையாக விளக்குகிறார்.
தந்தை பெரியாரின் கொள்கை வழி ஏற்று செயல்பட்டு வரும் ‘திராவிட மாடல்’ ஆட்சி, இந்தியாவில் நடைபெற்று வரும் ஏனைய ஆட்சிகளை விட, அனைத்துத் துறைகளிலும் முதல் மாநிலமாக உள்ளது என ஒன்றிய அரசாலேயே மதிப்பீடு செய்யப்பட்டு ‘முதல் ரேங்க்’ வழங்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் திட்டக் குழுவின் பெயரை தற்போது நிட்டி ஆயோக் எனப் பெயர் மாற்றி உள்ளனர். இந்தக் குழு, இந்தியாவின் sustainable growth – நிலையான வளர்ச்சி பற்றி ஆய்வு செய்து, ஒரு Report Card – தர மதிப்பீடு அட்டையை வெளியிட்டுள்ளார்கள். அதிலே வளர்ச்சி விகிதம் 56% முதல் 71% வீதம் எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இதனையும் கடந்து தமிழ்நாடு 80% வீதமான, நிலையான வளர்சியைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
தமிழ்நாட்டில் வறுமை இன்மை, பசி இன்மை, நல்வாழ்வு, பேதநிலை அற்றது, தூய குடிநீர், மின்சாரம், மக்களின் பொருளாதார வாழ்வு, தொழில் வளர்ச்சி, மக்களிடையே சமூக நல்லிணக்கம் என இவையாவிலும் ‘நம்பர் ஒன்’ மாநிலமாகத் தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ஒன்றிய அரசால்!
தமிழ்நாடு அரசு தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாள் என நன்றியோடு அறிவித்துள்ளதற்கு நாம் நன்றி செலுத்திட வேண்டும்.
ஒன்றிய அளவில், பிற மாநிலங்களைவிட தமிழ்நாடு தான் பெண்ணுரிமைப் பாதுகாப்பில் முதல் மாநிலமாக விளங்கி வருகிறது. தந்தை பெரியார் அவர்கள் கொண்டு வந்த பெண் உரிமை தொடர்பான மாநாட்டுத் தீர்மானங்கள், இன்று சட்டமாகி உள்ளன. இந்தச் சட்டங்கள் நிறைவேற மூல காரணம் நம் தந்தை பெரியார்.
செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானம், 1929இல் தேவதாசி ஒழிப்பு முறை ஒழிப்பு, பிறகு சட்டமாக்கப்பட்டது 1930இல்!
‘பொட்டுக் கட்டுதல்’ எனும் பெண்களை இழிவு படுத்தும் முறையைத் தடை செய்து 1947இல் சட்டம். அதேபோல, தொடக்கப் பள்ளிகளில் பெண்களையே ஆசிரியர்களாக நியமிக்கக் கோரும் தீர்மானத்திற்கு சட்ட வடிவம்!
இவற்றையெல்லாம் பெரியார் வழியில், ஆட்சி நடத்திய முதலமைச்சர் கலைஞர் 1989லேயே சட்டமாக்கிக் காட்டினார். வரதட்சணை ஒழிப்புச் சட்டம் மிக முக்கியமாக நிறைவேறியது. இன்றைக்கு நமது கழக இளைஞர்கள் வரதட்சணை வேண்டாம் என்று அறிவித்து விட்டுத்தான் திருமணங்களைச் செய்கிறார்கள்.
அதேபோல, குழந்தைத் திருமணத் தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனாலும், இந்த நூற்றாண்டிலே, 2022லேயே, வேதியர்கள், சாஸ்திர சம்பிரதாயம், இந்துமதச் சட்டம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு, சிதம்பரம் நடராசர் கோவிலிலே, குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்கின்ற கொடுமை நடந்தது. அதனைக் கண்ட அரசு, சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடர்ந்து, கைது செய்து, நடவடிக்கையும் எடுத்துள்ளது.
மிக முக்கியமாக பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கிட வேண்டும் என்ற தந்தை பெரியாரின் செங்கல்பட்டு மாநாட்டுத் தீர்மானத்தை 1989இல் நமது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்து நிறைவேற்றிக் காட்டினார்கள். அதற்கு முன்பாக, எந்தவொரு மாநிலத்திலும், பெண்களுக்கு சொத்துரிமை இல்லை. பிறகு, 2005ஆம் ஆண்டு, ஒன்றியத்தில் அமைந்த கூட்டணி ஆட்சியிலே, இந்தச் சட்டம், இந்தியா முழுவதற்கும் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது என்றால், பெண்களுக்கான உரிமைச் சட்டங்கள் கொண்டு வரப்பட நமது தந்தை பெரியாரே மூல காரணம் என்பது வரலாறு!
நாட்டில் நிலவி வரும் பல மூடநம்பிக்கைகள் பற்றி இங்கே சகோதரி எடுத்துச் சொன்னார்களே, அவை களைப்பட வேண்டும். மூடநம்பிக்கைகள் எல்லா நாட்டிலும் உள்ளன. தாயத்து, தகடு, மந்திரக் கயிறு, கருங்காலி மாலை எனப் பல வகை மூடத்தனங்களும் பரப்பப்படுகின்றன.
நான்கூட கருங்காலி மாலையை வரவழைத்து ஆய்வு செய்தேன். அதில் ஒன்றுமே இல்லை. நமது தஞ்சாவூர் குழந்தைகள் பழகு முகாமிற்கு வரும் பிள்ளைகள் கையில் கயிறு கட்டி இருப்பார்கள். அவற்றை அறுத்து, சோதனைச் சாலைக்கு அனுப்பி வைப்போம். முகாம் முடிவதற்கு முன் ஒவ்வொரு கயிறிலும் எவ்வளவு கிருமிகள் உள்ளன என்பதை அவர்களுக்குக் காட்டி, விளக்கமளிக்கின்றோம்.
மூடநம்பிக்கையின் உச்சமாக, இன்றைக்கு வாரணாசியில், ஒரு சாமியாரிடம் ஆசி பெறத் திரண்ட மக்கள், அவரது காலடி மண்ணை எடுக்க முந்திக் கொண்டு, நெரிசலிலே சிக்கி, 217 பேர் நசுங்கியே மாண்டு போயுள்ளனர். எவ்வளவு பெரிய கொடுமை இது!
இவற்றையெல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்லி, அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது, மனிதநேயத்தைக் காப்பது, எந்தவொரு செயலையும் விசாரணைக்கு, கேள்விக்கு உள்ளாக்கி மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை என்பதையே, இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) பிரிவு வலியுறுத்துகிறது. இந்தக் கடமையைச் செய்வதே திராவிடர் கழகம்.
நம்மால் முடியாதது யாராலும் முடியாது
யாராலும் முடியாதது நம்மால் முடியும்!
பெரியாரை உலக மயமாக்குவோம்!
உலகத்தைப் பெரியார் மயமாக்குவோம்! இவ்வாறு உரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் மயிலை குமார், மணி துரை, ஜெயராமன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் பி.சி.ஜெயராமன், மாவட்ட மாணவர் கழகம் வி.பி.அறிவன், அறிவு வழி காணொலி தாமோதரன் உள்ளிட்ட தோழர்களும், பெருமளவு பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக, பெரியார் பிஞ்சு தே.ச.சொற்செழியன் நன்றி நவின்றார். கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், அவருக்கு நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினார்.