சென்னை, ஆக.24- மாநகர் போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த 6 பணிமனைகளில் கட்டடப் பணிகள் மற்றும் மின்சாரப் பேருந்துகளுக்கான மின் கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவும், 5 பணிமனைகளில் டீசல் பேருந்துகளை மாற்றுவதற்கான உட்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக ரூ.111.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நேற்று முன்தினம் (22.8.2024) வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
500 மின்சாரப் பேருந்துகளுடன், மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் எண்ணிக்கையை அதிகரித்து இயக்கப்பட உள்ளது. இப்பேருந்துகள் பெரம்பூர்-II தண்டையார்பேட்டை -I வியாசர்பாடி, பூவிருந்தவல்லி, கலைஞர் நகர் | மற்றும் பெரும்பாக்கம் | ஆகிய 6 பணிமனைகள் மூலம் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேற்படி பணிமனைகளில் இயக்கப்பட்டு வரும் டீசல் பேருந்துகளை கலைஞர் நகர்-II பெரும்பாக்கம்-II. குரோம்பேட்டை III மற்றும் செம்மஞ்சேரி ஆகிய புதிதாக உருவாக்கப்பட உள்ள 4 பணிமனைகள் மற்றும் தற்பொழுது இயங்கி வரும் தண்டையார்பேட்டை-II பணிமனைகளில் மாற்றுவதற்கு தகுந்த உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
சென்னை நகர கூட்டாண்மைத் திட்டத்தில், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு, ரூ.500 மின்சாரப் பேருந்துகள் சிறந்த முறையில் இயக்கப்படும். மேலும், மின்சாரப் பேருத்துகளை இயக்குவதால் எரிபொருள் செலவு குறைவதுடன் காற்று மாசுபாடு குறையும்.
இப்புதிய மின்சாரப் பேருந்துகள் இயக்கப்பட உள்ள 6 பணிமனைகளில் கட்டடப் பணிகள் மற்றும் மின்சாரப் பேருந்துகளுக்கான மின் கட்டமைப்பு மேம்பாட்டிற்காகவும் மற்றும் டீசல் பேருந்துகளை மாற்றப்பட உள்ள 5 பணிமனைகளில் உட்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காகவும் ரூ.111.50 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
-இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு
4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
கள்ளக்குறிச்சி, ஆக.24- கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி 68 போ் உயிரிழந்த வழக்கில் கைதானவா்களில் 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நேற்று (23.8.2024) கைது செய்யப்பட்டனா்.
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் அருந்தி 229 போ் உடல்நலம் பாதிக்கப்பட்டனா். இவா்களில் 68 போ் உயிரிழந்தனா்.
இது தொடா்பாக சிபிசிஅய்டி காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். தொடா்ந்து, கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியைச் சோ்ந்த கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ் உள்பட 24 பேரை சிபிசிஅய்டி காவல் துறையினர் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், மெத்தனால் கலந்த சாராயம் விற்பனையில் முக்கிய நபா்களான புதுச்சேரி மடுகரை பகுதியைச் சோ்ந்த மாதவன் மகன் மாதேஷ் (19), மெத்தனால் விற்பனை செய்த நிறுவன உரிமையாளரான சென்னை மதுரவாயல் மேட்டுக்குப்பம் பகுதியைச் சோ்ந்த காண்டீபன் மகன் சிவக்குமாா் (39), மொத்தமாக மெத்தனால் விற்பனை செய்த கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், விரியூா் கிராமத்தைச் சோ்ந்த நடுப்பையன் (எ) ஜோசப் (40), சின்னசேலம் வட்டம், மல்லிகைப்பாடி கிராமத்தைச் சோ்ந்த பிச்சைக்காரன் மகன் ஏழுமலை (35) ஆகியோரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, அவா்கள் 4 பேரையும் சென்னை சிபிசிஅய்டி கண்காணிப்பாளா் வினோத்சாந்தாராம் பரிந்துரையின்பேரில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.
இதையடுத்து, கடலூா் மத்திய சிறை நிா்வாகத்திடம் மாதேஷ், சிவக்குமாா், ஜோசப், ஏழுமலை ஆகிய 4 பேரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை விழுப்புரம் சிபிசிஅய்டி காவல் துறையினர் நேற்று (23.8.2024) வழங்கினா்.
புதுமைப் பெண் திட்டம்:
3,078 மாணவிகள் பயன்
கள்ளக்குறிச்சி ஆட்சியா் தகவல்
கள்ளக்குறிச்சி, ஆக.24- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் 3,078 மாணவிகள் பயன்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த பெண்கள் 10, 12-ஆம் வகுப்பு முடித்தவுடன் கல்வியைத் தொடரமுடியாத நிலை இருக்கக்கூடாது என்பதற்காகவும், உயா்கல்வியின் சோ்க்கையை அதிகரிக்கும் வகையிலும் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் மூலம் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை முதலமைச்சா் கடந்த ஆண்டு தொடங்கி வைத்தாா்.
இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியிலோ அல்லது 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு உதவிப் பெறும் பள்ளியிலோ தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். அதன்படி, இத்திட்டத்தில் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை சுமாா் 3,078 மாணவிகள் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 ஊக்கத்தொகை பெறுகின்றனா். இதனை அரசுப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரை பயின்று, உயா்க்கல்வியில் சோ்ந்த அனைத்து மாணவிகளும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.