வி.சி.வில்வம்
ஒரு மகளிர், அரசு ஊழியராக இருந்தவர், ஓய்விற்குப் பிறகு பெரியார் திடல் வருகிறார், தலைவரைச் சந்திக் கிறார், இயக்கப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். அதுசமயம் மனுதர்ம எரிப்புப் போராட்டம் அறிவிக்கப் படுகிறது. அதற்கு இவர் தலைமை தாங்குகிறார். விளைவு இவர் மீது வழக்குத் தொடரப்படுகிறது. சென்னை அல்லிக் குளம் மற்றும் எழும்பூர் நீதிமன்றங்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் அலைகிறார்! பிறகு விடுதலை ஆகிறார். எனினும் 30 ஆண்டுகள் அரசுப் பணி செய்து, வாங்கிய ஓய்வூதியப் பணத்தை வைத்துப் பிறர் எப்படி வாழ்வார்கள்; திராவிடர் கழக மகளிர் எப்படி வாழ்கிறார்கள் என்பதற்கான சான்று இந்நிகழ்வு! கழகத் தலைவரால், துணைப் பொதுச் செயலாளர் என அறிவிக்கப்பட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வரும் இன்பக்கனி அவர்களைத் தான், இந்த வார மகளிர் சந்திப்பில் பார்க்க இருக்கிறோம்!
அம்மா வணக்கம்! தங்களைக் குறித்து
அறிமுகம் செய்து கொள்ளுங்கள்?
என் பெயர் ச.இன்பக்கனி. ஊர் சென்னை. 69 வயதாகிறது. எனது அப்பா பெயர் பெ.சபாபதி. எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவர். அம்மா ச.இந்திராணி. கல்வி பயிலாதவர். எனினும் திருமணத் திற்குப் பிறகு அப்பா, அம்மாவுக்குத் தமிழ் வாசிக்கக் கற்றுக் கொடுத்தார். இதன்மூலம் வாழ்நாள் முழுவதும் விடுதலை இதழைப் படித்து வந்தார் அம்மா. என்னுடன் பிறந்தவர்கள் ஆறு பேர். அறிவுக்கண்ணு, ஆருயிர் என இரண்டு அக்காவும் மருத்துவர்கள். அறிவுக்கண்ணு என்கிற பெயர் பெரியார் வைத்தது. தம்பிகள் முகிலரசு, பவழக்கடல், தங்கைகள் எழில்மணி, பண்பொளி நால்வரும் பொறியாளர்கள். இதில் ஒரு அக்காவும், ஒரு தம்பியும் கரோனா காலத்தில் மறைந்துவிட்டார்கள்.
உங்கள் தந்தை திராவிடர் கழக
கொள்கையில் இருந்தவர்களா?
ஆமாம்! சென்னையில் பணியாற்றிய போது பெரியார் கூட்டம் கேட்டு, கொள்கைக்கு வந்தவர்கள். பிறகு அம்மாவும் மாறினார்கள். அதனையொட்டி எங்களின் இளம் வயது சிந்தனைகளும் இயக்கத்தை ஒட்டியே இருந்தன. எனினும் நான் வங்கிப் பணியில் இருந்ததால், இயக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியவில்லை. மும்பை, புதுடில்லி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல நகரங்களிலும் பணியாற்றியுள்ளேன். ஆசிரியர் அவர்கள் அடிக்கடி குறிப்பிடும் “Invisible Member” என்கிற கணக்கில் நான் இருந்தேன்.
சிறு வயதில் பெரியார் திடல் சென்ற
அனுபவங்கள் இருக்கிறதா?
பள்ளிப் பருவ காலங்களில் சென்னையில் நடக்கும் பெரியார் கூட்டங்களுக்குக் குடும்பத்துடன் செல்வோம். பெரியார் திடலில் இரண்டு, மூன்று நாட்கள் நடைபெற்ற மாநாடுகளிலும் அங்கேயே தங்கியிருந்த அனுபவங்கள் உண்டு. அப்போது எம்.ஆர்.இராதா மன்றத்தின் மேற்கூரையில் தகடுகளும், தரையில் மணலும் பரப்பப்பட்டிருக்கும். மடக்கி வைக்கக் கூடிய இரும்பு நாற்காலிகள் இருக்கும். இரவில் நாற்காலியை ஒதுக்கி வைத்து விட்டு, மணலில் போர்வைகள் விரித்துப் படுத்துக் கொள்வோம். காலையில் அவசரமாக வீட்டிற்குச் சென்று, குளித்துவிட்டு, உணவு முடித்து, திடலுக்கு வந்துவிடுவோம். சில நேரங்களில் பெரம்பூரில் இருக்கும் வீடு வரைக்கும் நடந்தே சென்றுள்ளோம். அதேநேரம் வெளியூர் நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்றதில்லை.
பெரியாரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்ததா?
ஆமாம்! 28.05.1973 அன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள்! அன்றுதான் பெரியாரைச் சந்தித்தேன். குடும்பத்தில் உள்ள அனைவரையும் அப்பா அழைத்துச் சென்றார்கள். பெரியாருடன் ஒளிப்படம் எடுத்துக் கொண்டோம். அப்போது மணியம்மையார் அவர்களும் இருந்தார்கள். பெரியார் எங்களின் பெயர்களைக் கேட்டு, நன்றாகப் படிக்க வேண்டும் என்று கூறினார்கள். நான் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம். அனைத்துப் பிள்ளைகளுமே நன்கு படிப்பதை அறிந்து, பெரியார் எங்கள் பெற்றோரைப் பாராட்டினார்.
திராவிடர் கழகத்தில் தாங்கள் வகித்த பொறுப்புகள் என்ன?
30.06.2015 அன்று பணி ஓய்வு பெற்றேன். ஆகஸ்ட் மாதம் திடலில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் வட சென்னை மாவட்ட மகளிரணி செயலாளராக அறிவிக்கப்பட் டேன். தொடர்ந்து தலைமைச் செயற்குழு உறுப் பினர், மாநில மகளிரணி செயலாளர், தற்போது துணைப் பொதுச் செயலாளராக இருக்கிறேன். இந்த வாய்ப்புகளையும், வளர்ச்சியையும் கொடுத்த ஆசிரியர் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்கத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனுபவங்கள் குறித்துக் கூறுங்கள்?
பெரியார் அவர்கள் இறுதியாக 1973 இல் திடலில் நடத்திய மாநாடு, தியாகராயர் நகரில் 19.12.1973 அன்று பெரியார் ஆற்றிய இறுதிப் பேருரை, அன்னை மணியம்மையார் அவர்கள் நடத்திய இராவண லீலா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். அதுமட்டுமின்றி திடலில் நடைபெற்ற பெரியார் நூலகம், படிப்பகம், பெரியார் மாளிகைத் திறப்பு போன்றவற்றிலும் கலந்துக் கொண்டுள்ளேன்.
எம்.ஜி.ஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, தந்தை பெரியார் நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக நடந்தது. எனது சகோதரிகளுடன் தீச்சட்டி ஏந்தி வந்தேன். ஆசிரியர் அவர்களின் தலைமையின் கீழும் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். பின்னர் அரசுப் பணிக்குச் சென்றுவிட்டேன்.
போராட்டங்களில் பங்கேற்று
கைதான விவரங்கள் இருக்கிறதா?
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் 14.04.2016 அன்று, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது தான் முதன்முதலாகக் கைதானேன். ஆயிரம் விளக்குப் பகுதியில் ஆசிரியர், சுப.வீரபாண்டியன் ஆகி யோருடன் ஒரு சமூக நலக் கூடத்தில் கைது செய்து வைக்கப் பட்டோம். தலைவர்கள் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்ள, இருபால் தோழர்களும் இயக்கப் பாடல்களைப் பாடினர்.
பின்னர் 2017 ஆம் ஆண்டு அன்னை மணியம்மையார் பிறந்த நாளில் சென்னை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களில் இயக்க மகளிரால் “மனுதர்மம்” எரிக்கப்பட்டது. இதற்காகத்தான் ஒன்றரை ஆண்டுகள் நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கினேன். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலில், கழக வழக்குரைஞர் சு.குமாரதேவன் அவர்கள் முனைப்பெடுத்து வழக்கை முடித்துக் கொடுத்தார்கள். இளைஞரணி மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் சுரேஷ், எனது தம்பி முகிலரசு ஆகியோர் இறுதிவரை துணையாக இருந்தார்கள். எங்கள் அம்மாவும் ஒருமுறை கைதாகி, ஒரு வாரம் வரை சென்னை மத்தியச் சிறையில் இருந்துள்ளார்கள்.
இந்த இயக்கம் உங்களுக்கு வழங்கிய
மதிப்பாக எதைக் கருதுகிறீர்கள்?
வாழ்க்கையின் மொத்த மதிப்பிற்குமே, பெரியார் கொள்கைதான் காரணம். எனது கல்வி, எனது பணி, எனது இயக்க வாழ்க்கை அனைத்திலுமே மனநிறைவைப் பெற்றிருக்கிறேன். அண்மையில் கூட எனது பள்ளி ஆசிரியர் ஒருவரைச் சாலையில் சந்தித்தேன். “என்ன இன்பக்கனி இன்னமும் கடவுள் இல்லை என்று தான் சொல்கிறாயா?”, எனக் கேட்டுச் சிரித்தார்கள். இதுதான் நமக்கான அடையாளம். என்னைப் பார்த்ததும் அவர்களுக்குக் கொள்கை தான் நினைவிற்கு வருகிறது. அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.
“உண்மை” இதழுக்கு அளித்த பேட்டியில், திருவாரூரைச் சேர்ந்த ஆசிரியர் முனியாண்டி அவர்கள், தங்களைக் குறித்துக் கூறியிருக்கிறாரே?
ஆமாம், நானும் வாசித்து மகிழ்ந்தேன். நன்றி! பள்ளி, கல்லூரி நாட்களில் இயக்கத் தொடர்பு என்பது என் அப்பாவின் மூலம் மட்டுமே கிடைத்தது. இதுதவிர எனக்கு நேரடியாகக் கிடைத்த முதல் தொடர்பு ஆசிரியர் முனியாண்டி அவர்கள். 1970 ஆம் ஆண்டு பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் பெரியார் குறித்துப் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகளை மாநில அளவில் நடத்தினார்கள். இதில் கட்டுரைப் போட்டியில் நான் முதல் பரிசை வென்றேன். தந்தை பெரியாரும், ஆசிரியர் முனியாண்டி அவர்களும் கையொப்பமிட்ட சான்றிதழை எனக்குக் கொடுத்தார்கள்.
பணியில் இருந்த காலத்தில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்தது உண்டா?
மிகக் குறைவாகவே சந்தித்துள்ளேன். காரணம் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் காலத்தைச் செலவழித்துவிட்டேன். ஆசிரியர் அய்யா அவர்களின் 80 ஆவது பிறந்த நாளில், இயக்கத் தோழர்களுடன் திடலில் வரிசையில் நின்று, நானும் என் தம்பியும் வாழ்த்துத் தெரிவித்தோம். அதேபோன்று சென்னைக்கு வரும் போது, அம்மாவுடன் பெரியார் திடல் சென்று ஆசிரியர் அய்யாவைச் சந்தித்திருக்கிறேன்.
எனது தந்தையார் மறைந்த போதும் (19.02.1996), தாயார் மறைந்த போதும் (18.12.2011) இல்லத்திற்கு வந்து இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்று, ஆசிரியர் அவர்கள் இரங்கல் உரை ஆற்றினார்கள். அதேபோன்று எங்கள் இல்லத்தின் முகப்பில் பெற்றோருக்கு மார்பளவு நினைவுச் சின்னம் வைத்துள்ளோம். அதனையும் ஆசிரியர் அவர்கள் 03.06.2012 அன்று திறந்து வைத்தார்கள். அன்றைய தினம் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், மறைந்த மனோரஞ்சிதம், பார்வதி அம்மா போன்றோரும் கலந்து கொண்டார்கள்.
இளம் வயது முதல் கொள்கையில் இருக்கிறீர்கள். இயக்கத்தின் வளர்ச்சியாக எதைச் சொல்வீர்கள்?
பெரியார் மறைந்தவுடன் கொள்கையும், இயக்கமும் முடிந்துவிடும் எனக் கருதினார்கள். ஆனால் இன்று தந்தை பெரியார் தமிழ்நாடு கடந்து உலகமயமாகிவிட்டார். அந்தக் காலத்தில் நிகழ்ச்சிகள், மாநாடுகளுக்கு நடுத்தர மற்றும் முதியவர்கள் வருவார்கள். இன்று இருபால் இளைஞர்கள் கூட்டம் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
எல்லோரும் சொல்வது தான்! தந்தை பெரியாரும், அன்னை மணியம்மையாரும் நமக்கு விட்டுச் சென்ற பெரும் சொத்து ஆசிரியர் தான்! ஏதேதோ காரணம் கொண்டு, சலசலப்பு ஏற்படுத்த முயன்றவர்கள் தோற்றுப் போனார்கள். ஆசிரியரின் தொலைநோக்குப் பார்வையே இதற்கு முக்கியக் காரணம். பெரியாரின் கருத்துகளைப் பாதுகாப்புப் பெட்டகமாக்கி, அதனை ஆவணமாக்கி, நூற்றுக்கணக்கில் நூலாக்கி, இன்று கோடிக்கணக்கில் மக்களைச் சென்று சேர்ந்திருக்கிறது என்றால், அது ஆசிரியரின் உழைப்பு! ஆசிரியரின் சாதனை!!
அப்படியான இந்த இயக்கத்தில் தோழர்கள் கூடுதல் வலிமையோடு பணியாற்றுவோம். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும், கொள்கையில் இருப்பதை உறுதி செய்வோம். ஆசிரியர் அய்யா வழிகாட்டுதலில் நாம் அனைவரும் பயணிக்கிறோம் என்பதே என்றென்றும் நம் மகிழ்ச்சியாக இருக்கிறது”, என துணைப் பொதுச் செயலாளர் இன்பக்கனி தம் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்!