எவருக்குப் பாராட்டு விழா நடத்தினாலும், முதலில் அவருடைய வாழ்விணையரைப் பாராட்டுங்கள்; பெண்களைப் பாராட்டுங்கள்!
பேராசிரியர் மு.வி.சோமசுந்தரத்தின் 93 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – 67 ஆவது ஆண்டு இல்வாழ்க்கை விழா – நூல்கள் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர்!
கோவை, ஆக.22 தோழர்களுக்கு, பகுத்தறிவாளர்களுக்கு, திராவிட இயக்கத் தோழர்களுக்கு, தன்மான இயக்கத் தோழர்களுக்குத் தெரியவேண்டியது என்னவென்றால், யார், எங்கு, எவருக்குப் பாராட்டு விழா நடத்தினாலும், முதலில் அவருடைய வாழ்விணையரைப் பாராட்டுங்கள்; பெண்களைப் பாராட்டுங்கள்; தாய்மார்களைப் பாராட்டுங்கள். ஏனென்றால், அவர்கள்தான் அடித்தளம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
93 ஆம் ஆண்டு பிறந்த நாள் –
67 ஆம் ஆண்டு இல்வாழ்க்கை தொடக்க விழா –
நூல்கள் வெளியீட்டு விழா!
கடந்த 14.7.2024 அன்று கோவையில் நடைபெற்ற பேராசிரியர் மு.வி.சோமசுந்தரம் அவர்களின் 93 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, மு.வி.சோமசுந்தரம் – சோ.வச்சலா இணையரின் 67 ஆம் ஆண்டு இல்வாழ்க்கை தொடக்க விழா மகிழ்வாக, “பெனிட்டோ முசோலினி வாழ்க்கை வரலாறு”, ‘‘இரு அறிவுச் செம்மல்களின் அரிய கருத்துச் செறிவு’’, ‘‘பத்து விஞ்ஞானிகள் ஒர் அறிமுகம்’’ (ஆங்கில நூலின் மொழியாக்கம்) ஆகிய நூல்கள் வெளியீட்டு விழாவிற்குத் தலைமை வகித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
ஓர் அறிவுசார் பெருவிழா என்ற பேரின்ப பெருவிழா!
மிகச் சிறந்த ஓர் அரிய வாய்ப்பாக அமைந்தி ருக்கக்கூடிய, ஓர் அறிவுசார் பெருவிழா என்ற பேரின்ப பெருவிழா! சில நேரங்களில் சிலர் கதைத்திருப்பார்கள். ஆனால், திராவிட சமுதாயத்தில் அப்படிப்பட்ட ஓர் அற்புதமான பேரின்பப் பெருவிழா நமக்கெல்லாம் என்று சொல்லக்கூடிய வகையில், இன்றைக்கு 93 ஆவது அகவைத் தொடக்கத்தைப் பெறக்கூடிய அருமைப் பேராசிரியர் மானமிகு மு.வி.சோமசுந்தரம் அவர்களுடைய 93 ஆவது பிறந்த நாள் விழா – அதுபோலவே, அவருடைய வாழ்விணையர் அன்பிற்கும் பாராட்டுதலுக்கும் உரிய வச்சலா – இந்த இணையரின் 67 ஆவது ஆண்டு இல்வாழ்க்கைத் தொடக்கம் என்ற மகிழ்வான, ஓர் அற்புதமான ஒரு சிறப்பு- 67 ஆண்டுகள் இல்வாழ்க்கை என்பது மட்டுமல்ல – அந்த இல்வாழ்க்கை அவர்களுக்கு நல்வாழ்க்கையாகவே அமைந்திருக்கக் கூடியது இன்னும் சிறப்பு – அப்படிப்பட்ட வாழ்விணையர்களாக இருக்கக்கூடிய அவர்களுக்குப் பாராட்டு விழா- அவர் எழுதியிருக்கக்கூடிய “பெனிட்டோ முசோலினி வாழ்க்கை வரலாறு’’, ‘‘இரு அறிவுச் செம்மல்களின் அரிய கருத்துச் செறிவு’’, ‘‘பத்து விஞ்ஞானிகள் ஒர் அறிமுகம்’’ (ஆங்கில நூலின் மொழியாக்கம்) ஆகிய சிறப்பான நூல்களை வெளியிட்டு, அறிவார்ந்த இந்த அரங்கத்தில் அவருடைய அறிவுச் சுரங்கத்தை நாம் தெரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு வாய்ப்பைத் தந்திருக்கின்ற தோழர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்வில் சிறப்பாகக் கலந்துகொண்டு, அவர்களைப் பாராட்டக்கூடிய வகையில் இங்கே உரையாற்றிச் சென்ற கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அருமைத் தோழர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் அவர்களே, கழகத்தினுடைய துணைத் தலைவர், ‘விடுதலை’ நாளிதழின் பொறுப்பாசிரியர் அன்பிற்குரிய தோழர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
‘விடுதலை’யும், ‘முரசொலி’யும் எப்பொழுதுமே இரட்டைக் குழல்கள்தான்!
எப்படி திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று அண்ணா அவர்கள் சொன்னார்களோ, அதுபோலவே, ‘விடுதலை’யும், ‘முரசொலி’யும் எப்பொழுதுமே இரட்டைக் குழல்களாகத்தான் ஊடகத் துறையில் இருக்கும்.
அப்படிப்பட்ட அருமையான பெயரைக் கொண்டு, இன்றைக்கு நாடாளுமன்றத்தில் இதுவரையில் ‘முரசொலி’ தமிழ்நாட்டில் எழுச்சிக் குரலை ஒலித்தது. இன்றைக்கு அகில இந்திய அளவில் முரசொலி ஒலிக்கி றது என்று சொல்லக்கூடிய பெருமைக்குரிய எங்கள் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் வெற்றி வீரர் அருமைச் சகோதரர் முரசொலி அவர்களே,
இந்நிகழ்வினை சிறப்பான வகையில் ஒருங்கி ணைக்கக்கூடிய அருமை நண்பர் செந்தமிழ்ச்செல்வன் அவர்களே,
சிறப்பான வகையில் உருவாகிக் கொண்டிருக்கின்ற இளம்நாற்று சித்தார்த் அவர்களே,
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பாக வரவேற்புரையாற்றியதோடு மட்டுமல்லாமல், அருமையாக இணைப்புரையைக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற பாசறை பள்ளி என்ற சைனிக் பள்ளியின் மேனாள் மாணவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்களே,
மற்றும் இந்நிகழ்ச்சியில் நன்றியுரை கூற இருக்கக்கூடிய சைனிக் பள்ளியின் மேனாள் மாணவர் மாதவர்மன் அவர்களே,
இந்த அற்புதமான நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கக் கூடிய மருத்துவர் கு.கவுதமன் அவர்களே, அனைத்துப் பெருமக்களே, தோழர்களே, யாருடைய பெயரையாவது நான் சொல்லாமல் விட்டுவிட்டிருந்தால், அவர்களை அழைத்ததாகக் கருதிக் கொள்ளவேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இது ஒரு மகிழ்ச்சிகரமான, புரட்சிகரமான, ஒரு சிறப்பான அருமையான வாய்ப்பாகும்.
புத்தகங்களைப் படிக்கவேண்டியது
உங்களுடைய பொறுப்பாகும்!
அதிலும் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி என்ன வென்றால், இங்கே முனைவர் நேரு அவர்களுடைய ஆய்வுரை, வழக்குரைஞர் அருள்மொழி அவர்களுடைய ஆய்வுரை இவையெல்லாம் சிறப்பான உரைகள். அதற்குமேல் இந்தப் புத்தகங்களை விளக்கவேண்டிய அவசியம் இல்லை.படிக்கவேண்டியது உங்களுடைய பொறுப்பாகும்.
புத்தகம் வாங்குகின்ற பழக்கம் இப்பொழுது நம் மக்கள் மத்தியில் இன்றைக்குப் பெருகியிருக்கிறது. அது ஒரு நல்ல விழிப்புணர்வுதான்.
புத்தகங்களை வாங்குபவர்கள் எல்லாம், அந்தப் புத்தகங்களைப் படித்து முடிக்கிறார்களா? என்பது ஒரு பெரிய கேள்விதான்.
நல்ல புத்தகம் என்றவுடன், மகிழ்ச்சியாக எடுத்துக் கொள்வார்கள். சில நேரங்களில் சில பக்கங்கள் – அவ்வளவுதான், அதோடு விட்டுவிடுவார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி அவர்களின் வெளிப்படையான உரை!
இதில் ஒரு பெரிய வாய்ப்பு என்னவென்றால், எப்பொழுதுமே முரசொலி உண்மையைத்தான் சொல்லும் என்பதற்கு அடையாளம் என்னவென்றால், இங்கே உரையாற்றிய முரசொலி எம்.பி., அவர்கள் சொன்னார், ‘‘இதற்கு முன்பு நான் புத்தகங்களைப் படித்துப் பழக்கமில்லை. ஆனால், இப்பொழுது நான் நாடாளுமன்ற உறுப்பினர் ஆன பிறகு, புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்துவிட்டேன்” என்றார்.
நம்முடைய நூற்றாண்டு விழா நாயகர் முத்தமிழ றிஞர் கலைஞர் அவர்கள் ஒப்பற்ற ஒரு சிந்தனையாளர், எழுத்தாளர், பல்கலைக் கொள்கலனாக இருக்கக்கூடிய அவர், இயக்கப் பொறுப்பாளர்கள் அவரை சந்திக்கும்பொழுது, முதலில் ஒரு கேள்வி கேட்பார்.
‘‘முரசொலி படித்தீர்களா?” என்று கேட்பார்.
கலைஞரும் – ‘முரசொலி’யும்!
இதற்காகவே நிறைய பேர், ‘முரசொலி’யைத் தொடர்ந்து படிக்கிறார்களோ இல்லையோ, கலைஞர் அவர்களைச் சந்திப்பதற்கு முன், அன்றைய ‘முரசொலி’யை முழுவதுமாகப் படித்துவிட்டுத்தான் செல்வார்கள்.
கலைஞரை சந்திக்கும்பொழுது, ‘‘அய்யா, நான் ‘முரசொலி’யில் வந்திருக்கின்ற ஆரூயிர் உடன்பிறப்பே என்று நீங்கள் எழுதிய கடிதத்தைப் படித்தேன் அய்யா” என்பார்.
‘‘அப்படியா? தொடர்ந்து ‘முரசொலி’யைப் படிக்கின்றீர்களா?” என்று கலைஞர் கேட்பார்.
‘‘நான் தொடர்ந்து படிக்கிறேன்” அய்யா.
‘‘நேற்றுமுன்தினம் நன்றாக நீங்கள் எழுதினீர்கள்” என்பார் இவர்.
‘‘தொடர்ந்து ‘முரசொலி’யைப் படியுங்கள்” என்று கலைஞர் சொல்வார்.
அதுபோன்று, படிக்கின்ற பழக்கத்தை மிக முக்கியமாக உருவாக்கிக் கொள்ளவேண்டும்.
கல்வி நெறிக்காவலர் சுந்தரவடிவேலு
சென்னை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக நம்முடைய கல்வி நெறிக்காவலர் சுந்தரவடிவேலு அவர்கள் இருந்தார்.
அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்களை பல்கலைக் கழக நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவிற்கு அழைத்தார். முதலமைச்சர் அவர்களை, பல்கலைக் கழகத் துணைவேந்தர் சுந்தரவடிவேலு அவர்கள் வரவேற்று, அழைத்துச் செல்லும்பொழுது, படிக்கட்டுகளில் இறங்கிச் செல்லும்பொழுது, ‘‘அய்யா, பார்த்துங்க, படிங்க! பார்த்துங்க, படிங்க! படிங்க, பார்த்துங்க” என்று சொன்னார்.
உடனே முதலமைச்சர் கலைஞர் அவர்கள், இவர் பக்கம் திரும்பியபொழுது, ஏதோ சொல்லப் போகிறார் என்று நினைத்து சுந்தரவடிவேலு அவர்கள், ‘‘என்னங்க அய்யா” என்றார்.
பெரியார் சொல்லித்தான் நான் படிக்க ஆரம்பித்தேன்; நிறைய படித்தேன்!
‘‘ரொம்ப காலத்திற்கு முன்பு என்னுடைய அப்பா இதைத்தான் சொன்னார். நான் அதைக் கேட்கவில்லை. பிறகு பெரியார் சொல்லித்தான் நான் படிக்க ஆரம்பித்தேன். நிறைய படித்தேன், இப்பொழுதும் படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆகவே, ஒவ்வொரு முறையும் எனக்கு ஞாபகப்படுத்தவேண்டிய அவசியம் இல்லீங்க” என்று மகிழ்ச்சியாகச் சொன்னார்.
அதுபோன்று, ‘‘படியுங்கள், படியுங்கள், படியுங்கள்!” என்று சொல்வதில் ஒரு பெரிய வாய்ப்பு என்னவென்றால், படிக்கச் சொல்வதால் பயன் உள்ளதோ, என்னவோ, வாழ்க்கையில் முன்னேறுவது போன்று, படியுங்கள், படியுங்கள், படியுங்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இன்றைக்கு அந்த உணர்வு வந்துள்ளது.
‘‘நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு” (குறள் 783).
ஒரு நல்ல புத்தகத்தைத் திரும்பத் திரும்பப் படிக்கவேண்டும். ஒருமுறை படித்தால் மட்டும் போதாது; திரும்பப் படிக்கவேண்டும். அதிலும் குறிப்பாக தந்தை பெரியார் போன்றவர்களுடைய எழுத்து, அண்ணா, கலைஞர் போன்றவர்களுடைய எழுத்து, சிந்தனையாளர்களுடைய எழுத்து, உலக சிந்தனையாளர்களுடைய எழுத்து என்பன மிகச் சிறப்பு வாய்ந்தனவாகும்.
எந்த வயதாக இருந்தாலும், மனதைப் பொறுத்து இளமைதான்!
பல ஆங்கில புத்தகங்களை நாமெல்லாம் படிக்க முடியாத வாய்ப்பில், அய்யா பேராசிரியர் சோமசுந்தரம் அவர்கள், இந்த வயதில் படித்ததோடு மட்டுமல்ல, இங்கே வந்தியத்தேவன் அவர்கள், மற்ற நண்பர்கள் சொன்னதைப்போல, இந்த வயதில் என்று சொல்வதை நான் ஒப்புக்கொள்வதில்லை; எந்த வயதாக இருந்தாலும், மனதைப் பொறுத்து இளமைதான். அதுதான் மிகவும் முக்கியம்.
இந்த விழாவில் கலந்துகொள்வதில் எனக்கு இரண்டு வகையில் மகிழ்ச்சி.
சிறிய கோட்டிற்கு அருகே ஒரு பெரிய கோடு!
ஒருவர், ஒரு கோடு வரைந்து, இதை அழிக்காமல், சிறிய கோடாக ஆக்கவேண்டும். அதற்கு என்ன வழி? என்று கேட்டார்!
பகுத்தறிவுவாதியாக இருந்த ஒருவர், ஒரு பென்சிலைக் கொடுங்கள் என்றார்.
அந்தக் கோட்டின்மேல் எழுதக்கூடாது என்று சொன்னார் அவர்.
எழுதமாட்டேன், என்று சொன்ன அவர், அந்தக் கோட்டின் அருகிலேயே ஒரு பெரிய கோடு போட்டார். ஏற்கெனவே இருந்த கோடு சிறிய கோடாக ஆயிற்று.
பேராசிரியர் மு.வி.சோமசுந்தரம் அவர்களுக்கு
93 வயது; எனக்கு 91 வயது!
அதுபோல, எனக்கு வயதாகிவிட்டது, வயதாகி விட்டது என்று சொன்ன நேரத்தில், ஒரு பெரிய கோடு ஒன்று வேண்டும் என்று சொல்கிறபொழுது, பெரிய கோடு 93.
அவருக்குப் பாராட்டு விழா – அவருடைய வாழ்விணையர் வச்சலா அம்மையார் இருக்கிறார்களே, அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.
இதில் இன்னொரு மகிழ்ச்சியான எடுத்துக்காட்டு என்னவென்றால், என்னுடைய துணைவியார் மோகனா விற்கும் – எனக்கும் மணவிழா நடைபெற்று 65 ஆண்டுகள் ஆகின்றன.
பேராசிரியர் மு.வி.சோமசுந்தரம் – வச்சலா அம்மையார் ஆகியோருக்கு இல்வாழ்க்கை ஏற்று 67 ஆவது ஆண்டு.
இதில் தலைப்பே, சிறிய கோடு – பெரிய கோடு என்று எழுதலாம்.
பல நேரங்களில் அவர் ஒளிப்படம் எடுக்கும்பொழுது முன்னால் வரமாட்டார்.
என்னுடைய உளப்பூர்வமான,உணர்ச்சிப்பூர்வமான நன்றி!
இந்த விழாவை நடத்தவேண்டும் என்ற தோழர்களின் சிந்தனைக்கு – அவர்களுக்கு என்னு டைய உளப்பூர்வமான, உணர்ச்சிப்பூர்வமான நன்றி யையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கி றேன். நாங்கள் செய்யத் தவறியதை, நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
தோழர்களுக்கு, பகுத்தறிவாளர்களுக்கு, திராவிட இயக்கத் தோழர்களுக்கு, தன்மான இயக்கத் தோழர்களுக்குத் தெரியவேண்டியது என்னவென்றால், யார், எங்கு, எவருக்குப் பாராட்டு விழா நடத்தினாலும், முதலில் அவருடைய வாழ்விணையரைப் பாராட்டுங்கள்; பெண்களைப் பாராட்டுங்கள்; தாய்மார்களைப் பாராட்டுங்கள்.
ஏனென்றால், அவர்கள்தான் அடித்தளம். அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றவேண்டும் என்று சொல்லும்பொழுது, முதலில் என்ன சொல்கிறோம் – அடிக்கட்டுமானத்தைப் பாதுகாக்கவேண்டும். ஒரு கட்டடம் கட்டவேண்டுமானால், அடிக்கட்டுமானத்தைப் பாதுகாத்தால்தான், மேலே கட்டடம் கட்ட முடியும்.
ஒவ்வொருவருடைய வெற்றிக்கும் காரணம் பெண்கள்தான்!
அதுபோன்று, மேலே உள்ள கட்டுமானம்தான் எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரியும். அடடா, என்ன அற்புதமாக இருக்கிறது என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால், அந்தக் கட்டடம் பலமாக இருப்பதற்கே, அதனுடைய அடிக்கட்டுமானம்தான் காரணம், அது வெளியே தெரியாது. அதுபோன்று, ஒவ்வொருவருடைய வெற்றிக்கு யார் காரணம் என்றால், அடிக்கட்டு மானம் யார் என்றால், பெண்கள்தான்.
தந்தை பெரியார் அவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றார்!
ஆகவே, எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், பெரியார் சுயமரியாதை இயக்கத்தினுடைய நூற்றாண்டு – இந்த ஆண்டு.
ஆணுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்ற னவோ, அவ்வளவு உரிமைகளையும் பெண்ணுக்குக் கொடுக்கவேண்டும் என்று சொல்லி, அதில் தந்தை பெரியார் அவர்கள் வெற்றி பெற்றிருக்கின்றார்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த விழாவின்மூலமாக தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், எப்படி அய்யா பேராசிரியர் சோமசுந்தரம் அவர்களையும், வச்சலா அம்மையார் அவர்களையும் நாம் எல்லோரும் பாராட்டுகிறோமோ, அதுபோல, எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அவரவர் வீட்டுப் பெண்களைப் பாராட்டுங்கள்; அதை ஒரு வேலையாகக் கொள்ளுங்கள்; இவ்விழா எல்லோருக்கும் வழிகாட்டக் கூடிய விழாவாக இன்றைக்கு அமைந்திருக்கிறது.
(தொடரும்)