புதுடில்லி, ஆக. 20- லேட்டரல் என்ட்ரி மூலம் ஒன்றிய அரசுப் பணி களை நேரடியாக உயர் அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ரத்து செய்யப் படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறையை நிறுத்தி வைக்கும் படி யுபிஎஸ்சி தலைவருக்கு, ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார்.
ஒன்றிய அரசுப் பணிகளில் லேட்டரல் என்ட்ரி முறை என்பது முன்பில் இருந்தே இருந்து வந்தது. இதன்படி, தகுதியான ஆட்கள், இட ஒதுக்கீடு வரைமுறை இல்லாமல் நியமனம் செய்யப்படுவார்கள்.
இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி, யுபிஎஸ்சி ஆட்சேர்ப்பு குறித்த ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதில், இணைச் செயலாளர், இயக்குநர், துணைச் செயலாளர் என ஒன்றிய அரசின் 24 அமைச்சகங்களில் 45 மூத்த அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இந்த பணியிடங்கள் அனைத்தும் முடிவெடுக்கும் நிலையில் உள்ள தலைமை பொறுப்பாகும். எனினும் இது லேட்டரல் என்ட்ரி (பக்கவாட்டு நுழைவு முறை) முறையிலான பணி என்பதால் இட ஒதுக்கீடு எதுவும் பின்பற்றப்படாது. இது சமூக நீதிக்கு எதிரான செயல் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் லேட்டரல் என்ட்ரி மூலம் ஒன்றிய அரசுப் பணிகளை நேரடி யாக உயர் அதிகாரிகளை நியமிக்கும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து யுபிஎஸ்சி தலைவர் ப்ரீத்தி சூடானுக்கு, ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
2005ஆம் ஆண்டு வீரப்ப மொய்லி தலைமையிலான குழு, லேட்டரல் என்ட்ரி முறையை அங்கீகரித்தது. 2013ஆம் ஆண்டு 6ஆவது நிதி ஆயோக் கூட்டத்திலும் இது உறுதி செய்யப்பட்டது. எனினும் இதற்கு முன்பும் பின்பும் ஏராளமான உயர் பதவிகள், லேட்டரல் என்ட்ரி மூலம் நிரப்பப்பட்டன. கடந்த கால அரசாங்கத்தில் யு.அய்.டி.ஏ.அய். தலைமை உள்ளிட்ட பொறுப்புகள் இவ்வாறே நிரப்பப்பட்டன.
எனினும் வேலைவாய்ப்புகளில் சமூக நீதியை நிலைநாட்ட இட ஒதுக்கீடு அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் யுபிஎஸ்சி அண்மையில் வெளியிட்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பில் இத்தகைய இட ஒதுக்கீடு பின்பற்றப்படாததால், அந்த விளம்பரத்தை ரத்து செய்யும்படி வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.