நாகர்கோவில், ஆக.19- திராவிட கருத்துகளைப் பேசினால் பிரிவினை வாத இயக்கம் என்பதா? ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு முதலில் அறிவுரை சொல்லுங்கள் என ஆளுநருக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில் அளித்துள்ளார்.
நூற்றாண்டு விழா
மேனாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தி.மு.க. இளைஞரணி சார்பில் மாணவ- மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நாகர்கோவில் டதி பள்ளியில் நேற்று (18.8.2024) நடந்தது. போட்டியை பால்வ ளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
திராவிட சித்தாந்தத்தை உலகிற்கு எடுத்துக்கூற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அதற்காகத்தான் இந்த பேச்சுப் போட்டி நடத்தப்பட்டுள்ளது. ஜாதிய கட்டமைப்பு தான் அடிமைத்தனத்தை உருவாக்கி மக்களை பல்வேறு அநீதிகளுக்கு ஆளாக்கியது. அதை நியாயப்படுத்தும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது. எனவே பகுத்தறிவு கருத்து களை பேச பல்லாயிரம் மக்கள் தேவைப்படுகிறார்கள்.
பிரிவினைவாத இயக்கமா?
திராவிடம்தான் பிரிவினைவாதத்தை தூண்டுவதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
திராவிடம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், உரிமைக்காகவும் போராடுகின்ற இயக்கம். இந்த இயக்கம் தங்களது கருத்துகளை பேசுவதை பிரிவினை கருத்துகள் என்று நினைத்தால் எங்களை பிரிவினைவாதி என்று அடையாளப்படுத்துவதை பெருமையாக நினைக்கிறோம். முதலில் ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு, ஆளுநர் அறிவுரை சொல்லுங்கள். மேனாள் முதலமைச்சர் கலைஞரை பிரதமர் மோடி புகழ்ந்து பேசி இருக்கிறார். கலைஞரை புகழாமல் யாரும் இருக்க முடியாது. ஏனென்றால் அவர் ஒரு சரித்திர சகாப்தம். பிரதமர் நாற்காலியில் பலரை அமர வைத்துள்ளார். எனவே கலைஞரை பிரதமர் மோடி பாராட்டியது பெரிய விடயமாக நான் பார்க்கவில்லை.
– இவ்வாறு அவர் கூறினார்.