மற்றவர்கள் செய்யத் தவறிய ஒன்றை,
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் இன்றைக்குச் செய்திருக்கிறது
மூடநம்பிக்கையைப் போக்குவதற்கு கடவுள் – ஆத்மா போன்றவற்றை மறுத்து பெரிய புரட்சி செய்த முதல் பகுத்தறிவுவாதி புத்தர்!
சென்னை, ஆக.10 வேதங்களை மறுப்பதற்கு, ஜாதியை மறுப்பதற்கு, பெண்ணடிமையை நீக்குவதற்கு, மூடநம்பிக் கையைப் போக்குவதற்கு கடவுள், ஆத்மா போன்ற கருத்துகளையெல்லாம் மறுத்து பெரிய புரட்சி செய்த முதல் பகுத்தறிவுவாதி புத்தர். அந்த புத்தரையே என்ன செய்தார்கள் என்றால், மகாவிஷ்ணு அவதாரமாக்கி விட்டார்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கடந்த 4.8.2023 காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில், ‘‘இந்திய வரலாற்றின் மீதான திரிபுவாதத் தாக்குதல்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது தொடக்கவுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
தேசிய கீதத்தில், ‘திராவிட உத்கல வங்கா’ என்றுதானே பாடுகிறார்கள்
ஒவ்வொரு நாளும் அரசு நிகழ்வு மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் முடிகின்றபொழுது, எழுந்து நின்று, நம்முடைய நாட்டு வணக்கம் பாடுகிறார்கள். நாட்டு வணக்கம் என்று சொன்னால்கூட பல பேருக்குப் புரியாது. தேசிய கீதம் பாடுகிறார்கள். அந்த தேசிய கீதத்தில், ‘திராவிட உத்கல வங்கா’ என்று உள்ளதையும்தானே பாடுகிறார்கள்.
ஆகவே, திராவிடம் என்கிற ஒரே ஒரு சொல்லுக்காக சொல்கிறேன் நண்பர்களே. எப்படியெல்லாம் திரிபு வாதம் செய்கிறார்கள் என்று பாருங்கள். பெரிய நிலை யில் இருக்கிறவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லும் பொழுது என்னாகும்?
பொய்யுடை ஒருவன் சொல்வன் மையினால்
மெய் போலும்மே மெய்போலும்மே!
என்று சொல்வதைப்போல, மீண்டும் மீண்டும் ஒரே பொய்யைத் திரும்பத் திரும்ப சொன்னால் அது மெய்போல வரும் என்று சொல்லக்கூடிய அளவிற்குத் தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.
எனவே, திரிபுவாதத்தை, தத்துவத்தை மதமாக்கி னார்கள்; புராணங்களை வரலாறாக்கினார்கள்; போலி விஞ்ஞானத்தை அறிவியலாக்கினார்கள்; அவற்றை பாடத் திட்டங்களில் சேர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதற்கு நிறைய செய்திகள் உள்ளன.
புத்தரையே, மகாவிஷ்ணு அவதாரமாக்கிவிட்டார்கள்!
வேதங்களை மறுப்பதற்கு, ஜாதியை மறுப்பதற்கு, பெண்ணடிமையை நீக்குவதற்கு, மூடநம்பிக்கையைப் போக்குவதற்குக் கடவுள், ஆத்மா போன்ற கருத்துகளை யெல்லாம் மறுத்து பெரிய புரட்சி செய்த முதல் பகுத் தறிவுவாதி புத்தர். அந்த புத்தரையே என்ன செய்தார்கள் என்றால், மகாவிஷ்ணு அவதாரமாக்கிவிட்டார்கள்.
10 ஆவது அவதாரம் எடுத்து வரப் போகிறார்- எப்பொழுது என்றால், வரப் போகிறார் என்கிறார்கள்.
‘அவதார்’ என்றால்
மேலே இருந்து கீழே இறங்குதல்!
‘அவதார்’ என்ற வார்த்தை சமஸ்கிருத வார்த்தை யாகும். அதற்கு என்ன அர்த்தம் என்றால், மேலே இருந்து கீழே இறங்குதல் என்பதாகும்.
வைஷ்ணவர்கள் மட்டும் ஏன் அவதாரம் எடுத்திருக் கிறார்கள்; ஏன், சிவன் அவதாரம் எடுக்கவில்லை என்ற கேள்விக்குப் பதில் சொல்லமாட்டார்கள்.
கதைகளைக் கதைகளாக மட்டும் பாருங்கள்; கதை களாகப் பார்க்கும்பொழுது, அதிலுள்ள கற்பனைத் திறன்களையெல்லாம் பார்க்கலாம்.
ஆனால், அதை வரலாறாக ஆக்கிக்கொண்டு பார்க்க வேண்டும் என்று சொல்லும்பொழுதுதான், அது ஆபத்தாக இருக்கிறது.
இந்தத் திரிபுவாதத்தினால் என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்றால், மக்களிடையே வெறுப்பைப் பரப்புகிறார்கள்.
இது வெறும் தத்துவமாக இருந்தால், ஏதோ தொலைந்து போகிறது; விட்டுவிட்டுப் போங்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு விட்டுவிடலாம்.
நோய்க் கிருமிகளை எதிர்த்து நாம் போராடவேண்டும்; உண்மையைக் காப்பாற்ற வேண்டும்!
சமூக வாழ்வில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனைப் பார்த்து கட்டித் தழுவவேண்டிய நேரத்தில், ஒற்றுமையாக இருக்கவேண்டிய நேரத்தில், அதை வெறுப்பிற்குப் பயன்படுத்து வதற்கு ஓர் ஆயுதமாக இந்தத் திரிபுவாதம் பயன்படுகிறது என்கிறபோதுதான், அத்தகைய நோய்க் கிருமிகளை எதிர்த்து நாம் போராட வேண்டும்; உண்மையைக் காப்பாற்றவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.
ஒரு மனிதன் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும், அவனை மட்டும் பொருத்ததாக இருந்தால், அந்த அறிவு பயன்படப் போவதில்லை.
ஏன் விஞ்ஞானிகளைப் பாராட்டுகிறோம்?
ஏன் விஞ்ஞானிகளைப் பாராட்டுகிறோம்? அந்த விஞ்ஞானத்தின்மூலமாக தொழில்நுட்பம் வளர்ந்திருக் கிறது. அந்தத் தொழில்நுட்பம்மூலமாக சமூகம் வளர்ந் திருக்கிறது; சமூகம் வளருவதால், நாடு வளருகிறது; நாடு வளருவதால், உலகம் வளருகிறது.
இப்படி ஒவ்வொரு துறையிலும் மிகப்பெரிய அளவிற்கு வாய்ப்புகளைப் பெற்றிருக்கின்ற நல்வாய்ப்பு இன்றைக்கு இருக்கிறது.
மற்றவர்கள் செய்யத் தவறிய ஒன்றை,
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் இன்றைக்குச் செய்திருக்கிறது
நீங்கள் செய்கின்ற ஆய்வு – மற்றவர்கள் செய்யத் தவறிய ஒன்றை, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் இன்றைக்குச் செய்திருக்கிறது என்று பாராட்டப் படவேண்டும். இதில் வெறும் ஆய்வாளர்களாக மட்டும் நீங்கள் கலந்துகொள்ள வில்லை. இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீதுதான் குடியரசுத் தலை வராக இருந்தாலும், ஊராட்சித் தலைவராக இருந்தாலும், நீதிபதியாக இருந்தாலும், அமைச்சர் களாக இருந்தாலும், முதலமைச்சராக இருந்தாலும், பிரதமராக இருந்தாலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மிக முக்கியமான ஒரு பகுதி – எல்லோருக்கும் அறிமுகமான பகுதி என்பது அடிப்படை உரிமைகள்தான்.
அரசமைப்புச் சட்டம்
அடிப்படைக் கடமைகள்!
ஆனால், அதில் இன்னொரு முக்கியமான பகுதி இணைக்கப்பட்டது. அதுதான் அடிப்படைக் கடமைகள் பிரிவு 51-ஏ (எச்).
அடிப்படைக் கடமைகளில், பல கடமைகள் இருக்கிறது என்றாலும், ஒன்றிரண்டை மட்டும் சுட்டிக் காட்டுகிறேன்.
It shall be the duty of every citizen of India-
to promote harmony and the spirit of common brotherhood amongst all the people of India transcending religious, linguistic and regional or sectional diversities; to renounce practices derogatory to the dignity of women;
‘‘பெண்களைக் கொச்சைப்படுத்தக் கூடிய, ஆபாசப் படுத்தக் கூடிய அளவிற்கு எது நடந்தாலும் அவற்றை யெல்லாம் புறந்தள்ளுவேன்; அத்தகைய பண்பட்ட மக்களை உருவாக்குவேன்” என்பதும் அந்த அடிப்படைக் கடமைகளில் முக்கியமானதாக உள்ளது.
இன்றைக்கு என்ன நிலைமை?
இதை ஓர் அரசியல் மேடையாக ஆக்கக்கூடாது என்பதற்காக நான் ஒரே ஒரு வார்த்தையில் உங்களுக்குச் சுட்டிக் காட்டுகிறேன்.
நாகரிகமான ஒரு சமுதாயத்தில்தான்
நாம் வாழுகிறோமா?
வடகிழக்குப் பகுதியில் நடைபெறுகின்ற நிகழ்வுகள் போதாதா? இன்னமும் நாகரிகமான ஒரு சமுதாயத்தில் தான் நாம் வாழுகிறோமா?
அது மறைக்கப்பட்டு இருக்கிறது.
உச்சநீதிமன்றம், தானே முன்வந்து அதை வழக்காக எடுத்துக்கொண்டு, பெண்களை நிர்வாணப்படுத்தி இருக்கிறீர்களே, இது என்ன துச்சாதனன்களின் காலமா? என்று கேள்வி எழுப்பி உள்ளது.
மகாபாரதக் கதையில் உள்ளதுபோன்று, எந்தப் பரமாத்மாவும் அங்கே வந்து, சேலையை உருவும்போது உரிய உரிய சேலையைக் கொடுத்துக் கொண்டிருந்தானா? உச்சநீதிமன்றம்தான், பரமாத்மாவிற்குப் பதிலாக, வெறும் ஆத்மாவாகக் கூட இல்லாமல், நீதிபதிகளாக வந்திருக்கக் கூடிய சூழ்நிலை வந்திருக்கிறது.
அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமையைப் பற்றி யாருக்காவது சிந்தனை இருந்திருக்கிறதா?
பெண்களைக் கொச்சைப்படுத்துவது, பாலியல் ரீதியாகத் துன்பப்டுத்துவது என்பது சரியா?
மனித குலத்தின் சரிபகுதி பெண்கள்!
மனித குலத்தின் சரிபகுதியாக உள்ள பெண்களை – இந்தியாவில் 130 கோடி மக்கள் தொகை இருக்கிறது என்றால், அதில் சரி பகுதி பெண்கள். அந்த சரி பகுதி மக்களுடைய கடமைகளை எடுத்துச் சொல்ல முடியவில்லையே!
அதுமட்டுமல்ல, அடுத்ததாக நண்பர்களே,
To develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform;
இவை அத்தனையையும் நடைமுறையாக்கம் செய் யவே இந்த ஆய்வு.
மற்றவர்கள் செய்யத் தவறிய பணியை
நீங்கள் செய்கிறீர்கள்!
அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, மற்றவர்கள் செய்யத் தவறிய பணியை நீங்கள் செய்கிறீர்கள்; பாராட் டப்படவேண்டும். ஆனால், பாராட்டுவதற்குப் பதிலாக நம் நாட்டில் என்ன கிடைக்கிறது?
ஏனய்யா, இப்படியெல்லாம் இருக்கிறார்கள் என்று தலைகீழாக மாற்றுகிறார்கள்.
ஏன்? எதற்கு? என்று கேள்!
மனிதநேயத்தில் சமத்துவம் வேண்டும்; ஒருவர் மேல்; ஒருவர் கீழ் என்று இருக்கக் கூடாது. ஆனால், இதை சொல்வதற்குப் பதிலாக இந்த நாட்டில் கீதையைப் பாடமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்கிறீர்கள்.
‘‘குலதர்மம் அல்ல; ஜாதிதான்;
மாற்றிச் சொல்கிறார்கள்’’
சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் –
நான்கு ஜாதிகளையும் நான்தான் உண்டாக்கினேன்.
குலதர்மம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வியாக் கியானத்தை மாற்றி சொன்னாலும், காஞ்சி சங்கராச் சாரியார் சொன்னார், ‘‘குலதர்மம் அல்ல; ஜாதிதான்; மாற்றிச் சொல்கிறார்கள்” என்று அவர் தெளிவாக உண்மையை ஒப்புக்கொண்டார்.
ஆகவே, பேதத்தை ஒரு பக்கத்தில் நீங்கள் சொல்லிக் கொடுத்துக்கொண்டு, இன்னொரு பக்கத்தில் சமத்துவம் வேண்டும் என்று சொல்வதற்குப் பதிலாக – எவையெல்லாம் சமத்துவத்திற்கு விரோதமாக இருக்கிறதோ, அவற்றை சொல்லக்கூடியதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
‘‘வேற்றுமையில் ஒற்றுமை!’’
to value and preserve the rich heritage of our composite culture;
நம்முடைய கலாச்சாரம் என்பது ‘‘Unity in Diversity” என்று சொல்கிறநேரத்தில், ‘‘வேற்றுமையில் ஒற்றுமை” காண்பது.
மற்றவர்களுக்குக் கிடைக்காத ஒரு புத்தகம் இது.
B.N.Pande என்பவர், ஆழ்ந்த புலமை வாய்ந்த அறிஞர். அவர் ஒடிசா ஆளுநராக இருந்தபோது, பாட்னாவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் ஆய்வு சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.
Gurha Bakshi memorial annual lecture – B.N.Pande
1985 ஆம் ஆண்டு ‘‘Islam and Indian Culture” என்ற தலைப்பில் அந்த உரையைப் புத்தகமாக வெளி யிட்டார்கள்.
அந்தப் புத்தகத்தை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் மூலமாக with the best compliments from B.N.Pande, Orissa Governor என்று எழுதி, எனக்கு அனுப்பினார். இது ஓர் அற்புதமான புத்தகமாகும்.
எப்படியெல்லாம் திரிபுவாதங்கள் நடைபெற்றன? திரிபுவாதம் நீண்ட காலமாக அரசியலில் நடந்துவரும் போராட்டம்.
எதையும் நாங்கள் ஆதாரமும், ஆவணமும் இல்லாமல் சொல்லுவதில்லை
அதுகுறித்து செய்தியைச் சொன்னார் – இது திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யக் கூட்டம். ஆகவேதான், இதற்குப் பொருத்தமாக சம்பந்தப்பட்ட வகையில், ஓர் உதாரணத்தை சொல்லி என்னுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.
ஆதாரப்பூர்வமாக இந்த ஆவணத்தோடு உங் களுக்குச் சுட்டிக்காட்டுகிறேன். எதையும் நாங்கள் ஆதாரமும், ஆவணமும் இல்லாமல் சொல்லுவதில்லை.
(தொடரும்)