சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில், ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வின்போது, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பொதுத் துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர். (சென்னை, 18.8.2024)
சென்னை,ஆக.19 சென்னையில் நேற்று (18.8.2024) நடந்த விழாவில், மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது உருவம் பொறிக்கப்பட்டு, ‘தமிழ் வெல்லும்’ என்ற வாசகத்துடன் ரூ.100 மதிப்புள்ள நாணயம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த நாணயம் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (18.82024) நடைபெற்றது. நாணயத்தை ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
விழாவில், ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: நாட்டின் தலைசிறந்த தலைவர் கலைஞர். இவர் தனது அரசியல் ஆளுமையை தமிழ்நாடு மட்டுமின்றி, நாடு முழுவதும் இந்திய அரசியலில் விரிவுபடுத்தியவர். தமிழ்நாடு மக்கள் நலனுக்காக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த நாட்டு மக்கள் நலனுக்காகவும், சமூகநீதிக்காகவும் பாடுபட்டவர்.
தனது அரசியல் பயணத்தில் 5 முறை முதலமைச் சராக பதவி வகித்து, விளிம்புநிலை மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபட்டார். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல்வேறு திட்டங் களை செயல்படுத்தினார். மக்களாட்சி கட்டமைப்பை வலுப்படுத்த அரும்பாடு பட்டார்.
சுதந்திர நாளன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்ற அனுமதி பெற்றுத் தந்தார். அதைத் தொடர்ந்து முதல் முதலமைச்சராக 1974-ஆம் ஆண்டு சுதந்திர நாளன்று தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
மக்களாட்சி தத்துவத்தில் மிகவும் நம்பிக்கை கொண்டவர். பல்வேறு அரசியல் கட்சிகள் இணைந்து, ஒன்றியத்தில் நிலையான அரசை அமைப்பதற்கு வழிவகுத்தவர். ஒன்றியத்தின் வாஜ்பாய் தலைமையில் அமைந்தஅரசு, பெரும்பான்மை இழந்தபோது,அந்த அரசுக்கு ஆதரவளித்து முக்கிய பங்காற்றிய கலைஞரின் செயல்பாடு, இதற்கு சிறந்த உதாரணம்.
மக்களுடன் ஆழமான தொடர்பைஏற்படுத்திக் கொள்வது எப்படி என்பது குறித்து ஒவ்வொரு அரசியல்வாதியும் கலைஞரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். கவிதை, தமிழ்இலக்கியம், திரைத்துறை ஆகியவற்றிலும் சிறந்து விளங்கினார்.
இத்தகைய சிறப்பு மிக்கமாபெரும் தலைவரின் நினைவு நாணயத்தை வெளியிட வாய்ப்புஅளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக அமைச்சர் துரைமுருகன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன், மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, பாமக சட்டப்பேரவை தலைவர் ஜி.கே.மணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர்.
விழாவில், கலைஞர் பற்றியசிறப்பு காணொலி திரையிடப்பட்டது. ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டதன்பேரில், விழாவில் பங்கேற்ற அனைவரும் எழுந்து நின்று முத்தமிழறிஞர் கலைஞருக்கு மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, நேற்று (18.8.2024) மாலை கடலோர காவல்படை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு வந்த ராஜ்நாத் சிங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஜ்நாத் சிங்,ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினர். கலைஞர் அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். அதில், கலைஞருடன் அமர்ந்திருப்பது போல ராஜ்நாத் சிங் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா. முத்தரசன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை, தமிழ்நாடு சட்டபேரவைத் தலைவர் மு. அப்பாவு, தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், முரசொலி செல்வம், கலைஞர் தொலைக்காட்சி இயக்குநர் அமிர்தம் மற்றும் அமைச்சர் பெருமக்கள், கட்சியினர் பங்கேற்றனர். (சென்னை, 18.8.2024)