என்.எல்.சி. விரிவாக்கப் பணிகளுக்காக நெய்வேலி, கடலூர் உள்ளிட்டப் பகுதிகளை சுற்றியுள்ள இடங்களில் என்.எல்.சி. நிர்வாகம் நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. அவ்வாறு கையகப் படுத்தும்போது அந்த நிலத்திற்கு பணமும், வீட்டுக்கு ஒருவருக்கு வேலையும் வழங்குவதாக உறுதி அளித்தது.
அந்த வகையில்தான் கடலூரில் என்.எல்.சி. விரிவாக்கப் பணிகளுக்காக வளையமாதேவியில் நிலங்களைக் கையகப்படுத்தியது. ஆனால் இங்குள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்தியபோது அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்களை அழித்து அங்கு காங்கிரீட் போடும் பணிகளை அமைக்கும் முயற்சியில் என்.எல்.சி. ஈடுபட்டுள்ளது.
என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் 862 பேருக்கு கடந்த 1990 முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கப்பட் டிருப்பதாக என்.எல்.சி. நிறுவனம் அதன் இணையதளத்தில் தெரி வித்துள்ளது. ஆனால், 2010, 2011, 2012 ஆகிய ஆண்டுகளில் வேலை பெற்ற 28 பேர் வட இந்தியர்கள் ஆவர். வட இந்தியர்களுக்கான வேலை நேரடியாக வழங்கப்படவில்லை. கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்ட பரிந்துரைப்பட்டியலின் அடிப்படையில் வழங்கப்பட்டிருப்பதாக என்.எல்.சி., நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி.,க்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட பகுதிகளில் வட இந்தியர்களுக்கு சொந்தமான நிலங்களே இல்லை எனும் போது, வட இந்தியர்கள் எவ்வாறு நிலம் வழங்கியிருக்க முடியும்? அவர்கள் நிலமே வழங்காத நிலையில் அவர்களுக்கு எவ்வாறு வேலை வழங்கப்பட்டது?
வட இந்தியர்களுக்கு எந்த அடிப்படையில் வேலை வழங்கப் பட்டது என்பது குறித்த உண்மையைத் தெரிந்து கொள்வதற்காக, கடலூர் மாவட்ட நிர்வாகத்திடமிருந்து எந்தெந்த நாள்களில் பரிந்துரை பட்டியல் வழங்கப்பட்டது? அது தொடர்பாக கடலூர் மாவட்ட நிர்வாகத்தால் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளின் நகல் ஆகியவற்றை வழங்கும்படி கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி எழுப்பிய வினாக்களுக்கு என்.எல்.சி. நிர்வாகம் பதிலளிக்கவில்லை. அது குறித்த தகவல்கள் குப்புசாமி கோரிய வடிவத்தில் தங்களிடம் இல்லை என்று என்.எல்.சி. நிர்வாகம் கூறியுள்ளது. இல்லாத தகவல்களின் அடிப்படையில் என்.எல்.சி. எவ்வாறு நிரந்தர வேலை வழங்கியது?
என்.எல்.சி. நிறுவனத்திற்கு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 ஆயிரம் குடும்பங்கள் மொத்தம் 37,256 ஏக்கர் நிலங்களை வழங்கியுள்ளன. அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் 1827 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் கடந்த 12.12.2022 அன்று கேட்கப்பட்ட வினாவிற்கு ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி விடையளித்திருந்தார். அப்போது ஒன்றிய அரசிடம் இல்லாத செய்திகளை என்.எல்.சி. நிறுவனம் இணையத்தில் வெளியிட்டது எப்படி? இது தொடர்பான தகவல்களை நாடாளுமன்றத்திற்கு என்.எல்.சி. மறைத்ததா என்பது குறித்து விடையளிக்கப்பட வேண்டும்.
என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலம் வழங்கிய கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 ஆயிரத்திற்கும் கூடுதலான குடும்பங்களுக்கு இன்னும் வேலை வழங்கப்படாத நிலையில், நிலமே வழங்காத வட இந்தியர்களுக்கு என்.எல்.சி. வேலை வழங்கியது எப்படி? அது தொடர்பான தகவல்களை வழங்க மறுப்பது ஏன்? இதன் பின்னணியில் ஊழலும், முறைகேடுகளும் நடந்துள்ளனவா?
இந்தப் புகார்களுக்கு என்.எல்.சி. விளக்கம் அளித்துள்ளது. அதில் ராஜஸ்தானில் நிலம் வழங்கிய 28 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. என்.எல்.சி. இந்திய அளவிலான நிறுவனம் என்பதால் ராஜஸ்தானில் என்.எல்.சி. திட்டங்களுக்கு நிலம் வழங்கிய 28 பேருக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளது.
மேலும் இது குறித்து என்.எல்.சி. நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது “சம்பந்தப்பட்ட 28 நபர்களும் ராஜஸ்தானில் உள்ள என்.எல்.சி. பர்சிங் சார் சுரங்கங்கள் மற்றும் அனல்மின் திட்டங்களுக்காக வழங்கப்பட்ட நிலத்தை கருத்தில் கொண்டு என்.எல்.சி. திட்டங்களுக்கு நிலம் வழங்கியவர்கள் பிரிவின் கீழ் வேலை வழங்கப்பட்டது” என்பதுதான் அந்த விளக்கம்.
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்காக நிலங்களை வழங்கியவர்களுக்கு தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது என்பதற்கு என்.எல்.சி. நிர்வாகம் உரிய பதில் சொல்லியாக வேண்டும்.
இதற்காக திராவிடர் கழகம் உள்பட பல்வேறு அமைப்புகளும், என்.எல்.சி. பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் வேண்டுகோள் போராட்டங்கள் நடத்தியும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் பாராமுகம் காட்டுவது ஏன்? ராஜஸ்தானுக்கு ஒரு நீதி தமிழ்நாட்டுக்கு வேறொரு நீதியா? இதுமட்டுமா? ஒன்றிய அரசு கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாடு இளைஞர்களை வேலை வாய்ப்பில் இருந்து தவிர்த்து வட இந்தியர்களைப் புகுத்துவதற்கு ஏதுவாக என்.எல்.சியில் தற்போதுள்ள தலைவர் மற்றும் இயக்குநர்கள் 11 பேரில் தமிழ்நாடு அரசின் பிரதிநிதியாக இருக்கும் உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் தவிர, மீதமுள்ள 10 பேரில் 9 பேர் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள். இவர்கள் திட்டமிட்டு தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களை திணிப்பதற்காகத் தேர்வு களில் பல்வேறு முறைகேடுகளைச் செய்வதை யாராலும் தடுக்க முடியவில்லை.
சென்னை மணலியில் உள்ள சென்னை பெட்ரோலிய நிறுவனத் தில் வேதியியல் பொறியாளர் பணிக்கு 21 பேர், இயந்திரவியல் பொறியாளர் பணிக்கு 9 பேர், மின்னியல் பொறியாளர் பணிக்கு 5 பேர் உள்பட மொத்தம் 8 வகையான பணிகளுக்கு 42 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அப்பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டதில் அவர்களில் ஒருவர் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் அல்ல
பொன்மலை ரயில்வே தொழிற்சாலையில் ஆர்.ஆர்.பி. மூலம் கிரேடு 3 தொழில்நுட்ப பணியாளர்கள் 540 பேருக்கு வேலை வழங்கிடச் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் தற்பொழுது நடந்து வருகின்றன. இந்த 540 பேரில் 15 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்
07.08.2020 இல் தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் எலக்ட்ரிஷியன், ஃபிட்டர், மெக்கானிக், வெல்டர் உள்ளிட்ட தொழில் பழகுநர் இடங்களுக்கு 1,765 பேர் தேர்வு செய்யப்பட்டதில் 1,600 பேர் வட இந்தியர்களாவர்!
16.02.2021 இல் பொன்மலை பணிமனைக்கு பழகுநர் பயிற்சி முடிந்து பணிக்கு வந்த 68 பேரில் 65 நபர்கள் ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வட மாநிலத்தவர்கள். மீதமுள்ள மூன்று நபர்கள் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்
தமிழ்நாடு என்றால் இளக்காரமா? தமிழ்நாடு என்ன திறந்த வீடா?