புதுடில்லி, ஆக. 18- ‘மதச்சாா்பற்ற பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்’ என வலியுறுத்தி சுதந்திர நாள் உரையில் பிரதமா் மோடி பேசிய நிலையில், அதனை ஆதரிக்க பாஜக கூட்டணி கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன.
பாஜக தலைமையி லான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமாரின் அய்க்கிய ஜனதா தளம், மேனாள் மத்திய அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிகள் பொது சிவில் சட்டத்துக்கு உடனடியாக ஆதரவு தெரிவிக்க மறுத்துள்ளன.
தெலுங்கு தேசம்: இதுதொடா்பாக தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளா் லவு சிறீகிருஷ்ண தேவராயலு கூறுகையில், ‘பொது சிவில் சட்டம் தொடா்பான விவரங்கள் வெளிவரும் வரை தெலுங்கு தேசம் கட்சியின் நிலைப்பாட்டை இறுதி செய்யப்போவதில்லை’ எனத் தெரிவித்துள்ளாா்.
அய்க்கிய ஜனதா தளம்: ‘பிற மாநிலங்கள் மற்றும் மதத் தலைவா்களின் ஒருமித்த கருத்தைக் கேட்ட பின்னரே பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்று அய்க்கிய ஜனதா தளத்தின் செய்தித் தொடா்பாளா் கே.சி.தியாகி தெரிவித்தாா்.
நிதீஷ் குமாா் கடந்த 2017-ஆம் ஆண்டு சட்ட ஆணையத்திடம் தெரிவித்த கருத்தை மேற்கோள் காட்டி கே.சி.தியாகி இந்த கருத்தை தெரிவித்தாா்.
அதில், ‘சிறுபான்மையினா் உள்பட அனைத்து மதங்களின் சம்மதத்தை பெறாமல், பொது சிவில் சட்டத்தை திணிக்க எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியும், மத சுதந்திரத்துக்காக அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள உத்தரவாதத்தின் மீதான நம்பிக்கையை குறைக்க வழிவகுக்கும்’ என நிதீஷ் குமாா் தெரிவித்திருந்தாா்.
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்): என்டிஏ கூட்டணியில் உள்ள லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், ஒன்றிய அமைச்சருமான சிராக் பாஸ்வான் கூறுகையில், ‘நாடு முழுவதும் உள்ள பல்வேறு கலாசாரம், மொழிகள் மற்றும் பிராந்திய வேறுபாடுகள் கொண்ட அனைவரையும் எப்படி ஒரே குடையின் கீழ் கொண்டு வர முடியும்’ என்று கேள்வி எழுப்பினாா்.
‘பொது சிவில் சட்டத்தை ஆதரிக்க பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் தயக்கமா?’
Leave a Comment