நூல்: “வைக்கம் போராட்ட வரலாறு”
அவதூறுகளும் விளக்கங்களும்
ஆசிரியர்: கி.வீரமணி
வெளியீடு: திராவிடர் கழக வெளியீடு
முதல் பதிப்பு 2023
பக்கங்கள் 144
நன்கொடை ரூ. 150/-
பொ.நாகராஜன்
பெரியாரிய ஆய்வாளர்
* வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா தற்போது நாடெங்கும் நடைபெற்று வருகின்றது . இந்திய வரலாற்றில் மனித உரிமைக்காக, மனித சமத்துவத்திற்காக 1924 முதல் 1925ஆம் ஆண்டு வரை கேரளாவின் வைக்கத்தில் நடத்தப்பட்ட முதலாவது எழுச்சிப் போராட்டம் இது!
* வைக்கம் போராட்டத்தை முன் மாதிரியாக கொண்டு 1927ஆம் ஆண்டில் அம்பேத்கர் தலைமையில் நடைபெற்ற மகாராட்டிராவின் மகத் குளப் போராட்டம் மற்றுமொரு வரலாற்று சாதனை நிகழ்வாகும்!
* வைக்கம் போராட்டம் பற்றி ஏற்கெனவே இரண்டு நூல்களை திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது.
1986இல் வெளியானது – காங்கிரஸ் பழைய வரலாறும் வைக்கம் போராட்டமும் . மறைக்கப்படும் உண்மைகள்.
1999இல் வெளியானது – வைக்கம் போராட்ட வரலாறு.
இந்த இரண்டு நூல்களும் நல்ல பயனைத் தந்தன. தற்போது இந்த நூல் வைக்கம் போராட்டம் சம்பந்தமாக கிளப்பி விடப்பட்ட பல அவதூறுகளுக்கு விளக்கம் தருவதற்காக புதிய ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளது!
* இந்த நூலில் – வைக்கம் போராட்டத்திற் கான காரணங்கள்; போராட்டத்தை முன்னின்று நடத்திய கேரள காங்கிரஸ் தலைவர்கள்; போராட்டத்திற்காக வர வழைக்கப்பட்ட சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர் பெரியாரின் பங்கு; போராட்டத்தின் போது ஓராண்டாக காந்தியாரின் ஒத்துழையாமைப் போக்கு; போராட்டம் வெற்றியை நோக்கி நெருங்கும் போது காந்தியாரின் ஆதரவு; காந்தியாருடன் வைதிகர்கள் நடத்திய உரையாடல்கள்…. இப்படி பல வரலாற்று முக்கிய தகவல்கள் தரப்பட்டுள்ளன!
* வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாரின் பங்கை அறிந்து கொள்ள உதவும் சில முக்கிய புள்ளி விவரங்கள் :
1) வைக்கம் போராட்டம் துவக்கப்பட்ட நாள் – 30.03.1924
2) பெரியார் முதன்முதலில் வைக்கம் சென்றடைந்தது – 13.04.1924
3) கேரளத்தில் பெரியார் இருந்த நாட்கள் – 141
4) பெரியார் சிறையில் இருந்த நாட்கள் – 74. பிரச்சாரத்தில் இருந்த நாட்கள் – 67
5) பெரியார் முதன் முறையாக கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றது – 22.05.1924. சிறையிலிருந்து விடுதலையானது – 21.06.1924.
6) பெரியார் இரண்டாம் முறையாக கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றது – 19.07.1924. சிறையிலிருந்து விடுதலையானது – 30.08.1924
7) போராட்டம் ஓராண்டை நிறைவு செய்யும் தருவாயில் காந்தியார் திருவாங்கூருக்கு வந்து தங்கிய நாட்கள் – 09.03.1925 முதல் 18.03.1925 வரை.
8) வைக்கம் போராட்டம் முடிவுக்கு வந்து, வைக்கத்தில் வெற்றி விழா ஏற்பாடு செய்து, அந்த விழாவிற்கு தந்தை பெரியார் தலைமையேற்று நடத்திய நாள் – 29.11.1925.
* வைக்கம் போராட்டத்தில் பெரியார் மட்டுமா கலந்து கொண்டார்? இல்லையில்லை! அவரது துணைவியார் நாகம்மையார், தங்கை கண்ணம்மாள், பெரியாரின் உறவினர்கள் லட்சுமியம்மாள் மற்றும் மாரக்காயம்மாள் ஆகியோரும் போராட்டத்தில் பங்கு பெற்று சரித்திரம் படைத்தனர்!
* இந்திய வரலாற்றில் அதற்கு முன்னரும் அல்லது பின்னரும் எந்தவொரு தலைவரின் குடும்பத்தினர் அனைவருமாக மனித உரிமைப் போராட்டத்தில் கலந்து கொண்ட தகவல்களை நம்மால் காண இயலாது!
* வைக்கம் சென்றடைந்த பெரியார் – கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் படுவதற்கு முன்பாக கேரளத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். ஜாதியை ஒழிக்கவே அவர் கடவுளையும் மதத்தையும் ஒழிக்க கிளம்பியவர். கேரளத்தில் தீண்டாமை மட்டுமல்ல அணுகாமையும் பாராமையும் நிலவி வந்தது!
* அன்றைய கேரளமோ மனித ஏற்றத் தாழ்வுகளின் தொட்டிலாக இயங்கி வந்தது! சமூக சீர்திருத்தவாதிகளின் கோபத்தை தூண்டுவதாக இருந்தது! இந்த கொடுமைகளுக்கு எதிராக பெரியார் தனது பாணியில் திருவனந்தபுரத்தில் 01.05.1924 அன்று பேசிய நியாயமான, அறிவுபூர்வமான வாதங்களை கவனமாக படியுங்கள் :
* “சில இந்துக்கள் ( ஈழவர், புலையர் ) சில குறிப்பிட்ட வேலையைச் செய்வதால், தீண்டத்தகாதவர் ஆகி விடுவார் என்பது உண்மையா?….
வலது கை சாப்பிடுவது போன்ற குறிப்பிட்ட நோக்கங் களுக்காக பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது! உடம்பின் கழிவுகளைச் சுத்தம் படுத்துவது போன்ற குறிப்பிட்ட பணிகளுக்காக இடது கை இருக்கிறது!… ( அப்படியென்றால் ) ஒவ்வொரு கைக்கும் தனித் தந்தை – தாய் உண்டா? …
இடது கையைத் தொடும் போதெல்லாம், வலது கை குளித்து முழுக வேண்டும் என்று நினைக்கிறதா? … நாம் கடவுளைத் தொழும் போது வலது கையுடன் மட்டும் செல்கிறோமா? …கோயிலுக்கு செல்லும் போது நமது இடது கையை விட்டு விட்டு செல்கிறோமா?….
வலது பக்கம் இடது பக்கத்தை விட உயர்வானது என்றால் இடது கண்ணால் நம்மை பார்ப்பவரை குற்றம் சொல்கிறோமா? … வலது காலால் உதைபடும் போது சந்தோஷப்படுகிறோமா?.. வெவ்வேறு வேலைகளைச் செய்தாலும் சமத்துவமாக அல்லவா எல்லா விரல்களையும் கருதுகிறோம்! ” …
* ஒடுக்கப்பட்டோருக்காக பெரியாரின் மனம் பட்ட பாட்டை அவரது உரையின் நியாய அநியாய தர்க்கங்களில் உணர முடிகின்றது!
வலது கை, இடது கை – இந்த இரு கைகளைக் கொண்டே ஒரு கை பார்த்து விட்டார் பெரியார்! இது அய்யாவுக்கு கை வந்த கலையல்லவா?
* வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் அளப்பரிய பங்கை மறைத்து, ‘காந்தியாரின் மூலம் தான் போராட்டம் வெற்றி பெற்றது’ என்ற எண்ணத்தை முதன்முதலில் திட்டமிட்டு விதைத்தவர் ராஜகோபாலாச்சாரியார். ஆனால் இதை பெரியார் பெரிதுபடுத்தவில்லை!
* “காந்தியாரின் மூலமே காரியம் (வெற்றி) நடந்ததாக ஊருக்கு காட்ட வேண்டுமென்று, தந்திரம் செய்து, காந்தியாருக்கு கடிதம் எழுதினார் ( ராஜாஜி ). எனக்கு அதைப் பற்றி கவலையில்லை! எப்படியாவது காரியம் வெற்றியானால் போதும்! நமக்கு பேரும் புகழும் வருவது முக்கியமல்ல என்ற கருத்தில் நான் ஒத்துக் கொண்டேன்!” .. என்று சொன்ன பெரியாரின் பெரிய மனது அரசியல் உலகில் அரிதிலும் அரிது!
* வைக்கம் போராட்டம் துவங்கிய போது அதற்கு ஆதரவு தராமல் போராட்டக் காரர்களுக்கு ஒத்துழைப்பு தர மறுத்தவர் காந்தியார்! போராட்டம் துவக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெறும் தருவாயில், இனி போராட்டம் வெற்றி பெறும் என அறிந்த பின்னர் தனது ஆதரவை வழங்கினார்! இதற்கு நூலில் கிடைத்த ஆதாரங்கள் இதோ:
1) வைக்கம் போராட்டம் துவங்கி இரண்டே நாளில் போராட்டத்தை நிறுத்தி வையுங்கள்’ என கடிதம் அனுப்பினார் காந்தியார்!
2) உண்ணாநிலைப் போராட்டத்தின் போது, அதை தவிர்க்கும் படி தந்தி அனுப்பி, எழுச்சியை குன்றச் செய்தார் காந்தியார்!
3) போராட்டத்திற்கு மற்ற தலைவர்களை அனுப்ப மறுத்தார் காந்தியார்!
4) போராட்டத்தில் ஹிந்து அல்லாதவர்களை கலந்து கொள்ளக்கூடாது எனக் கூறி, இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறிஸ்துவர்களை வெளியேற்றினார் காந்தியார்!
5) வைக்கத்தில் சீக்கியர்கள் உணவு வழங்கிய போது, “கிலி பிடித்துள்ள வைக்கம் ஹிந்துக்களுக்கு ஆபத்தானது! அதில் உணவு உட்கொள்வதை விட பட்டினி கிடப்பது உசிதம்! ” என்று குஜராத்தில் இருந்து கொண்டு வியாக்கியானம் செய்தார் காந்தி!
6) போராட்டத்திற்கு கேரளத்திற்கு வெளியிலிருந்து பண உதவியோ, ஆட்கள் உதவியோ பெறக்கூடாது என்றும் வெளியிலிருந்து அனுதாபம் மட்டுமே வரலாம் என தனது பெரிய மனதைக் காட்டினார் காந்தியார்!
7) மனித குலத்தில் பிறப்பால் உயர்வு, தாழ்வு பேதம் கற்பிக்கின்ற வர்ணாசிரமத்தை, ‘நியாய விரோதமாக தெரியவில்லை’ என்று நன்னடத்தை சான்று தந்தார் காந்தியார்!
8) “எப்படி போராட்டக்காரர்கள் எல்லோரும் யோக்கியர்கள் இல்லையோ அப்படியே எதிரிகள் எல்லோரும் அயோக்கியர்கள் இல்லை” … என்று சமாதானம் சொன்னார் காந்தியார்!
9) போராட்டத்திற்காக பணம் தேவை என ஒரு போராட்டக்காரர் கடிதம் எழுதி கேட்ட போது, “பணம் இல்லாமையால் எந்த நல்ல காரியமும் கெட்டுப் போனதாக எனக்கு தெரியவில்லை!” … என்று ஒரு தலைவராக இல்லாமல் ஒரு வணிகராக (பனியா) பதில் சொன்னார் காந்தியார்!
10) “வைக்கம் போராட்டத்தின் போது நான் பத்திரமாக தூரத்தில் (குஜராத்தில்) வசித்து வருகிறேன்!” .. என்று தன்னை யாரும் போராட்டத்தில் இழுத்து விட முடியாது என்ற மகிழ்ச்சியில் பேசினார் காந்தியார்!
* இந்திய காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவராக, மகாத்மாவாக இருந்த காந்தியார் செய்யத் தயங்கியதை, செய்யத் தவிர்த்ததை அன்று ஒரு மாகாண காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார் – தன்னையும் தன் குடும்பத்தாரையும் பங்கு பெறச் செய்து, வைக்கம் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு, இருமுறை சிறை சென்று, சிறப்பான வெற்றி பெற்று இறுதியில் ‘ வைக்கம் வீரர் ‘ என பெயரெடுத்தாரே ….
அவரல்லவோ தலைவர்!
அதனாலல்லவோ அவர் பெரியார்!
வைக்கம் போராட்டம்! அது
மனுவாதிகளை தோற்கடிக்கச் செய்த முதல் – கொள்கை விளக்கம்!
மனித உரிமைகளை வெற்றி பெறச் செய்த முதல் – கலங்கரை விளக்கம்!!