அகமதாபாத், ஆக.18 குஜராத் மாணவர்களுக்கு சாவர்க்கர் உருவம் பதித்த சட்டையை அணிவித்த பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் தலைவர்கள் மீது தேசத் துரோகத்திற்கு இணையான பிரிவில் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
குஜராத் மாநிலம் சுரேந்திர நகரில் ஓர் அரசுப் பள்ளியில் சுதந்திர நாள் அணிவகுப்பு என்ற பெயரில் பள்ளி மாணவர்களுக்கு சாவர்க்கரின் உருவம் பதித்த சட்டைகளை அணிவித்து, அவர்களை ஊரின் முக்கிய சாலைகளில் நடக்கவைத்தனர்
இதனைக் கண்ட காங்கிரஸ் சேவா தள தேசிய தலைமை அமைப்பாளர் லால்ஜி தேசாய் மற்றும் குஜராத் காங்கிரஸ் செயற்குழுத் தலைவர் ருத்விக் மக்வானா கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனை அடுத்து மாணவர்கள் தங்களின் சட்டைகளைக் கழற்றி வீசினர். அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர்கள் ”அடுத்து என்ன, கோட்சே உருவம் பொறித்த சட்டைகளைப் பிள்ளைகளுக்கு அணியக் கொடுப்பீர்களா?” என்று கேள்வி கேட்டனர்.
ஆனால், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர், காவல்துறையினரிடம் பள்ளி நிர்வாகத்தில் காங்கிரஸ் காரர்கள் தலையிடுவதாகவும், அரசுப் பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டுவதாகவும் புகார் அளித்தார்.
காங்கிரஸ் தலைவர்கள், மாணவர்கள் அணிந்திருந்த காவி நிற சட்டைகளில் உள்ள சாவர்க்கர் உருவம் பதித்த படத்தை காட்சிப்பதிவு எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். இது குற்றம் ஆகும் என்று கூறிய காவல்துறையினர் காங்கிரசார் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் லால்ஜி தேசாய், “மாணவர்களை சாவர்க்கர் சட்டையை அணியச் சொல்வது மிகக் கொடுமை! அவர் காந்தியாரைப் படுகொலை செய்ய சதி செய்தவர்களில் ஒருவர். நாளை இவர்கள் நாதுராம் கோட்சே படங்கள் இருக்கும் டி–ஷர்ட்களை மாணவர்களுக்குத் தருவார்கள். ஏற்கெனவே இவர்கள் கோட்சேவை தேச நலனிற்காக உயிரிழந்த தியாகி என்று கூறுகின்றனர், சாவர்க்கர் உருவம் பொறித்த சட்டையை அணியச் சொல்லி சுதந்திரத்தை இழிவுபடுத்துகிறார்கள்” என்று கூறினார்.
இந்த சட்டைகள் மும்பையைச் சேர்ந்த இந்துமதி வசந்தலால் என்ற அறக்கட்டளை மூலம் பள்ளிக்குக் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது
எதிர்ப்புத் தெரிவித்த காங்கிரஸ் தலைவர்கள்மீது புதிய சட்டப் பிரிவுகளின்கீழ், மாணவர்களின் விடுதலை நாள் அணிவகுப்பை குலைக்க திட்டமிடுதல் மற்றும் ஆசிரியர்களை மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பி.ஜே.பி. ஆட்சி என்பது பச்சையான பாசிச ஆட்சி என்பதற்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை?