புதுடில்லி, ஆக. 17- இந்தியாவின் 78ஆவது விடுதலை நாள் விழாவில் பேசிய பிரதமர் மோடி, பல சர்ச்சை பேச்சுகளை முன்வைத்தார். நடப்பு சட்டங்களில் வகுப்புவாதம் இருப்பதாகவும், அதற்காகவே, பொது சிவில் சட்டம் கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையால், மக்கள் கடும் சினத்திற்குள்ளாகியுள்ளனர் என்றும் தெரிவித்தார். இதற்கு பதிலடி தரும் வகையில், எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும், மோடி அவர்கள், தன்னைப்பற்றி பேசுகிறாரா? என கேள்வி எழுப்பி, மோடி ஆட்சியில் நடக்கும் வன்முறைகளை பட்டியலிட்டனர்.
அவ்வகையில், மோடியின் சர்ச்சை பேச்சு குறித்து, கருத்து தெரிவித்த மாநிலங்களவை உறுப்பினரும், உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவருமான கபில் சிபல், “இந்திய வரலாற்றை சற்று ஆராய்ந்தால், நடப்பு பிரதமர் போல பிரிவினை பேசுபவர், இதற்கு முன் இருந்ததில்லை. உத்தரப் பிரதேசத்தில் கடை உரிமையாளர்கள் பெயர் தெரிய வேண்டும் என்பது, வங்காளதேசத்தில் இருந்து இந்தியா வர விரும்பும் இந்து பெண்களுக்கு அனுமதி மறுப்பது, கூடுதலாக பொது சிவில் சட்டம் முன்மொழிவு என அனைத்தும் பிரிவினைவாத அரசியல் தான்.
ஒன்றிய பா.ஜ.க.வினர், ஊடுருவல் குறித்து பேசு கின்றனர். ஆனால், உண்மையில் யார் ஊடுருவுகின்றனர்? இவர்கள் தான், அரசியல் அமைப்பில் ஊடுருவி, ஜனநாயகத்தின் அடிப்படையை நசுக்குகின்றனர்” என தெரிவித்துள்ளார்.
பேருந்துகளில் ஜாதி ரீதியான
பாடல்களை ஒலிபரப்பக் கூடாது
நெல்லை காவல்துறை எச்சரிக்கை
திருநெல்வேலி, ஆக. 17- நெல்லையில் பேருந்துகளில் ஜாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பக் கூடாது என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பினால் ஓட்டுநர், நடத்துநர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல் துணை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லையில் தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுடன் காவல்துறையினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அப்போது, திருநெல்வேலி மாநகர பேருந்துகளில் ஜாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பக் கூடாது என காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நெல்லையில் கடந்த சில நாள்களாக பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியான மோதல்கள் நடைபெற்று வரும் நிலையில், ஜாதிய மோதல்களை தடுக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மீறி ஜாதி ரீதியான பாடல்களை ஒலிபரப்பு செய்தால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் காவல் துணை ஆணையர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பங்கேற்றனர்.
புதிய சாதனை ஆராய்ச்சிக்
கல்வியில் புதிய சாதனை!
சென்னை, ஆக. 17- சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் கல்வி நிறுவனம் என்.அய்.ஆர்.எப். (NIRF) இந்தியத் தரவரிசை 2024இல் பல பிரிவுகளில் சிறப்பிடங்களைப் பெற்றுள்ளது. இந்தத் தரவரிசை நடைமுறைக்கு கடந்த ஆண்டு 5,543 உயர்கல்வி நிறுவனங்கள் பங்கேற்றதைவிட, இந்த ஆண்டு இரட்டிப்பு அளவாக 10,885 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. அந்த நிறுவனங்களுடன் போட்டியிட்டு, சவீதா குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பல் மருத்துவத்தில் முதல் இடத்தைப் பிடித்து, இந்தத் துறையில் அதன் முன்னிலையை உறுதிப்படுத்தியுள்ளது.
உலகளாவிய அளவில், பல் மருத்துவத்தில் உலகின் முன்னணி 25 நிறுவனங்களில் ஒன்றாக SIMATS இடம்பிடித்துள்ளது, கல்வி – ஆராய்ச்சியில் அதன் ஒப்பற்ற அர்ப்பணிப்பின் சான்றாகும்.
“மதிப்புமிக்க இந்த அங்கீகாரத்தைப் பெறுவதில் எங்கள் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களின் அர்ப்பணிப்பும், கடுமையான உழைப்புமே இதற்குக் காரணம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம். மேம்பட்ட உயர்ந்த தரத்தைப் பராமரிக்கவும், கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்து அனைத்து துறைகளிலும் முன்னேறி புதிய எல்லைகளைத் தகர்ப்பதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என சவீதா பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் என்.எம். வீரையன் மற்றும் இணைவேந்தர் டாக்டர் தீபக் நல்லசாமி ஆகியோர் தெரிவித்தனர்.