லண்டன், ஆக. 17- உலகில் எந்தெந்த நாடுகள் பாதுகாப்பானது, எந்தெந்த நாடுகள் பாதுகாப்பற்றது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அரசியல் அமைதியின்மை, அதிக குற்ற விகிதங்கள், இயற்கை பேரழிவுகள், தனிப் பட்ட பாதுகாப்பு, சுகாதாரப் பாதுகாப்பு, உள் கட்டமைப்பு பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு ஆகியவற்றை வைத்து கணிக்கப்பட்ட உலகின் மிகவும் ஆபத்தான நகரங்களை இங்கே பார்க்கலாம். உலகின் மிகவும் ஆபத்தான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நகரம், வெனிசுலாவின்(Venezuela) கராகஸ்(Caracas) ஆகும். இங்கு வன்முறை, கொள்ளை போன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுவதோடு அரசியல் குளறுபடிகள், குற்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் நகரமாகவும் உள்ளது.
ஆபத்துள்ள நகரம்
பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள நகரம் பாகிஸ்தானின்(Pakistan) கராச்சி ஆகும். சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக ஆபத்துள்ள நகரமாக இது பார்க்கப்படுகின்றது. இங்கு குற்றம், வன்முறை மட்டுமின்றி பயங்கரவாத அச்சுறுத்தல்களும் அதிகமாக உள்ளது. இயற்கை பேரிடர்களும் அதிகம் ஏற்படும்.
மூன்றாவது இடத்தில் மியான்மரின்(Myanmar) யாங்கோன் நகரம் உள்ளது. இந்த நகரத்திலும் குற்றச் செயல்கள் கணிசமாக அதிகரித்துள்ள துடன் பொருளாதார பிரச்சினைகளும் அதிகரித்து காணப்படுகிறது. நான்காவது இடத்தில் நைஜீரியாவின் லாகோஸ் உள்ளது. இங்கு ஏற்பட்டுள்ள வறுமை காரணமாக கொள்ளை நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பேரிடர் அபாயம்
அய்ந்தாவது இடத்தில் பிலிப்பைன்ஸின்(Philippines) மணிலா(Manila) உள்ளது. இங்கு இயற்கை பேரிடர் அபாயம் அதிகமாக உள்ளது.மேலும் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக இருப்பதால் ஆபத்தான நகரமாக கருதப்படுகிறது. ஆறாவது இடத்தில் வங்க தேசத்தின் (Bangladesh) டாக்கா நகரம் உள்ளது. இங்கு குற்றச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதுடன் வாழ்க்கைத் தரமும் மிகவும் மோசமாக உள்ளது.
ஏழாவது இடத்தில் கொலம்பியாவின் பொகோட்டா நகரம் உள்ளது. இது வண்ணமயமான நகரமாக இருந்தாலும் இங்கு நிலவும் பாதுகாப்பற்ற தன்மை மற்றும் குற்ற சம்பவங்கள் காரணமாக ஆபத்தான நகரமாக உள்ளது. இதனை தொடர்ந்து உலகின் மிகவும் ஆபத்தான நகரங்கள் பட்டியலில் எகிப்தில் உள்ள கெய்ரோ நகரம் 8ஆவது இடத்திலும், மெக்சிகோ 9ஆவது இடத்திலும், ஈக்வடாரில் உள்ள குய்டோ நகரம் 10ஆவது இடத்திலும் உள்ளன.
இக்னோ பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 31 வரை நீடிப்பு
சென்னை, ஆக. 17- இக்னோ பல்கலைக்கழக ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மண்டல இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் நேற்று (16.8.2024) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஒன்றிய அரசு பல்கலைக்கழகமான இக்னோ பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்பளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஜூலை பருவ சேர்க்கைக்கான கடைசி நாள் ஆகஸ்ட் மாதம் 31 வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, தொலைதூரக்கல்வி படிப்புகளில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பித்து சேரலாம்.
மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.c.in) விரிவாக அறிந்துகொள்ளலாம். மேலும், இக்னோ சென்னை மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.
இக்னோ பல்கலைக்கழகத்தில் பிஏ, பிகாம், பிஎஸ்சி படிப்புகளில் சேரும் தகுதியுடைய எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. எனவே, தகுதியுள்ள எஸ்சி, எஸ்டி மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.