– க.கனகராஜ்
மாநில செயற்குழு உறுப்பினர்
(சி.பி.அய்.(எம்))
11.08.2024 தேதியிட்ட ‘பாஞ்ச ஜன்யா’ என்ற ஆர்.எஸ்.எஸ்.சின் ஹிந்தி வார இதழில் அதன் ஆசிரியர் ஹிதேஸ் சங்கர் “ஓ நேதாஜி. எங்கே போகிறோம்?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அது ஜாதி பற்றிய கட்டுரை. அதன் சாராம்சம் இதுதான்:
“இந்திய சமூகத்தின் இணைப்புக் கண்ணியாக ஜாதி திகழ்கிறது. அது இந்திய சமூகத்தின் பல்வேறு பாரம்பரியங்களைப் பாதுகாத்து வருகிறது. ஆக்கிரமிப்பாளர்களின் இலக்காக இந்து சமூகத் தில் ஜாதி அமைப்பு இருந்திருக்கிறது. முகலாயர்கள் வாள்முனையில் தலையின் மீது மலத்தைச் சுமத்தி னார்கள். ஆங்கிலேய மிஷனரிகள் ‘சேவை’ என்ற பெய ரிலும் ‘சீர்திருத்தம்’ என்ற பெயரிலும் ஜாதிதான் சமத் துவமின்மைக்கும் ஒடுக்குமுறைக்கும் காரணம் என மண்டையில் ஏற்றி விட்டார்கள். இந்தியாவை உடைப்ப தற்காக; அதன் சுயமரியாதையை உடைப்பதற்காக- ஜாதி என்னும் பிணைப்புக் கண்ணியை – அது அடிமைத் தனம், சங்கிலி என்னும் கருத்தை ஆக்கிரமிப்பாளர்கள் உரு வாக்கினார்கள். எனவே,ஜாதி பாதுகாக்கப்பட வேண்டும்” – என்பது தான் ஹிதேஸ் சங்கரின் வாதம்.
முதலில் முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் தான் ஜாதி ஏற்றத்தாழ்வையும், பிரிவினையையும் உரு வாக்குவதாக ஒரு பொய்க் கோபுரத்தை கட்டுகிறார். இவர் சொல்வது உண்மையா? அல்லது இன்னொரு ‘சேவக்’ அதுவும் ‘பிரதான் சேவக்’ நரேந்திர மோடி சொல்வது உண்மையா?
மோடி சொல்வதையும் கேளுங்கள்:
“வால்மீகிகள் இந்த தொழிலை (மலம் அள்ளு வதை) வாழ்வாதாரத்திற்காக மட்டும் செய்து வந்தி ருக்கிறார்கள் என நான் நம்பவில்லை. அப்படி இருந்தி ருந்தால் வால்மீகிகள் தலைமுறை, தலைமுறையாக இத்தொழிலைச் செய்து கொண்டிருக்க வாய்ப்பில் லை. ஏதோ ஒரு கட்டத்தில் (வால்மீகிகளில்) யாரோ ஒரு வருக்கு ஒட்டுமொத்த சமூகத்திற்காகவும், கடவுளுக் காகவும் தாங்கள் செய்யும் சேவை இது என்ற ஞானம் தோன்றியிருக்க வேண்டும். மனிதக் கழிவுகளை அகற் றுவது தன்வயப்பட்ட ஆன்மீகச் செயல்பாடு என்றும் நூற்றாண்டு கடந்தும் தொடர வேண்டும் என்றும் தோன்றியிருக்க வேண்டும்.”
(2012 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் மோடி உதிர்த்த முத்து)
மனித மலத்தை மனிதன் அகற்றும் அவலம் ஞானத் தால் வந்ததாம். தன்வயப்பட்ட ஆன்மீகச் செயல் பாடாம். ஆனால், ஹிதேஸ் சங்கரைப்போல் இவர், முக லாயர்கள், ஆங்கிலேயர்கள் மீது பழிபோடவில்லை.
சரி இவர்களுக்கெல்லாம் அண்ணன் ‘சர்சங்சாலக்’ மோகன் பகவத் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்:
“நம்மிடையே சமூக ஏற்றத்தாழ்வு இருந்து வரு கிறது என்பது வரலாறு. நாம் சமூக முறைமைகளின் அடிப்படையில் நமது சொந்த மக்களை பிற்படுத்தப் பட்டவர்களாக வைத்திருந்தோம். அவர்கள் விலங்குக ளைப் போல வாழ்வதைப் பற்றி நாம் கவலைப்பட்ட தில்லை. இது குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளாக தொ டர்ந்து கொண்டிருக்கிறது. நம் கண்ணுக்குத் தெரிகி றதோ இல்லையோ பாகுபாடுகள் இருக்கின்றன. இப் பிரச்சினையின்பால் அக்கறையும் நல்லெண்ணமும் தான் இதற்கு ஒரே தீர்வு. 2,000 ஆண்டுகளாக துயரப் பட்ட நமது மக்களுக்காக ஒரு 200 ஆண்டுகள் நாம் துயரங்களை அனுபவிப்பதைப் பற்றி கவலைப்படக் கூடாது. ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள், இணக்கத்திற்கு உதவுவதற்காக பாதிக்கப்பட்ட பகுதி மக்களுடன் மாட்டிறைச்சி உண்பதற்கு பதற்றப்படக் கூடாது.” (2023 செப்டம்பரில் மகாராட்டிரா மாநிலம் நாக்பூர் அக்ரசேனா மாணவர் விடுதியில் பேசியது)
அந்நியர்கள் ஆக்கிரமிப்பதற்கு அய்ந்து நூற்றாண்டு கள் முன்பே நமது மக்களை நாம் கொடுமைக்குள் ளாக்கியிருக்கிறோம் என்று மோகன் பகவத்தே ஒப்புக் கொள்கிறார். ஆனால் நாம் மகிழ்ச்சியடைய முடியுமா?
இவர்களுக்கெல்லாம் குருஜியாக விளங்கக் கூடிய கோல்வால்கர் சிந்தனைக் கொத்து என்கிற அவரது எழுத்துக்களும், பேச்சுக்களும் அடங்கிய நூலில் உப தேசிப்பதைப் பார்க்கலாம்:
“ஜாதிமுறை நமது சமூக வளர்ச்சியை எந்தக் காலத்திலும் பாதித்தது என்று சொல்வதற்கான எதுவும் இல்லை. ஜாதி அமைப்பு முறை நமது சமூகத்தின் ஒற்று மையைப் பாதுகாக்க உதவியிருக்கிறது என்பதே உண்மை.”
அவர், மேலும் “முகமதியர்கள், ஜாதி அமைப்பை அசைத்திருந்த புத்த மதம் பரவியிருந்த வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளை எளிதில் வென்றார்கள். இப்போது காந்தார் என்று அழைக்கப்படும் காந்த கார் முற்றிலும் இசுலாம் மயமானது. ஆனால், ஜாதி அமைப்பு வலுவாக இருந்த டில்லி மற்றும் உத்தரப்பிர தேசத்தில் முகமதியர்கள் ஆண்ட போதும் இந்து மதம் வலுவாகவே உள்ளது.”
“ஜாதிகள் பழங்காலத்திலும் இருந்தன. நமது தேசிய வாழ்வின் பெருமை மிகு ஆயிரக்கணக்கான ஆண்டுக ளாக அவை இருந்து வருகின்றன. சமூக இணக்கத்தில் இணைப்பு சக்தியாக அவை இருந்து வருகிறது.”
கோல்வால்கர் சொல்லும் “இணைப்பு சக்தி” என்பதைத்தான் ஹிதேஸ் சங்கர் சொல்லியிருக்கிறார். ஆனால் ஹிதேஸ் சங்கர் இழிவுகளுக்கும் ஒடுக்கு முறைக்கும் முகலாயர்களும், கிறித்தவ மிஷினரிகளும் காரணம் என்கிறார். ஆனால், இந்தப் பிரச்சினையில் கோல்வால்கர் வேறொரு வழிகாட்டுகிறார். ஜாதி அவசி யம், ஒடுக்குமுறையும் தீண்டாமையும் அவசியம் என்கிறார்.
அப்படி பளிச்சென வெளிப்படையாக சொல்ல முடி யாது என்பதால் மனுவைத் துணைக்கு அழைத்து, அரசமைப்புச் சட்டத்தில் ஒடுக்குமுறை இருக்க வேண்டும் என்கிறார்.
உண்மைக்குப் புறம்பானது
ஆர்.எஸ்.எஸ்.சின் அதிகாரப்பூர்வ பத்திரிகை யான ஆர்கனைசரில் 1949 நவம்பர் 30 இதழில் எழுதி யுள்ள தலையங்கத்தைப் பாருங்கள்:
அதில் “அரசமைப்புச் சட்டத்தில் நமது என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. இன்றைய தினம் மனுவால் உச்சரிக்கப்பட்ட மனுஸ்மிருதி உலகத்தால் உற்சாகமாக வரவேற்கப்படுகிறது. மேலும், அது தன்னியல்பான கீழ்படிதலையும், இணக்கத்தையும் உருவாக்குகிறது” என எழுதுகிறார்.
நால்வருணத்தில் கடைசி வர்ணமான சூத்திரர்க ளுக்கு மனு என்ன விதித்திருக்கிறது? உதாரணத்திற்கு, இரண்டு அம்சங்களை மட்டும் பார்க்கலாம்:
1. சூத்திரர்கள் மேல் வருணத்தவர் பயன்படுத்தி கிழிந்த மற்றும் கழித்துப்போட்ட துணிகளையே உடுத்தவேண்டும். மேலும், மேல்வருணத்தார் சாப்பிட்டு எஞ்சியவற்றையே உண்ண வேண்டும். அதையும் உடைந்த மண் பாண்டங்களில் தான் உண்ண வேண்டும்.
2. சூத்திரர்களின் பெயர் அசிங்கமானதாக இருக்கவேண்டும். (இது இன்றும் நடைமுறையில் இருக்கிறது) மலம், பிச்சைக்காரன், அசிங்கம் என்று பொருள்படும்படியான பெயர்கள் இப்போதும் வழக்கத்தில் இருக்கின்றன.
மனுஸ்மிருதி இரண்டாம் நூற்றாண்டில் தொகுக் கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது இந்தியா வுக்கு முகமதியர்களோ, ஆங்கிலேயர்களோ வந்தி ருக்கவில்லை.
எனவே, ஆர்.எஸ்.எஸ்.சின் ஏடான பாஞ்சஜன்யா குறிப்பிடும் ஜாதி இணைப்புக் கண்ணி; அதை அந்நி யர்கள்தான் வீழ்த்திவிட்டார்கள் என்கிற கூற்று அபத்த மானது; உண்மைக்குப் புறம்பானது.
இப்படி சங்பரிவார் அமைப்புகளும் அதன் வெவ் வேறு தலைவர்களும் அவ்வப்போது ஜாதி குறித்து வேறு, வேறு பொருள் புரிந்து கொள்ளும்படி ஏமாற்றுவதற்காக பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தேர்தல் காலங்களில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் துயரங்களின் மீது கருணை பொங்குவது போன்று நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், இதர நேரத்தில் ஜாதி ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதையும், புகழ்வ தையும் கொண்டாடுவதையும் பார்க்க முடியும்.
2015இல், அரசியலற்றவர்களின் சுயேச்சையான ஒரு கமிசன் அமைத்து இட ஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மோகன் பகவத் பேசினார். 2017இல் மன்மோகன் வைத்யா என்னும் ஆர்.எஸ்.எஸ்.காரர் மறுபரிசீலனையை வலியுறுத்தி தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்டார். ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதே மோகன் பகவத் அரசமை ப்புச் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீட்டை ஆர்.எஸ்.எஸ். எப்போதும் ஆதரித்தே வந்திருக்கிறது, தேவைப் படுகிறவர்களுக்கு தேவைப்படும் வரை இடஒதுக்கீடு நீடிக்க வேண்டும். பாகுபாடுகள் இருக்கும் வரை இட ஒதுக்கீடு நீடிக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
வி.பி.சிங் மண்டல் ஆணைய பரிந்துரைகளை அமல் படுத்த முயன்ற போது ஆர்கனைசர் ஒரு தலையங்கம் எழுதியது. அந்த தலையங்கத்தில் “மண்டல் கமிசன் பரிந்துரைகள் ஒரு ஜாதிப் போரை தூண்டுகிறது. எதிர் நோக்கப்படும் சூத்திரர் புரட்சிக்கு எதிராக ஆன்மீகம் மற்றும் தார்மீக சக்திகள் ஒற்றுமையை கட்ட வேண்டி யது அவசரத் தேவை” என்று எழுதியிருக்கிது.
2014இல் விஜய் சோன்கர் சாஸ்திரி என்கிற ஆர்.எஸ்.எஸ்.காரர் ஜாதி பற்றிய மூன்று புத்தகங்கள் குறித்து எழுதினார். அதை வெளியிட்டவர் மோகன் பகவத். அந்த மூன்றுக்கும் முன்னுரை எழுதியவர் பையா ஜி ஜோஷி என்கிற ஆர்.எஸ்.எஸ்.காரர். மூன்று முன்னுரை களிலும் ஜாதி இழிநிலைக்கு ஆக்கிரமிப்பாளர்கள் தான் காரணம் என்று எழுதியிருக்கிறார்.
கோல்வால்கர் 1960 டிசம்பர் 17 அன்று குஜராத் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் பேசிய பேச்சை ஆர்கனைசர் பத்திரிகை 1961 ஜனவரி 2ஆம் தேதியன்று வெளியிட்டுள்ளது:
“இன்னும் ஒரு துணிச்சலான சட்டத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும். எந்தவொரு ஜாதியைச் சார்ந்த பெண்ணாக இருந்தாலும் அவருடைய முதல் குழந்தை நம்பூதிரி பிராமணருக்கு பிறந்ததாக இருக்க வேண்டும். அதன் பிறகு தான் அவள் தனது கண வரின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். இன்று இந்த சோதனையை பாலியல் வணிகம் என்று சொல்வார்கள். ஆனால், அது பாலியல் வணிகமல்ல! ஏனெனில் அது முதல் குழந்தை பெறுவது சம்பந்தப் பட்டது மட்டுமே.” இதை அவர் சொல்வதற்கான கார ணம் இதர வர்ணங்களில் உள்ளவர்களின் குழந்தை களை அறிவுள்ளவர்களாக மாற்றுவதற்கான உத்தி என்று சொல்கிறார். பிறப்பின் அடிப்படையிலேயே இதர வர்ணத்தாரும், அவர்ணத்தாரும் அறிவில் குறைந்த வர்கள் என்று சொல்வது ஒட்டுமொத்த பெரும்பான்மை மக்களை அவமானப்படுத்தும் செயல் இல்லையா?
எனவே, ஜாதியையும் அதன் காரணமான ஒடுக்கு முறைகளையும் இழிவுகளையும் நியாயப்படுத்துவது ஆர்.எஸ்.எஸ்.சின் நிலைப்பாடு. ஏனெனில் அது சரி, அது கடவுளால் உருவாக்கப்பட்டது என்று அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், அதேசமயம் அரசி யல் ரீதியான நெருக்கடிகள் ஏற்படும் போதெல்லாம் மற்றொரு குரலில் பேசி மக்களை ஏமாற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதன் ஒரு பகுதி தான் பாஞ்சஜன்யாவின் கட்டுரை.
2020ஆம் ஆண்டு பன்வார் மெஹ்வான்சி என்பவர் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். 13 வயதில் ஆர்.எஸ். எஸ்.சில் இணைந்து 40 ஆண்டு காலம் அந்த அமைப்பு சொன்னதை கேட்டிருக்கிறார். அவருடைய அனுப வங்களின் அடிப்படையில் ஒரு புத்தகத்தை எழுதி யுள்ளார். அந்த புத்தகத்தின் தலைப்பு “நான் ஒரு இந்து வாக இருக்க முடியாது: ஆர்.எஸ்.எஸ்.சில் தலித்துக ளின் நிலை”. நேரடியாக அனுபவித்து ஜாதி குறித்து ஆர்.எஸ்.எஸ். பற்றி அவர் எழுதியுள்ளதை விட வேறென்ன சொல்லிவிட முடியும்.?
நன்றி: தீக்கதிர், 17.8.2024