‘விஜயபாரத’த்துக்குப் பதில் இறைபக்தி இல்லாவிட்டால் காமத்திலும், பணத்தாசையிலும்தான் அவன் நோட்டம் போகுமாம்!

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கேள்வி: அறிஞன் எவ்வாறு இருக்கவேண்டும்?

பதில்: ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படிக்கலாம். இறைவனிடம் பக்தி இல்லாவிட்டால், எல்லாம் வீண். விவேக வைராக்கியம் இல்லாத வெறும் பண்டிதன் என்றால், அவரது நோட்டம் எல்லாம் காமத்திலும், பணத்தாசையிலும் தான் இருக்கும். கழுகு மிக உயரத்தில் பறக்கும்; ஆனால், அதன் பார்வை பிணங்களின் மீதுதான் இருக்கும்.

‘விஜயபாரதம்’,

ஆர்.எஸ்.எஸ். வார இதழ்
16.8.2024, பக்கம் 35

இறைவன் என்ற ஒன்று உண்டா? என்பது முதற்கேள்வி. அந்தக் கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.
உலகம் உண்டானதற்குக் காரணம் கடவுள் என்று சமாதானம் கூறுவார்கள். ஒரு பொருள் என்று இருந்தால், அதனைப் படைத்தவன் என்ற ஒன்று இருக்கவேண்டும் அல்லவா என்று அதிபுத்திசாலிகள் போல பதில் சொல்லுவார்கள்.

‘பெருவெடிப்புக் கோட்பாடு‘ என்ற ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்த பிறகு, (1370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருள்களின் ஆற்றலும் ஓர் அணுவைவிட தீவிரமாக இருந்தன என்று கூறப்படுகிறது) உலகைக் கடவுள் படைத்தான் என்ற மூடக் கதை முடிவுக்கு வந்தது.

இறைவன் அய்ம்புலனுக்குப் புலப்படாதவன். உருவமற்ற அரூபி என்று ஆஸ்திக சிரோன்மணிகளே கூறுவதுண்டு.

அப்படி இருக்கும்போது பிரம்மா, சிவன், விஷ்ணு இவர்களுக்கு மனைவிகள், குழந்தைக் குட்டிகள் எங்கிருந்து உருவங்களாக வந்தன?
செம்பிலும், கல்லிலும், அய்ம்பொன்னிலும் கற்பனைக்கு எட்டிய வகையில் மானாவாரியாக உருவங்களை வடித்து இவை குடியிருக்கக் கோவில்களைக் கட்டி, இந்த உருவங்களை, கோவிலுக்குள் கர்ப்பக்கிரகம் என்ற ஓர் அறையை ஏற்படுத்தி, அதற்குள் வைத்து, அந்தக் கர்ப்பக்கிரகத்திற்குள் இருந்து அந்த சிலைகளுக்குப் பூஜை செய்ய, எங்களுக்கு மட்டுமே தான் தனி உரிமை உண்டு என்று, அப்படிப் பூஜை செய்யும் அதிகாரம் குறிப்பிட்ட எங்களுக்கே உண்டு என்று சொல்லி, பக்திப் போதையில் உருண்டு கிடக்கும் மக்களை தட்சணை, நேர்த்திக் கடன் என்று சொல்லி சுரண்டுவதுதான் இறைப்பக்தி என்று சொல்ல வருகிறதா ஆர்.எஸ்.எஸின் விஜயபாரதம்?

கர்ம பலன், தலையெழுத்து, விதிப் பலன் என்று ஒரு பக்கத்தில் சொல்லிவிட்டு, இறைவனிடம் பக்தி செலுத்தவேண்டும் என்று கூறுவது நகை முரண் அல்லவா?

கடவுளை நம்புதல், மறுத்தல் என்பது கர்ம பலனைப் பொறுத்தது என்று சொல்ல வேண்டியதுதானே!
மக்களைப் படைத்ததாக இறைவன் தலைமீது கட்டி விட்டு, ஒருவனை நல்லவனாகவும், கெட்டவனாகவும் ஆக்குவது என்பதற்கான பொறுப்பாளி இறைவன் என்று சொல்லுவதற்குச் சராசரி புத்தியிருந்தாலே போதுமே!

இறைவனிடம் பக்தி செலுத்தினால் பலன் உண்டு என்றால், இறைவன் தற்பெருமைக்காரனா?

இறைவனிடம் பக்தி இல்லாவிட்டால், காமத்திலும், பணத்தாசையிலும்தான் அவன் நோட்டம் இருக்கும் என்றால், காஞ்சி காமகோடியாக இருந்த ஜெயேந்திர சரஸ்வதி, காஞ்சி மடத்திற்கு வந்த எழுத்தாளர் அனுராதா ரமணனின் கையைப் பிடித்து இழுத்தாரே – அது எப்படி? (அனுராதா ரமணன் புலம்பி அழுதது – தொலைக்காட்சிகளில் எல்லாம் ஒளிபரப்பானதே!)
காமகோடியான சங்கராச்சாரியாருக்கு இல்லாத இறைபக்தியா?

அருணகிரி நாதர் யோக்கியதை என்ன? கிருஷ்ண பரமாத்மாவின் லீலைகள்பற்றி விரிவாகப் பேசலாமா?
எங்கே சுற்றினாலும் இடிக்கிறதே! ஆர்.எஸ்.எஸின் ‘விஜயபாரதம்‘ பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்!

– கருஞ்சட்டை –

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *