பாஜக ஆதரவு தொலைக்காட்சியான மலையாள ‘ஜனம் தொலைக்காட்சி’, சுதந்திர நாளை முன்னிட்டு தங்கள் சமூக ஊடக பக்கத்தில் ஒரு ஊடக விளம்பரத்தை வெளியிட்டிருந்தது.
அதில் பல்வேறு தலைவர்கள் இருந்த நிலையில், காந்தியாரும் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவரது தலையில் துப்பாக்கி வைக்கப் பட்டிருந்ததுபோல் ஊடக விளம்பரத்தில் படம் இடம்பெற்றிருந்தது. அதாவது அவரது அருகில் இருந்த சந்திரசேகர ஆசாத் என்ற சுதந்திர போராட்ட வீரர், காந்தியார் தலையில் துப்பாக்கியை வைத்திருப்பதுபோல் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் வெளியான சில மணித் துளிகளிலேயே சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்தனர். ஏனெனில் பாஜகவுக்கு காந்தியார் என்றால் ஆகவே ஆகாது.
காந்தியாரை சுட்ட கோட்சேவை பாஜகவினர் கொண்டாடி வரும் நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் பாஜக தொலைக்காட்சி இப்படி ஒரு ஊடக விளம்பரத்தை வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு இடையே அரசியல் ரீதியாக பல்வேறு கருத்துகள் இருந்தாலும், நாட்டுக்காக போராடிய தலைவர்களை யார், எந்தக் கட்சி என்று பாராமல் அனைத்து கட்சிகளும் கொண்டாடி வரும் நிலையில், பாஜக தொலைக்காட்சி இப்படி செய்தது கண்டனங்களை எழுப்பியுள்ளது.
கடந்த 14-7.2024 அன்றிரவு 7.30-க்கு மேல் அந்த பதிவு வெளியான நிலையில், இதற்குக் கண்டனங்கள் எழுந்தது. இதையடுத்து அந்த பதிவை நீக்கிய ஜனம் தொலைக்காட்சி, அதற்கு பதிலாக வேறு ஊடக விளம்பரத்தை தயார் செய்து வெளியிட்டுள்ளது. மேலும் அந்த ஊடக விளம்பரத்தில் பிரிட்டிஷாரிடம் அடிபணிந்து செயல்பட்ட சாவர்க்கர் படம் இடம் பெற்றிருந்ததோடு, நேரு உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் ஒளிப்படமும் வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளதற்கு தற்போது கடும் கண்டனம் குவிந்து வருகிறது.