சமஸ்கிருதத்துக்கு ரூ.2869 கோடி தமிழுக்கு வெறும் ரூ.100 கோடியா?

viduthalai
4 Min Read

ஒன்றிய பாஜக அரசு தொடர்ச்சியாக தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.. ரயில்வே நிதி, வெள்ள நிவாரண நிதி, வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி, மெட்ரோ ரயில் திட்ட நிதி என எதற்கும் தமிழ்நாட்டுக்கு நிதியை ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. தேவையான நிதிகளைகூட வழங்காமல் ஏதோ தமிழ்நாட்டினர் அந்நியர்கள் என்ற அளவில்தான் ஒன்றிய அரசு வைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை புறந்தள்ளி வைத்திருப்பதுதான். எதிர்க்கட்சியினர் ஆளும் மாநிலமாக இருப்பதால் தமிழ்நாட்டுக்கு எதுவுமே செய்யக்கூடாது என்ற மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலின்போது தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்து தமிழர்கள் மீது பாசம் கொண்டவர்போல பிரதமர் காட்டிக்கொண்டார். ஆனால் அவர்கள் நினைத்தது எதுவும் நடக்காததால், தற்போது தமிழ்நாட்டில் நடைபெறும் திட்டப்பணிகளுக்கு ஒதுக்கிய நிதியைக்கூட குறைத்திருப்பது தெரியவந்துள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் அடிக்கடி வந்து ஒரு திருக்குறளை சொல்லியும், உலகின் மூத்த மொழி தமிழ் என்று பெருமை பேசிக் கொண்டும் தமிழ் மொழிக்காக அத்தனையும் செய்பவர்போல காட்டிக்கொண்டார் பிரதமர் மோடி. ஆனால் தற்போது அந்த தமிழ்மொழிக்கு குறைந்த அளவில்தான் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கி இருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி குறித்து கோவையை சேர்ந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் வே.ஈஸ்வரன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் (ஆர்டிஅய்) தகவல்கள் கேட்டிருந்தார். அதற்கு ஆர்டிஅய் தந்துள்ள பதில் அதிர்ச்சியளித்து உள்ளது. 24 ஆயிரம் பேர் தாய் மொழியாய் பேசும் சமஸ்கிருதத்துக்கு மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.2,869 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 8 கோடி பேர் தாய் மொழியாய் பேசும் தமிழுக்கு வெறும் ரூ.100 கோடி மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது.

அதன் விவரம் வருமாறு: இந்தியாவில் மொழிகளின் வளர்ச்சிக்காக முதன் முதலில் ஒன்றிய அரசால் ஏற்படுத்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் டில்லியில் உள்ள மத்திய ஹிந்தி இயக்குநரகம் மற்றும் ஆக்ராவில் உள்ள மத்திய ஹிந்தி கல்வி நிறுவனம் ஆகியவையாகும். இவை இரண்டும் 1960ஆம் ஆண்டு தொடங்கப்பட்டவையாகும். ஒருகாலகட்டத்தில் ஒன்றிய அரசு இந்தியா முழுவதும் ஹிந்தியை மிக தீவிரமாக திணித்தபோதும், இந்த நிறுவனங்களின் வளர்ச்சி பெரிய அளவில் இல்லை. இந்தியாவில் ஹிந்தியை தாய்மொழியாக பேசக்கூடியவர்கள் 52 கோடி பேர் (அதிலும் பல பிரிவுகள்). கடந்த 10 ஆண்டுகளில் இந்த ஹிந்தி மொழி வளர்ச்சி கல்வி நிறுவனங்கள் இரண்டுக்கும் சேர்த்து ஒன்றிய அரசு ஹிந்தி வளர்ச்சிக்காக செலவிட்ட தொகை ரூ.646 கோடி மட்டுமே.

இந்தியாவில் உருது மொழி பேசுகின்ற மக்கள் 5 கோடி பேர் இருக்கிறார்கள். இந்த மொழியின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்ட நிறுவனம் தேசிய உருது மொழி வளர்ச்சி நிறுவனம்; இந்த நிறுவனம் 1996ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்காக கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு செலவிட்ட தொகை ரூ.777 கோடியாகும். இந்தியாவில் 20 லட்சம் மக்களால் பேசப்படுகின்ற சிந்திமொழி வளர்ச்சிக்காக 1994ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய சிந்தி மொழி வளர்ச்சி நிறுவனத்திற்காக கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு செலவிட்ட தொகை ரூ.40 கோடியாகும்.

தமிழ், ஹிந்தி, சிந்தி, உருது, சமஸ்கிருதம் தவிர்த்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா, மராத்தி, பெங்காலி உள்ளிட்ட அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்காக செயல்படும் ஒன்றிய அரசின் ஒரே நிறுவனம் மைசூரில் உள்ள மத்திய இந்திய மொழிகளின் கல்வி நிறுவனம் ஆகும். இதற்கு இந்தியா முழுவதும் பல இடங்களில் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனம் 1969ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு முன்பே இது தொடங்கப்பட்டதாகும். இந்தியா முழுவதும் 70 கோடிக்கு மேல் தாய் மொழியாக கொண்டுள்ள மற்ற அனைத்து மொழிகளுக்கும் சேர்த்து கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு செலவிட்ட தொகை ரூ.275 கோடி.

இந்தியாவில் சமஸ்கிருதத்தை தாய்மொழியாக கொண்ட மக்கள் 24 ஆயிரத்து 821 பேர் மட்டுமே என புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
அதுவும் அவர்களது தொடர்பு மொழி அல்ல, அவர்கள் தங்கள் தாய்மொழி சமஸ்கிருதம் என்று கூறினாலும் வீட்டில் கன்னடம், மராட்டி தான் பேசுகிறார்கள்

சமஸ்கிருதம் இந்தியாவின் எந்த மாநிலத்தின் மொழியும் அல்ல. ஆனால் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு செலவிட்ட தொகை ரூ.2,869 கோடி. இதன்மூலம் மொழிகள் வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு ஒதுக்கும் நிதி பாரபட்சமாக உள்ளது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இந்தியாவில் சமஸ்கிருதம் தாய்மொழியாக கொண்ட ஒரு நபருக்கு சராசரியாக ரூ.11 லட்சம் செலவிடப்படுகிறது. ஆனால் மற்ற மொழிகளை தாய்மொழியாக கொண்ட மக்களுக்கு ஒரு நபருக்கு ரூ.13.50 மட்டுமே செலவிடப்படுகிறது. தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளுக்கு மிக மிக குறைவான நிதியே ஒதுக்கப்படுகிறது.

இந்திய அரசு அனைத்து இந்திய மொழிகளுக்கும் செலவிடுகின்ற தொகையில் 61 சதவீதம் சமஸ்கிருத மொழிக்கு மட்டுமே செலவிடுகிறது என்பதை இந்த தகவல் அறியும் உரிமை சட்ட தகவல்கள் மூலம் தெரியவந்திருக்கிறது.

இந்தியாவின் மொழிப் பிரச்சினைக்கு ஒரே தீர்வு சமஸ்கிருதம்தான் என்றார் ஆர்.எஸ்.எஸின் குருநாதர் எம்.எஸ். கோல்வால்கர்.
இப்பொழுது ஒன்றிய பிஜேபி அரசின் கொள்கையும் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பதுதான்.
24 ஆயிரம் பேர்கள் மட்டுமே பேசப்படுவதாகக் கூறப்படும் சமஸ்கிருதத்துக்குக் கோடிக்கணக்கில் செலவிடப்பட்டிருப்பது. இந்த ஆர்.எஸ்.எஸ். ஸநாதனப் பார்ப்பன நோக்கத்தில்தான்.

பார்ப்பனரல்லாதாரே புரிந்து கொள்வீர்! பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனீய சக்திகளின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டு தக்கப் பாடம் கற்பிப்பீர்!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *