இன்னும் மேலே பறந்திடுங்கள்-வானம்கூட உங்களுக்கு எல்லையில்லை
பட்டமளிப்பு விழாவில் கனிமொழி கருணாநிதி எம்.பி. உரை!
சென்னை, ஆக. 16- சென்னை நுங்கம்பாக்கம் லயோலா இன்ஸ் டிட்யூட் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் நடத்தும் மாற்று பாலினத்தாருக்கான மினி – எம்.பி.ஏ. திட்டத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டங்களை தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி 14.8.2024 அன்று வழங்கினார்.
இவ்விழாவில் கனிமொழி கருணாநிதி பேசியதாவது:-
“தொடர்ந்து திருநர் – திருங்கைகளோடு பயணிக்கக் கூடியவராக இருந்திருக்கிறேன் என்பதை குறிப்பிட்டுச் சொன்னார்கள். இந்த பயணம் என்பது நமக்கு பல விஷயங்களை சொல்லித் தருகிற ஒன்று,
ஒரு காலத்தில் ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றால் அப்படியே கிளம்பிப் போவோம். அப்போது நிகழ்ச்சிகளுக்கு வரும் மாற்றுப் பாலினத்தவர்கள், ‘நல்லா டிரஸ் பண்ணிக்கிட்டு வந்தா என்ன?’ என்று கேட்பார்கள். ‘ஏன் இது போதாதா?’ என்று கேட்டால், ‘பெண்ணாக இருப்பதை உங்களுக்கு கொண்டாடத் தெரியவில்லை. அதை நீங்கள் பெரிதாகவே மதிக்க மாட்டேன் என்கிறீர்கள்’ என்று சொல்லுவார்கள்.
அப்போதுதான் எனக்கு ஒரு முக்கிய்மான விஷயம் புரிந்தது. நான் ஒரு பெண்ணாக பிறந்தேன். பெண்ணாகவே வளர்ந்தேன். ஆனால் அவர்கள் ஒரு பெண்ணாகவோ ஆணாகவோ ஆவதற்கு போராடுகிறார்கள், சண்டை செய்து வருகிறார்கள்.
அதனால் நம் அத்தனை பேரையும் விட அதை கொண்டாடும் உரிமை தகுதி அவர்களுக்கு நிறைய இருக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு காலகட்டத்தில் மாற்றுப் பாலினத்தவர் என்பவர்கள் இந்த சமுதாயத்தால் அங்கீகரிப்படாதவர்களாக இருந்தார்கள்.
பாஸ்போர்ட் வாங்க முடியாது, கல்லூரிகளில் சேர முடியாது. எந்த அரசு அங்கீகாரமுமே இருக்காது. அவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கான எந்த அங்கீகாரமும் கிடையாது. ஒருவர் தன்னை ஆணாகவோ, பெண்ணாகவோ உணர்ந்து அதற்கான ஆபரேஷன் பண்ணிக்கணும்னா, மருத்துவர்கள் அதற்கு முன் வர மாட்டார்கள். யாரும் உதவ முன் வர மாட்டார்கள்.
சமுதாயம் அவர்கள்மீது கொடூரமான வன்முறையை ஏவிவிடும் நிலைமை இருந்திருக்கிறது.
சுதா கூட என்னிடம் பல முறை வந்து, தன் உயிரை பணயம் வைத்து சில அறுவை சிகிச்சைகளை செய்துகொள்ள வேண்டியிருந்தது என என்னிடம் சொல்லியிருக்கிறார்.
பெற்றோர்கள் தங்கள் மகன், மகள் என நினைத்துக் கொண்டிருந்தவர்கள் ஒரு கட்டத்தில் நான் பெண்ணாக, ஆணாக இருக்க விரும்பு கிறேன் என்று சொல்லும்போது வீட்டை விட்டே விரட்டப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. அந்த சின்ன வயதில் வேலைக்கு போகவோ, சம்பாதிக்கவோ, தன்னை பாதுகாக்கவோ முடியாத சூழலில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
டான்சர் நர்த்தகி அவர்களை பிபிசி பேட்டி கண்டபோது, ‘நீங்கள் டான்சராக இல்லாவிட்டால் வேறு என்னவாக இருந்திருப்பீர்கள்?’ என்று கேட்டபோது… ‘நான் டான்சராக இல்லையென்றால் செக்ஸ் ஒர்க்கராக இருந்திருப்பேன். இல்லையென்றால் தெருவிலே பிச்சையெடுத்துக் கொண்டிருந்திருப்பேன்’ என்று சொன்னார். இதுதான் நிதர்சனம். இதைத் தாண்டி வேறு சாய்ஸ் இல்லை என்ற நிலை இருந்தது.
கேள்விக்குறியோடு
முற்றுப்புள்ளியாகும் சூழல்!
ஒருமுறை சுதா மற்றும் சிலர் என்னை சந்தித்து, ‘இவ்வளவு கஷ்டங்களைத் தாண்டி சிலர் பள்ளிப் படிப்பு முடித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கல்லூரி படிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். ஆனால் அங்கே ஆணா, பெண்ணா என்று கேட்கிறார்கள். என்ன பதில் சொல்வது? அவர்கள் வாழ்க்கையே கேள்விக்குறியோடு முற்றுப்புள்ளியாகும் சூழல் இருக்கிறது’ என்று என்னிடம் சொன்னார்கள்.
நாங்கள் எல்லாம் சேர்ந்து, தலைமைச் செயலகம் போகிறோம். முதலமைச்சரை சந்திக்க அல்ல… உயர் கல்வித்துறை அமைச்சரை சந்திக்க அங்கே சென்றோம். அப்போது தலைவர் கலைஞர்தான் முதலமைச்சராக இருக்கிறார். அவர் இறங்கி போர்டிகோவுக்கு வருகிறார்.
அப்போது முதலமைச்சர் கலைஞர் என்னைப் பார்த்துவிட்டுக் கூப்பிட்டார்.
‘என்ன இங்க நின்னுக்கிட்டிருக்கே? என்னைப் பாக்குறதுக்கா?’ என்று கேட்டார்.
நான், ‘இல்லல்ல… உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை பாக்கறதுக்காக வந்தோம்’ என சொன்னோம். சரி என்று சொல்லி அவர் வீட்டுக்குப் போய்விட்டார்.
அதன் பின் நாங்கள் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை சந்தித்தோம். சுதா தான் உயர் கல்வி அமைச்சரிடம் இந்த விஷயங்களை எடுத்துச் சொன்னார். ‘நிச்சயமாக இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்கிறோம்’ என்று அமைச்சர் கூறினார்.
அதன் பின் நானும் வீட்டுக்குக் கிளம்பிவிட்டேன். பொதுவாக மதியம் சாப்பிட்டு விட்டு ஒரு மணி நேரமாகவாவது தூங்கக் கூடிய எனது அப்பா எனக்காக காத்திருந்தார்.
நான் வீட்டுக்குப் போனதும் என்னைக் கூப்பிட்டு, ‘என்ன பிரச்சினை? எதுக்காக அவங்களை அழைச்சிட்டு தலைமைச் செயலகம் வந்திருந்தே?’என்று கேட்டார்.
மாற்றுப் பாலினத்தவர் எவ்வளவு போராட்டங்களைத் தாண்டி அவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதையும், தன்னுடைய அடையாளத்தை அடைய போராடுகிறார்கள், வாழ்வதற்கே அவர்கள் போராடுகிறார்கள் என்பதையெல்லாம் தலைவர் கலைஞரிடம் சொன்னேன்.’
அடுத்த நொடியே அவர்களுக்கான அங்கீகாரம், கல்வி, அவர்களுக்கான மருத்துவ அறுவை சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளில் செய்வதற்கான ஏற்பாடுகள், ரேஷன் கார்டில் அவர்களை சேர்த்தல் என அத்தனை விஷயங்களையும் செய்து தந்தார் தலைவர் கலைஞர்.
மனித நேயத்தை
சொல்லித் தந்த பெரியார்!
மனித நேயத்தை சொல்லித் தந்த தந்தை பெரியார் அவர்களின் வழியில் வந்த ஆட்சி அதே பாதையில் இன்றுவரை தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறது.
நம்முடைய முதலமைச்சர் அண்ணன் தளபதி மாற்றுப்பாலினத்தாரின் கல்விக்காக 2 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார். அவர்களின் கல்லூரி கட்டணம், விடுதிக் கட்டணம் எல்லாவற்றையும் உறுதி செய்திருக்கிறார்கள்.
நீங்கள் ஒவ்வொரு நாளும் வாழ்வதற்கு எவ்வளவு போராட்டங்களைக் கடந்து வருகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். அதனால் இந்த கல்வி என்பது உங்கள் மீது உங்களுக்கே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும். யார் என்ன சொன்னாலும் நம்மால் இந்த சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நிற்க முடியும் என்ற நம்பிக்கையை உண்டாக்குவது கல்வி. அதனால் அரசாங்கமும் இருக்கிறது. தீபா போன்ற அமைப்புகளும் இருக்கின்றன.
அதனால் இதுபோன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு, உயரப் பறந்திடுங்கள். மாற்றுப் பாலினத்தாருக்கு மட்டுமல்ல அனைத்து மாணவர்களுக்கும் நீங்கள் இன்ஸ்பிரேஷனாக மாற முடியும். தனது கனவு என்ன, தனது அடையாளம் என்ன என்பதை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தைப் பெறுங்கள்.
இன்னும் இன்னும் உயரே பறந்திடுங்கள். வானம் கூட உங்களுக்கு எல்லை இல்லை. வாழ்த்துகள்”.
-இவ்வாறு கனிமொழி கருணாநிதி பேசினார்.