அத்திக்கடவு – அவிநாசி திட்டம்

2 Min Read

திருப்பூர், ஆக.16 நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்களின் முன்னோடி அத்திக்கடவு- அவி நாசி திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை (17.8.2024) துவக்கி வைக்கிறார்.
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 1,045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பி, அதன் மூலமாக நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது மற்றும் விவசாயம், குடிநீர் உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றுவதற்காக தொடங்கப் பட்டது தான் அத்திக்கடவு – அவிநாசி திட்டம். 60 ஆண்டு கால கோரிக்கையை நிறை வேற்ற வலியுறுத்தி, 2016 ஆம் ஆண்டு அவிநாசியில் பலரும் தொடர் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்றைய மேனாள் முதல மைச்சர் ஜெயலலிதா, ஆய்வு பணிகளுக்கான ஆரம்ப கட்ட நிதியாக ரூ.3.27 கோடியை ஒதுக்கினார். அவிநாசியில் 2017 ஆம் ஆண்டு ஒரு நாள் மாபெரும் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது. பின்னர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, 2018 ஆம் ஆண்டு ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டு அத்திக்கடவு –-அவிநாசி திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. ஈரோடு, காளிங்கராயன் அணைகட்டில் இருந்து 1,065 கி.மீட்டருக்கு ராட்சத குழாய் வாயிலாக, நீரை பம்பிங் செய்து எடுத்துச் சென்று, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் மீண்டும் பவானி ஆற்றில் விடும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் 1.50 டி.எம்.சி நீர், குழாயில் எடுத்து செல்லப்படவுள்ளது. இதற்காக, பவானி, நல்லக்கவுண்டன் பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னுார் ஆகிய 6 இடங்களில் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்காக மேனாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அவிநாசிக்கு நேரில் வந்து அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்தன. 2021இல் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், அத்திக்கடவு – அவிநாசி திட்டப் பணிகள் தொடர்ந்து வந்தன. நிலம் கையகப்படுத்தலில் சில தாமதங்கள் காரணமாக திட்டம் தொடங்குவது தாமதமாகிக்கொண்டே சென்றது.பணிகள் முடிந்தும், போதுமான அளவு தண்ணீர் இல்லை. இருப்பு உள்ள தண்ணீரை வைத்து இந்த திட்டத்தைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வர முடியாது. கீழ்பவானி கால்வாயில் ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் பாசனத்திற்குத் திறக்கப்பட்ட பிறகு உபரி நீரைக் கொண்டு அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நீண்டகால இழுபறிக்குப் பிறகு அத்திக்கடவு –அவிநாசி – திட்டம் தொடங்கப்பட உள்ளது. நாளை ஆகஸ்ட் 17 ஆம் தேதி, இத்திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அர்ப்பணிக்க உள்ளார். சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை தொடங்க உள்ளதாக அமைச்சர் முத்து சாமி தெரிவித்துள்ளார்.மேலும் அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தில் 1,045 குளங்களுக்கு நீர் கொடுப்பதை உறுதி செய்துள்ளோம் என்று கூறிய அவர், ஆங்காங்கே உள்ள பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டு குளங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும் என தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *