தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரை
புதுடில்லி, ஆக.16 பயிற்சி மருத்துவர்களுக்கு வாரத்துக்கு 74மணி நேரத்துக்கு மேல் பணி வழங்கக்கூடாது என்றும். வாரம் ஒருநாள் விடு முறை கட்டாயம் வழங்க வேண்டும் எனவும் தேசிய மருத்துவக் கமிஷன் பணிக்குழு பரிந்துரைத்து இருக்கிறது.
பயிற்சி மருத்துவர்களின் பணிச்சூழல், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் உள்ளிட்டவற்றை வற்றை ஆய்வு செய்ய தேசிய மருத்துவ ஆணையம், பணிக்குழு ஒன்றை அமைத்து இருந்தது.
‘மருத்துவ மாணவர்களுக்கான மனநலம் மற்றும் நல் வாழ்வுக்கான பணிக்குழு என்ற அந்த குழுவினர் தங்கள் அறிக்கையை அளித்துள்ளனர். இதில் பல்வேறு அம்சங்களை சுட்டிக்காட்டி பரிந்துரைகள் வழங்கப்பட்டு உள்ளன.
அதில் முக்கியமாக, பயிற்சி மருத்துவர்களுக்கு வாரத்தில் 74 மணி நேரத்துக்கு மேல் பணி வழங்கக்கூடாது எனவும், வாரத்துக்கு ஒருநாள் கட்டாயம் விடுமுறை அளிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
பணிச்சுமை அதிகமாக இருந்தால், மருத்துவமனை அல்லது மருத்துவக்கல்லூரிகள் கூடுதல் மருத்துவ அதிகாரிகளை நிய மிக்க வேண்டும். இந்த முதுநிலை மருத்துவ மாணவர்களின் உடல் மற்றும் நல நலனுக்காக தினமும் 7 முதல் 8 மணி நேர தூக்கம் உறுதிசெய்யப்படவேண்டும். விடுப்பு கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்ட வேண்டும். காரணமின்றி விடுப்பு மறுத்தல் கூடாது.
ராகிங் பிரச்சினைகளை கட்டுப்படுத்த தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். மருத்துவக்கல்லூரிகளில் ராகிங் தடுப்புப் பிரிவுகள் நிச்சயம் இருக்க வேண்டும். இளநிலை மற்றும் முது நிலை மருத்துவ மாணவர்களுக்கு சுழற்சி முறையில் ஆண்டுக்கு ஒருமுறையாவது 10 நாள் விடுமுறை அளிப்பது குறித்து மருத்துவக்கல்லூரிகள் பரிசீலிக்கலாம். இதன் மூலம் தங்கள் குடும்பத்துடன் அவர்களது பிணைப்பை அதிகரிக்கும்.
பணியிடங்களில் பயிற்சி மருத்துவர்களுக்கு வசதியான ஓய்வு அறைகள், சத்தான உணவுகள், நீர்ச்சத்து வசதிகள் இருக்க வேண்டும். அவர்களுக்கு மருத்துவமனைகள் வழக்கமான இடை வேளைகளை வழங்கவேண்டும் விரிவுரைகள், பயிலரங்குகள் மற்றும் கருத்தரங்குகள்மூலம் மனநலக் கல்வியை இளங்கலை மற்றும் முதுகலை பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும். மருத்துவ ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நிர்வா கம் ஆகியோர் நேரடி அமர்வுகள் அல்லது இணைய வழி மூலம் அவ்வப்போது மனநலம் குறித்த வழக்கமான பயிற்சியைப் பெற வேண்டும். மேற்கண்ட பரிந்துரைகள் அந்தப் பணிக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.